லுஹா தொழுகை
முற்பகல் நேரத்தில் தொழும் தொழுகைக்கு லுஹா தொழுகை என்று கூறப்படும். இத்தொழுகையை இரண்டு ரக்அத்களிலிருந்து நாம் விரும்பும் ரக்அத்கள் வரை தொழுது கொள்ளலாம்.
இத்தொழுகையின் நேரம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை.
முஸ்லிமில் லுஹாத் தொழுகையின் நேரம் பற்றி ஒரு ஹதீஸ் (1237) இடம் பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளரில் இடம் பெற்றுள்ள அல்காஸிம் அஷ்ஷைபானீ என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது. எனினும் லுஹா என்ற சொல்லின் பொருளிலிருந்து அதன் நேரத்தை நாம் அறிந்து கொள்ளலாம். லுஹா என்பதற்கு முற்பகல் என்று பொருள். எனவே இத்தொழுகையை முற்பகலில் தொழ வேண்டும் என்று முடிவு செய்யலாம். இரண்டு ரக்அத்கள்
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும்,உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகையைத் தொழுமாறும் ஆகிய இம்மூன்று விஷயங்களை என் தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1981, முஸ்லிம் 1182
நான்கு ரக்அத்கள் ஆதமின் மகனே! எனக்காகப் பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத்கள் தொழு! பகலின் கடைசிக்கு நான் உனக்குப் பொறுப்பேற்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 438, அஹ்மத் 26208
எட்டு ரக்அத்துகள்
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது எனது இல்லத்தில் குளித்து விட்டு எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும் ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள் என்று உம்மு ஹானி குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா
நூல்கள்: புகாரீ 1103, முஸ்லிம 510