ஷைத்தானால் எந்த அளவிற்கு தீங்கு செய்ய முடியும்?
தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும்.
அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்குக் கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.
மனிதன் தான் ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக் கட்டாயமாக, அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை.
அதுபோன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்ய விடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான்.
இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.
தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
(அல்குர்ஆன் 4:119)
அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.
(அல்குர்ஆன் 2:169)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
(அல்குர்ஆன் 114:5)
ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவருக்கும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தித் தான் ஷைத்தான் வழிகெடுத்தான்.
அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை என்று கூறினான்.
(அல்குர்ஆன் 7:20)
நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ஷைத்தான் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அப்படியென்றால் ஷைத்தானை விரட்டுவதாகக் கூறும் போலி ஆன்மீகவாதிகள் அனைத்து மக்களுக்கும் ஓதிப் பார்த்து அவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவார்களா?
நபிமார்களுக்கு ஷைத்தான் இடைஞ்சல் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைக்கு இவர்களுக்கு ஷைத்தானை விரட்டத் தெரிந்த யுக்தி நபிமார்களுக்கு ஏன் தெரியவில்லை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம்.
(அல்குர்ஆன் 6:112)
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.
(அல்குர்ஆன் 22:52)
—————————-
ஏகத்துவம்