அனைத்தும் அற்ப சுகம்(உலக வாழ்க்கை)
பூமியில் நாம் சந்தோசமாக வாழ்வதற்கு ஏராளமான இன்பங்களை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அவன் அளித்த அறிவைக் கொண்டு மனிதனும் செயற்கையாகப் பல்வேறு கேளிக்கைகளை, பொழுதுபோக்குகளை உருவாக்கியுள்ளான்.
இவ்வகையில், எத்தனை விதமான சுகபோகங்கள் இங்கு இருந்தாலும் மறுமை வாழ்க்கையோடு ஒப்பிடும் போது அவை அனைத்தும் அற்பத்திலும் அற்பமானதாகும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்! என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
(திருக்குர்ஆன் 9:38)
தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.
(திருக்குர் ஆன் 13:26)
இது ஒரு சோதனைக் களம்
——————————————-
மறுமை வாழ்க்கை இரு பிரிவைக் கொண்டது. ஒன்று சொர்க்கம். மற்றொன்று நரகம். அவ்வாறான சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் தகுதியானவர்கள் யார் யாரென்று சோதிப்பதற்காகவே உலக வாழ்வு தரப்பட்டுள்ளது.
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
(திருக்குர்ஆன் 67:2)
உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்? என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.
(திருக்குர் ஆன் 11:7)
அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
(திருக்குர் ஆன் 18:7)
——————-
ஏகத்துவம்