கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா?
ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத, மறுக்கப்பட வேண்டிய செய்திகளில் கண்ணேறு பற்றிய செய்தியும் ஒன்றாகும்.
(கண்ணேறு, கண்ணூறு, கண்படுதல், கண் திருஷ்டி என்றும் சொல்லப்படும்)
புனித அல்குர்ஆனின் கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பதினால் சூனியம் பற்றிய செய்திகள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அமைந்திருப்பதைப் போல் கண் திருஷ்டி பற்றிய செய்திகளும் புனித குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக அமைந்திருப்பதினால் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக அமைந்திருக்கின்றது.
கண் திருஷ்டி பற்றிய செய்திகளை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
கண் திருஷ்டி உண்மை, அதனால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துப்பட பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. அந்த செய்திகளை மொத்தமாக பார்த்த பின் இதில் உள்ள பிரச்சினை தொடர்பாக ஆராய்வோம்.
صحيح البخاري (7/ 132)
5740 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «العَيْنُ حَقٌّ» وَنَهَى عَنِ الوَشْمِ
“கண் திருஷ்டி என்பது உண்மையே” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மேலும் பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 5740, 5944
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணேறு உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் ஒன்று வெல்ல முடியுமானால், கண்ணேறு அதை வென்றிருக்கும். (கண்ணேறுக்குக் காரணமான) உங்களிடம் குளித்துக் கொள்ளுமாறு கோரப்பட்டால் குளித்துக்கொள்ளுங்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் – 4405
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கண் திருஷ்டியி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
நூல் : புஹாரி – 5738
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண் திருஷ்டி ஏற்பட்டிருக்கிறது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரழி)
நூல் : புஹாரி – 5739
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பாம்புக்கடிக்கு ஓதிப் பார்த்துக்கொள்ள “ஹஸ்ம்‘ குடும்பத்தாருக்கு அனுமதியளித்தார்கள். மேலும், அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களிடம், “என் சகோதரர் (ஜஅஃபரின்) மக்களுடைய உடல்களை நான் மெலிந்திருக்கக் காண்கிறேனே ஏன்? அவர்கள் வறுமையில் வாடுகின்றனரா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், “இல்லை; கண்ணேறு அவர்களை வேகமாகப் பாதிக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக” என்று கூறினார்கள். நான் அவர்களிடம் (ஒரு துஆவை) எடுத்துரைத்தேன். நபி (ஸல்) அவர்கள் “(அதையே) அவர்களுக்கு ஓதிப் பார்ப்பீராக‘‘ என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் – 4423
என் தந்தை ஸஹ்ல் பின் ஹுனைப் (ரலி) அவர்கள் கர்ரார் எனும் இடத்தில் குளித்தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடையை கழற்றிய போது ஆமிர் பின் ரபீஆ பார்த்துக் கொண்டிருந்தார். ஸஹ்ல் வெண்மை நிற அழகிய தோல் உள்ள மனிதர் அப்போது ஆமிர் “இன்று நான் பார்த்ததைப் போன்று வேறு எப்போதும் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணின் தோலைக் கூடப் பார்த்ததில்லை என்று கூறினார். உடனே அவ்விடத்தில் ஸஹ்ல் (ரலி) அவர்களுக்கு முடியாமல் போனது. அவருக்கு காய்ச்சல் கடுமையானது. இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று ஸஹ்ல் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் உங்களுடன் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. உடனே அவரிடம் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். ஆமிர் நடந்து கொண்ட விதம் பற்றி ஸஹ்ல் (ரலி) அவர்கள் இறைத் தூதரிடம் தெரிவித்தார்கள். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் ஏன் தன் சகோதரனை கொல்ல வேண்டும்? நீங்கள் (அவரிடம் விரும்பத்தக்க விஷயத்தைப் பார்க்கும் போது அவருக்காக) பரக்கத்தை வேண்டியிருக்கக் கூடாதா? கண்ணேறு என்பது உண்மையே. (ஆமிரே) நீங்கள் வுழூ செய்து அந்த நீரை ஸஹ்ல் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள். ஆமிர் (ரலி) அவர்கள் வுழூ செய்து அந்நீரை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இதன் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு சென்றார்கள்.
அறிவித்தவர் : அபூ உமாமா (ரலி) அவர்கள்,
நூல் : முஅத்தா மாலிக் 1471
கண் திருஷ்டி பற்றி மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள செய்திகளில் இருந்து கீழ் வரும் தகவல்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.
- இறை நிர்ணயத்தை முந்தக் கூடிய எதுவும் இல்லை. அப்படியிருந்திருந்தால் அது கண் திருஷ்டியாகவே இருக்கும்.
- கண் திருஷ்டியின் தீமையில் இருந்து விடுபட ஓதிப்பார்க வேண்டும்.
- ஒரு சிறுமியின் முகத்தில் இருந்த கருஞ்சிவப்பான படர்தாமரைக்கு கண் திருஷ்டி தான் காரணம்.
- ஜஃபர் அவர்களின் குடும்பத்தாரின் உடல் மெலிவுக்கு கண் திருஷ்டிதான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
- குளித்துக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இன்னொருவர் ஆச்சரியப்பட்டதினால் குளித்த நபர் மயங்கி விழுந்து விட்டார்.
இந்தச் செய்திகள் பற்றி இனி விரிவாக ஆராய்வோம்.
பொதுவாகவே ஒரு பொருளை அல்லாஹ் எதற்காகப் படைத்துள்ளானோ அந்த காரியத்தைத் தான் குறித்த பொருளால் செய்ய முடியுமே தவிர, அதனைத் தவிர்த்த வேறு எந்த ஆற்றலும் அதற்கு இருக்காது.
கண் என்பது பார்ப்பதற்காக படைக்கப்பட்டதே தவிர, மற்றவர்களை வீழ்த்துவதற்காக படைக்கப்பட்ட ஒன்றல்ல. மனித உருப்புகள் ஒவ்வொன்ருக்கும் எப்படி ஒவ்வொரு வேலைகள் தரப்பட்டுள்ளனவோ அதே போல் கண்ணுக்கு பார்த்தல் என்ற வேலை இறைவனினால் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி எந்தவொரு ஆற்றலும் கண்ணுக்குக் கிடையாது.
ஆனால் மேற்கண்ட செய்திகள் கண் பார்வை மூலம் மற்றவர்களுக்கு நோய் உண்டாக்களாம், வீழ்த்தலாம் என்றெல்லாம் குறிப்பிடுகின்றன.
நாம் வாழும் இவ்வுலகில் கோடான கோடி பொருட்கள் இருக்கின்றன. மனிதக் கண்களினால் அவற்றுக்கு எந்த ஆபத்தும் நடைபெறவில்லை. ஆண்கள் பெண்களைப் பார்க்கின்றார்கள், பெண்கள் ஆண்களைப் பார்கிறார்கள், மலைகள், பூந்தோட்டங்கள், காடுகள், அருவிகள் என்று எத்தனையோ இடங்களையெல்லாம் மனிதர்களாகிய நாம் பார்க்கின்றோம், ரசிக்கின்றோம் ஆனால் அவற்றுக்கு மனித கண்களின் மூலம் எந்தத் தீங்கும் நடைபெறவில்லை.
இணைவைப்பை உண்டாக்கும் கண்ணேறு பற்றிய நம்பிக்கை.
புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் கண்ணேறு பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டிருப்பதினால் குறித்த செய்திகள் உண்மையானவை தாம் என்ற நம்பிக்கையின் காரணமாகத் தான் பெரும்பாலானவர்கள் கண்ணேறு பற்றிய செய்திகளை நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
கண்ணேறு பற்றிய செய்திகளை நுனுக்கமாக ஆய்வு செய்து பார்த்தால் கண்ணேறு பற்றிய நம்பிக்கை நம்மை ஷிர்க்கின் பக்கம் இட்டுச் செல்கின்றது என்பது தெளிவான விஷயமாகும்.
அனைத்து ஆற்றல் அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியதாகும். இறைவனுக்குறிய ஆற்றல்கள் மனிதனுக்கு இருப்பதாகவோ, அல்லது அவற்றில் சிலது இருப்பதாகவோ நம்புவது இணைவைப்பை உண்டாக்கும் காரியமாகும்.
அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவர்களாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.
இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள இயலும்.
அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான்.
திருக்குர்ஆன் 36:78
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 42:11
அவனுக்கு நிகராக யாருமில்லை.
திருக்குர்ஆன் 112:4
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த காலத்தில் மக்கா காபிர்கள் பல தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள். இதே நேரம் அனைத்து ஆற்றலும் அல்லாஹ்வுக்கும் இருப்பதாகவும் நம்பி வந்தார்கள். இவர்களின் நம்பிக்கையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவர்களை இணை கற்பித்தவர்கள், முஷ்ரிகீன்கள் என்றே இறைவன் உலகுக்கு அறிமுகப்படுத்தினான்.
வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.
திருக்குர்ஆன் 29:63
‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 31:25
‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 39:38
‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்’ எனக் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 43:9
அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
திருக்குர்ஆன் 43:87
‘வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக!
திருக்குர்ஆன் 10:31
‘பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 23:84,85
‘ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’ எனக் கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா;?’ என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 23:86,87
‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 23:88,89
‘வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். அப்படியாயின் ‘எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?
திருக்குர்ஆன் 29:61
மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 10:18
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
திருக்குர்ஆன் 39:3
இறைவனுக்கு இருக்கும் பண்புகள் முழுமையாக மற்றவர்களுக்கும் இருக்கின்றது என்று நம்புவது மாத்திரம் இணைவைப்பு அல்ல. மாறாக இறைவனுக்கு இருக்கும் ஆற்றல்களில் ஒரு சிறு பகுதியை மற்றவர்களுக்கு இருப்பதாக நம்பினாலும் அது இணைவைப்பாகவே இறைவனால் கருதப்படும் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன.
மேற்கண்ட திருமறைக் குர்ஆன் வசனங்களில் இறைவன் தனக்குறியதாக சுட்டிக்காட்டியுள்ள பண்புகளை மனதில் வைத்துக் கொண்டு கண்ணேறு பற்றிய செய்திகளை நாம் ஆராய்ந்தால் கண்ணேறு பற்றிய நம்பிக்கை எந்த வகையில் இணைவைப்பை உண்டாக்குகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அல்லாஹ் ஒருவருக்கு ஒரு கஷ்டத்தை தர நாடினால் அல்லாஹ்வே வந்து அதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. எந்தப் பொருளும் இல்லாமல், எந்தவொரு துணை சாதனமும் இல்லாமல் அதனை இறைவனால் செய்து முடிக்க முடியும். இதே வேலை மனிதன் ஒரு காரியத்தை செய்வதாக இருந்தால் ஏதாவது ஒரு துணை சாதனத்தின் மூலமே அதனை செய்ய முடியும்.
ஆனால் கண்ணேறு பற்றிய செய்திகளை நாம் பார்க்கும் போது இறைவன் மேலே குறிப்பிட்டுள்ள தனக்கே உரிய பண்புகளை மற்றவர்களுக்கும் உரியதாக ஆக்கும் விதமாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஒருவருக்கு ஏதாவது பாதிப்பை உண்டாக்க வேண்டும் என்றால் கண்ணால் பார்த்தாலே போதும் அவர் பாதிக்கப்பட்டு விடுவார் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட கண்ணேறு பற்றிய செய்திகள் நமக்கு தெரிவிக்கின்றன.
கண்ணால் பார்த்தாலே பாதிப்பு உண்டாகும் என்பது இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் ஒரு நம்பிக்கையாகும். ஒருவருக்கு பாதிப்பை உண்டாக்குவதும், நலவை நாடுவதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ள விஷயமாகும். அந்த அதிகாரத்தில் மனிதனுக்கும் பங்கு கேட்க்கும் விதமாக கண்களினால் ஒருவருக்கு தீங்கிழைக்க முடியும் என்று நம்புவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டு இணைவைப்புக்கு இட்டுச் செல்லும் காரியமாகும்.
