நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா

எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன். இந்த ஸ்ப்ரே நேராக நுரையீரலுக்குச் செல்லும். நோன்பு இருக்கும் போது இதை நான் உபயோகிக்கலாமா ? இதனால் நோன்பு முறிந்துவிடுமா?

பயன்படுத்தலாம்

நோன்பாளிகள் சுபுஹ் முதல் மக்ரிப் வரை உண்ணாமலும்,, பருகாமலும் இல்லறத்தில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவோ, அறிவீனமான செயல்களில் ஈடுபடவோ வேண்டாம் யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!’ (என்று அல்லாஹ் கூறுகிறான்)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1894

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பயன்படுத்துகின்ற மருந்து நிரப்பப்பட்ட குப்பிகள் அவர்களின் மூச்சி இறைப்பை சமநிலை செய்வதற்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு உணவாகவோ, பானமாகவோ அமைவதில்லை.

நோன்பு நோற்ற நிலையில் நாம் மூச்சு விட்டு இழுக்கும்போது காற்றில் கலந்துள்ள பல பொருட்களையும் சேர்த்து உள்ளிழுக்கிறோம். மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது அதில் உள்ள நச்சுப்பொருள்களயும் சேர்த்தே நாம் உள்ளிழுக்கிறோம். இதனால் நமது நோன்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

இது போன்று தான் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு வாயு வடிவிலான மருந்தை உள்ளே செலுத்துவதற்காக மருந்துக் குப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது உண்ணுவதிலோ, பருகுவதிலோ சேராது.

ஆனால் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினால் உயிருக்கு ஆபத்து, அல்லது உடல்நிலை மோசமாகும் நிலை ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விட்டு நோய் தீர்ந்த பின் வசதியான நாட்களில் விடுபட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம்.


ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *