ஏழைகளுக்கு உணவளித்த நபித்தோழியர்
———————————-
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும்.
நாங்கள் ஜுமுஆத் தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு ஸலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.
நூல்: புகாரி 938
நபியவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் எந்த அளவிற்குச் சிறந்து விளங்கினார்கள் என்பதை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.
வெள்ளிக்கிழமை என்றாலே மிகச் சிறப்பாக உணவருந்த வேண்டும் என அனைவரும் விரும்புவர்.
ஆனால் வெள்ளிக்கிழமை கூட வயிற்றுக்கு உணவில்லாத ஏழை ஸஹாபாக்களும் நபியவர்கள் காலத்தில் இருந்துள்ளனர்.
அத்தகைய ஏழை நபித்தோழர்களுக்கு ஒரு அடைக்கலமாக தன்னுடைய வயோதிக காலத்திலும் ஒரு பெண்மணி திகழ்ந்துள்ளார் என்றால் எத்தகைய உயரிய நற்குணங்களுக்கு உரியவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதைக் கண்டு நம் மெய்சிலிர்க்கின்றது.
வயோதிக காலத்திலும் தமது தோட்டத்தில் தானே பயிர் செய்து, அதனை அறுவடை செய்து, தானே சமையலும் செய்து, வெள்ளிக்கிழமை ஏழை நபித்தோழர்களுக்கு உணவளித்துள்ளார் என்றால் உண்மையில் மிகச் சிறந்த இறைநம்பிக்கையாளராகவும், இறை நம்பிக்கையாளருக்கு உதாரணமாகவும் இப்பெண்மணி திகழ்ந்துள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.