குர்ஆன் கூறும் நிதர்சன உண்மைக்கு மாற்றமானதாகும்.
ஒரு பொருளுக்கு இல்லாத ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாக யாராவது கூறினால் அந்த ஆற்றலை அவர் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் ஒரு மன்னன் இறைவனுக்குரிய ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிட்டான். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க ஒரே ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கே உதிக்கச் செய்கிறான். மேற்கே மறையச் செய்கிறான். உனக்கு இறைத்தன்மை இருந்தால் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்குமாறு செய். மேற்கே மறையும் சூரியனை கிழக்கில் மறையுமாறு செய். என்று கேட்டார்கள். அந்த மன்னன் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப்போனான்.
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் (2 : 258)
இப்றாஹீம் நபியவர்கள் எந்த விதத்தில் கேள்வி கேட்டு மன்னன் சொல்வதை அசத்தியம் என்று நிரூபித்தார்களோ அதே விதத்தில் கண் திருஷ்டி பற்றிய செய்திகள் தொடர்பாகவும் கேள்வியெழுகின்றது. குறித்த செய்தி உண்மையானது, சத்தியமானது, புகாரி இமாம் பதிந்து விட்டால் அது அனைத்தும் உண்மை தான் என்றெல்லாம் பேசுபவர்கள் கண் திருஷ்டி பற்றிய செய்திகளுக்கு நிதர்சன ஆதாரங்களை முன் வைத்து நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இந்தச் செய்தியை சரியான செய்தி என்று வாதிடும் பலரும் இதனை நிரூபித்துக் காட்ட பின்வாங்குவதிலிருந்து, இவர்கள் யாரும் இதனை உளப்பூர்வமாக நம்பவில்லை, நம்மை எதிர்ப்பதற்காக வெற்று வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ள முடிகின்றது.
அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ நிதர்சனத்திற்கு மாற்றமாக பொய் கூற மாட்டார்கள் என்று திருமறைக் குர்ஆன் தெளிவாக கூறுகின்றது.
அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
அல்குர்ஆன் (4 : 87)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.
அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)
நூல்: அஹ்மத் 15478
கூர்ந்து பார்த்தவரை தடுக்காத நபியவர்கள்
நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு பெண்ணை ஃபழள் பின் அப்பாஸ் என்ற நபித் தோழர் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது குறித்த நபித் தோழரின் முகத்தை திருப்பி விட்ட நபியவர்கள் கண்ணேறு தொடர்பில் எந்தவொரு தகவலையும் அந்த இடத்தில் குறிப்பிடவில்லை.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(“விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) “கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.
நூல் : புகாரி 6228
கண்ணேறு மூலம் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்றிருக்குமானால் நபியவர்கள் பழ்ள் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் முகத்தைத் திருப்பி விடும் போது இது பற்றி எச்சரித்திருப்பார்களே? ஏன் அந்தப் பெண்ணை அப்படிப் பார்க்கின்றாய்? இப்படிப் பார்த்தால் கண்ணேறு ஏற்பட்டு விடும் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? ஆனால் மேற்கண்ட செய்தியில் அவ்வாறு எதனையும் நபியவர்கள் குறிப்பிடவில்லை என்பதிலிருந்து கண்ணுக்கு அவ்வாறான எவ்விதமான தாக்கமும் இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
நபியவர்களின் தலைமுடி கண் திருஷ்டியை நீக்குமா?
நபியவர்களின் மனைவி உம்மு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய தலை முடியினால் கண் திருஷ்டிக்கு மருத்துவம் செய்ததாக ஒரு செய்தி புகாரி உள்ளிட்ட கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.
உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். (உம்மு சலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி (ஸல்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டு விட்டால், அவர் தமது நீர் பாத்திரத்தை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்.
