பிறந்தநாள்விழாவிவ்பங்கேற்கவில்லைஅதேபோல்பெண்வீட்டார்விருந்தில்பங்கேற்கவில்லைகேக்மற்றும்நிக்காஹ்சாப்பாடுசாப்பிடலாமா?

பிறந்த நாள் விழாவிவ் பங்கேற்கவில்லை அதே போல் பெண்வீட்டார் விருந்தில் பங்கேற்கவில்லை கேக் மற்றும் நிக்காஹ் சாப்பாடு சாப்பிடலாமா?

உணவு ஹராமில்லை. சபை தான் ஹராம். எனவே சாப்பிடலாம்

ஒரு உணவைச் சாப்பிடக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் கூற வேண்டும். அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ ஹராமாக்காத ஒன்றை நாமாக ஹராம் என்று கூறுவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

விருந்துக்கு அழைக்கப்படும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெற்றால் அந்த விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்றோம். இது அந்த விருந்தில் வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல! அந்த நிகழ்ச்சி மார்க்கத்திற்கு முரணாக இருப்பதால் அங்கு செல்வது தடுக்கப்பட்டது என்ற அடிப்படையில் தான் இவ்வாறு கூறுகிறோம். இதையும் நாம் சுயமாகச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியுள்ளார்கள்.

நான் உணவைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் இருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: இப்னுமாஜா (3360)

தீமை நடக்கும் ஒரு இடத்திற்குச் செல்லக் கூடாது என்பதால் அங்கு வழங்கப்படும் உணவு ஹராமாகி விடாது. ஒரு இடத்தில் பன்றி இறைச்சி அல்லது பூஜை செய்யப்பட்ட உணவுகளைக் கொண்டு விருந்து வழங்கப்படுகின்றது என்றால் அந்த உணவே தடுக்கப்பட்ட உணவாகும்.

ஆனால் வரதட்சணை, கத்னா, வளைகாப்பு, பிறந்த நாள் விழா போன்ற தீமைகள் நடக்கும் இடங்களில் இது போன்ற ஹராமான உணவு வகைகள் வழங்கப் படுவதில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்ட போது அங்கு உருவப்படங்கள் இருந்ததால் திரும்பிச் சென்றார்கள். இந்த அடிப்படையில் வரதட்சணை, சடங்கு, கத்னா , பிறந்த நாள் விழா போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லக் கூடாது; அங்கு நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறோம்.

ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளிலிருந்து உணவுப் பொருள் வரும் போது அதை உண்ணக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அல்லாஹ் ஹலாலாக்கிய உணவை நாம் ஹராமாக்கிக் கொள்வது போன்றாகி விடும். எனவே தான் இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்குத் தடையில்லை என்று கூறுகிறோம்.

அதே சமயம், இது போன்ற உணவுகளைத் தருபவர்களிடம் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் தீமை பற்றி மார்க்க அடிப்படையில் விளக்குவது நமது கடமையாகும்.

பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரண பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும்என்ற பிற மத மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப மவ்லிது, பாத்திஹா ஓதப்பட்ட பின் சாதாரண உணவும்தபர்ருக்’ (பிரசாதம்) என்று கருதப்படுவதால் அவ்வாறான உணவுகள் ஹராமாகும். அந்த உணவுகளை வீட்டுக்குக் கொடுத்து விட்டாலும் உண்ணக்கூடாது.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *