குர்ஆனில் 15 ஸஜ்தாக்கலா ?

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக் காண்பித்தார்கள் என்றும், அவற்றில் (காஃப் அத்தியாயத்தி­ருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும், சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும்” என்று அம்ர் பின் அல்ஆஸ் (ரலி­) அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் 1193வது ஹதீஸாகவும்

இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் மேற்கண்ட 15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல! இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ் பின் ஸயீத் என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். அதனால் குர்ஆனில் 15 ஸஜ்தா வசனங்கள் என்ற கருத்து ஆதாரமற்றதாக ஆகி விடுகின்றது.
”நான் நபி (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். ஆனால் முஃபஸ்ஸலான அத்தியாயங் களி­ருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை. அல்அஃராஃப், ரஃது, நஹ்ல், பனீ இஸ்ராயீல், மர்யம், ஹஜ், ஃபுர்கான், நம்ல், ஸஜ்தா, ஸாத், ஹாமீம் ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்” என்று அபூ தர்தா (ர­) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் 1046 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனில் 11 ஸஜ்தா வசனங்கள் என்று கூறுவோரும் உள்ளனர். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மஹ்தீ பின் அப்துர்ரஹ்மான் பின் உபைதா பின் காதிர் என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றதாகி விடுகின்றது.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். நஜ்ம் அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த ஸஜ்தாவும் அடங்கும்” என்று அபூதர்தா (ரலி­) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பு திர்மிதியில் 519வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவின் 1045 வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்து.

இவ்விரண்டிலும் உமர் திமிஷ்கி என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் யாரென அறியப்படாதவர். எனவே இந்த ஹதீசும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமையவில்லை.

”ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ர­)
நூல்: திர்மிதீ 527

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இதை வலுவற்றது என்று கூறுகின்றார்கள். மேலும் இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ் பின் லஹீஆ பலவீனமானவர். இதில் இடம் பெறும் இன்னோர் அறிவிப்பாளரான மிஷ்ரஹ் பின் ஹாஆன் என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி­) அவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார். எனவே இந்த ஹதீசும் பலவீனமானதாக உள்ளது.

மொத்தத்தில் 15 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்ற கருத்துக்களாகி விடுகின்றன.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]