நூல் : புகாரி – 5896
மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு சலமா (ரலி) அவர்கள் நபியவர்களின் தலை முடிகளில் சிலதை புனிதமென்று எடுத்து வைத்திருந்ததாகவும், கண் திருஷ்டி அல்லது நோய் ஏற்பட்டவர்களுக்கு அதன் மூலம் மருத்துவம் செய்ததாகவும் மேற் கண்ட செய்தி சொல்கின்றது.
இது இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் ஒரு செய்தியாகும்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் அவர்கள் கண்டிப்பாக இப்படியானதொரு செயலை செய்திருக்க மாட்டார்கள். இது பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு அந்தச் செய்தியின் கடைசி பகுதியே போதிய ஆதாரமாக அமைந்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.
“நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்”. என்ற இந்த வாசகம் குறித்த செய்தி உண்மையில்லை என்பதை விளக்கும் விதமாகவே அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்களின் தலை முடி தொடர்பாக வந்துள்ள செய்திகளில் நபியவர்களின் தலைமுடி கருப்பாக இருந்தது பற்றியும், சில முடிகள் வெண்மையாக இருந்தமை பற்றியுமான அறிவிப்புக்களே இடம் பெற்றுள்ளது. ஆனால் குறித்த செய்தியில் – “நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்”.- என்று இடம் பெற்றுள்ளது.
கருப்பு முடிகளை கண்டேன் அல்லது வெள்ளை முடிகளை கண்டேன் என்று இடம் பெற்றிருந்தாலும் ஒரு வாதத்திற்காகவாவது இதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இரண்டுக்கும் அப்பால் சென்று சிகப்பு முடிகளை கண்டேன் என்பதே இது பொய்யான செய்தி என்பதற்கு போதுமானதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள்
நூல்: முஸ்லிம் 01
இஸ்லாம் கூறும் தூய்மைக்கு மாற்றமானதாகும்
உலகில் உள்ள அத்தனை மதங்களையும் விட தூய்மையை வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கின்றது. ஆனால் கண்ணேறு பற்றிய செய்தியோ இஸ்லாம் கூறும் தூய்மையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக அமைந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.
என் தந்தை ஸஹ்ல் பின் ஹுனைப் (ரலி) அவர்கள் கர்ரார் எனும் இடத்தில் குளித்தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடையை கழற்றிய போது ஆமிர் பின் ரபீஆ பார்த்துக் கொண்டிருந்தார். ஸஹ்ல் வெண்மை நிற அழகிய தோல் உள்ள மனிதர் அப்போது ஆமிர் “இன்று நான் பார்த்ததைப் போன்று வேறு எப்போதும் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணின் தோலைக் கூடப் பார்த்ததில்லை என்று கூறினார். உடனே அவ்விடத்தில் ஸஹ்ல் (ரலி) அவர்களுக்கு முடியாமல் போனது. அவருக்கு காய்ச்சல் கடுமையானது. இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று ஸஹ்ல் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் உங்களுடன் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. உடனே அவரிடம் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். ஆமிர் நடந்து கொண்ட விதம் பற்றி ஸஹ்ல் (ரலி) அவர்கள் இறைத் தூதரிடம் தெரிவித்தார்கள். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் ஏன் தன் சகோதரனை கொல்ல வேண்டும்? நீங்கள் (அவரிடம் விரும்பத்தக்க விஷயத்தைப் பார்க்கும் போது அவருக்காக) பரக்கத்தை வேண்டியிருக்கக் கூடாதா? கண்ணேறு என்பது உண்மையே. (ஆமிரே) நீங்கள் வுழூ செய்து அந்த நீரை ஸஹ்ல் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள். ஆமிர் (ரலி) அவர்கள் வுழூ செய்து அந்நீரை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இதன் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு சென்றார்கள்.
அறிவித்தவர் : அபூ உமாமா (ரலி) அவர்கள்,
நூல் : முஅத்தா மாலிக் 1471
கண்ணேறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நபியவர்கள் சொன்ன மருத்துவமாக இங்கு குறிப்பிடப்படும் செய்தி என்ன?
