அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “நாம் ஏழை முஹாஜிர்கள் இல்லையா?” என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “நீர் அமைதி காண உமக்கு மனைவி இல்லையா?“ என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “ஆம் (இருக்கிறாள்)” என்றார்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “வசிப்பதற்கு உமக்கு வீடு இல்லையா?” என்று கேட்டார்கள். அந்த மனிதர் “ஆம் (இருக்கிறது)” என்றார். “அவ்வாறாயின், நீர் செல்வர்களில் ஒருவராவீர்“ என்று கூறினார்கள்.
அந்த மனிதர் “இத்துடன் என்னிடம் பணியாளர் ஒரு வரும் இருக்கிறார்“ என்றார். “அவ்வாறாயின், நீர் மன்னர்களில் ஒருவர் ஆவீர்“ என்றார்கள்.
அபூஅப்திர்ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் மூன்று பேர் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் நானும் இருந்தேன். அவர்கள் (மூவரும்), “அபூமுஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கு எந்தப் பொருள்மீதும் சக்தி இல்லை.
எங்களிடம் செலவழிப்பதற்கு வசதியோ, வாகனமோ, தேவையான வீட்டுப்பொருட்களோ இல்லை“ என்று கூறினர்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “நீங்கள் எதை நாடுகிறீர்கள் (உங்களுக்கு என்ன வேண்டும்)? நீங்கள் விரும்பினால், எம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு அல்லாஹ் எளிதாக்கியுள்ள செல்வத்தை வழங்குவோம்.
நீங்கள் விரும்பினால், உங்கள் பிரச்சினையை நாம் அரசரிடம் தெரிவிப்போம். நீங்கள் விரும்பினால், பொறுமையாக இருக்கலாம். ஏனெனில்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஏழை முஹாஜிர்கள் மறுமைநாளில் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்” என்று கூறியதைக் கேட்டுள்ளேன்“ என்றார்கள். அதற்கு அவர்கள் (மூவரும்), “அப்படியானால், நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்; எதையும் கேட்கமாட்டோம்“ என்று கூறினர்.
📚(ஸஹீஹ் முஸ்லிம்: 5699.)