ஹாஜத் நஃபில் தொழுகை உண்டா?
இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஹாஜத்’ தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும்.
“யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, “லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிக, வஅஸாயிம மஃபிரதிக. வல்கனீமத மின் குல்லி பிர்ரின் வஸ்ஸலாமத்த மின் குல்லி இஸ்மின் லாததஃலீ தன்பன் இல்லா கஃபர்தஹு வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களைதஹா யா அர்ஹமர் ராஹிமீன்’ என்று கூறட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திர்மிதி 441
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஃபாயித் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பலவீனமானவர்’ என்று திர்மிதி இமாம் கூறுகின்றார்கள்.
இந்தப் பெயரில் தொழுகை இல்லை என்றாலும் தொழுகையைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும் என்பது குர்ஆனின் கட்டளையாகும்.
பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.
திருக்குர்ஆன் 2:45
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஏதேனும் ஒரு நாட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காகத் தொழுவது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகும்.
எனினும், ஜமாஅத்தாகத் தொழுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தராத ஒன்றாகும். அவரவர் தனித்தனியாகத் தொழுது இது போன்ற சோதனைகளை விட்டும் பாதுகாப்பு தேடலாம்.