“(ஆமிரே) நீங்கள் வுழூ செய்து அந்த நீரை ஸஹ்ல் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள். ஆமிர் (ரலி) அவர்கள் வுழூ செய்து அந்நீரை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இதன் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு சென்றார்கள்.”
மேற்கண்ட செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல் உண்மைக்குப் மாற்றமானதாகும். இதனை கீழ்வரும் செய்தியின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளூ செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும்போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறியமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 162
தூக்கத்திலிருந்து தொழுகைக்காக எழுந்திருப்பவர் வுழு செய்வதற்கு முன் தமது கைகளை கழுவிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. காரணம் இரவில் தூங்கிய நேரத்தில் கை மர்ம உறுப்பிலோ அல்லது வேறு இடங்களிலோ அசுத்தங்களிலோ கூடப் பட்டிருக்கலாம் என்பதினால் தான் இஸ்லாம் மேற்கண்ட சட்டத்தினை நமக்கு சொல்லிக் காட்டுகின்றது.
நாம் தூங்கிய போது நமது கை வேறு எங்காவது பட்டிருக்குமோ என்பதற்காகவே கையை கழுவிய பின் வுழு செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்தும் போது இன்னொருவரை வுழு செய்யுமாறு கூறி அவருடைய வுழு செய்த தண்ணீரைக் கொண்டு இன்னொருவருடைய உடலை கழுவுமாறு நபியவர்கள் கட்டளையிடுவார்களா? இது இஸ்லாம் வலியுறுத்தும் தூய்மையை கேள்விக்குள்ளாக்கும் காரியமல்லவா? கண்டிப்பாக நபியவர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள் என்பதே முஃமினான மக்களின் நம்பிக்கையாக இருக்க முடியும்.
கண்ணேறு தான் என்பதை எப்படி கண்டு பிடிப்பது?
ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அதற்குக் காரணம் கண்ணேறுதான் என்பதை இன்றுள்ளவர்கள் எப்படி கண்டு பிடிப்பது? இந்தக் கேள்விக்கு கண்ணேறு உண்டு என்று நியாயம் பேசுவர்கள் பதில் தரக் கடமைப் பட்டுள்ளார்கள்.
ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் இன்னாரின் பார்வை காரணமாகத் தான் நோய் ஏற்பட்டது என்பதை எப்படி கண்டு பிடிப்பது?
அப்படி கண்டு பிடித்தால் சம்பந்தப்பட்டவரை வுழு செய்யுமாறு கூறி அந்தத் தண்ணீரில் பாதிக்கப்பட்டவர் தனது உடம்பைக் கழுவிக் கொள்ள வேண்டுமா?
இது முஸ்லிம்களுக்கு மாத்திரமா? காபிர்களுக்கும் சேர்த்ததா?
ஒரு காபிருக்கு முஸ்லிமினால் கண்ணேறு ஏற்படுமா?
ஏற்படும் என்றால் அதனை எவ்வாறு கண்டு பிடிப்பது?
ஏற்படாது என்றால், முஸ்லிமுக்கு மாத்திரம் தான் ஏற்படும் என்பதற்கு என்ன ஆதாரம்?
காபிருக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் முஸ்லிம் வுழு செய்து காபிருக்கு கொடுத்தால் சரியாகிவிடுமா?
ஒரு காபிர் மூலம் முஸ்லிமுக்கு கண்ணேறு ஏற்பட்டால், காபிர் வுழு செய்து முஸ்லிமுக்கு கொடுக்க வேண்டுமா?
காபிர் வுழு செய்த தண்ணீர் மூலம் முஸ்லிமுக்கு நோய் இல்லாமல் போகுமா?
வுழு பற்றிய சட்டங்கள் காபிர்களுக்கும் உண்டா?
இது போன்ற இன்னோரன்ன கேள்விகளுக்கு கண்ணேறு ஆதரவாளர்கள் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். இந்தக் கேள்விகளைத் தவிர்த்து கண்ணேறு உண்டென்று அவர்களினால் வாதிட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.