மணப்பெண் நகையும் மார்க்கத்தின் நிலையும்
ஒருவன் நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யப் போகிறேன் என்பதை முன்வைத்து பெண்வீட்டாரிடமிருந்து தனக்காகப் பெறுகின்ற பெரும்பாலானவை வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறு பெறப்படுவது பணமாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும், விருந்தாக இருந்தாலும், நகையாக இருந்தாலும் அவை வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அதே நேரத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணத்தின் போது போடப்படுகின்ற நகை அனைத்தும் வரதட்சணையில் உள்ளடங்கிவிடும் என்று கருதமுடியாது.
பொதுவாக நகைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்வது பெண்களின் இயற்கைத் தன்மையாகும். அதிலும் குறிப்பாக திருமணத்தின் போது புதுமாப்பிள்ளையை கவரும் வண்ணம் தன்னை அலங்கரித்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஒரு பெண்ணிற்கு இந்த நோக்கத்தில் அணிவிக்கப்படும் நகைகள் வரதட்சணையாக ஆகாது.
நகைகள் கணவனுக்கு உரியதன்று
தன்னுடைய மகளிற்கு ஒரு தகப்பன் திருமணத்தின் போது அணிவிக்கும் நகைகள் அவளுக்குரியதுதானே தவிர அவளுடைய கணவனுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.
கணவனோ, கணவன் வீட்டாரோ தன்னுடைய வீட்டிற்கு வரும் மணமகளின் நகைகளை தங்களுடைய சொத்தாகக் கருதுவார்கள் என்றால், தங்களுடைய தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றால் அது தெளிவான வரதட்சணையே ஆகும்.
மனைவியின் சொத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் கணவன் கைவைப்பது கூடாது. கணவன் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் அவன்தான் தன்னுடைய மனைவிக்கும் அவள் மூலம் தனக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கும் பொறுப்புதாரியே தவிர மனைவியின் சொத்தில் இருந்து அவள் விருப்பம் இல்லாமல் எடுத்துக் கொள்வது மார்க்க அடிப்படையில் ஹராமானதாகும். மனைவி விரும்பினால் தன்னுடைய கணவனுக்கு அன்பளிப்பாகவோ, அல்லது தர்மமாகவோ வழங்கலாம்.
இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். மக்களே! தர்மம் செய்யுங்கள்! என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை? எனப் பெண்கள் கேட்டதும், நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர்.
அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார் என்று கூறப்பட்டது. எந்த ஸைனப்? என நபி(ஸல்) அவாகள் வினவ, இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்! என்று கூறப்பட்டது. அவருக்கு அனுமதி வழங்குங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள்.
என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்ய?) என்று கேட்டார். இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி (1462)
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். அவர்களுடைய மனைவி ஜைனப் (ரலி) அவர்களோ தர்மம் செய்கின்ற அளவிற்கு செல்வ வசதியைப் பெற்றிருக்கின்றார்கள். அப்படியிருந்தும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மனைவியின் நகையில் கைவைக்கவில்லை. மனைவியாக விரும்பி தர்மம் செய்யும் பொழுதுதான் பெற்றுக் கொள்கிறார்கள்.
எனவே திருமணத்தின் போது ஒரு பெண்ணிற்கு அணிவிக்கப்படும் நகை அப்பெண்ணின் சொத்தாகத்தான் கருதப்படுமே தவிர அதனை மணமகனிற்குரியதாகவோ, அல்லது மணமகன் வீட்டாருக்குரியதாகவோ கருதினால் அது வரதட்சணை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
சமமாக போடப் படுகிறதா?
அது போன்று திருமணத்தின் போதுதான் ஒரு பெண்ணிற்கு நகை போடவேண்டும் என்பது கிடையாது. ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் அனைத்து பிள்ளைகளுக்கும் சமமாகத்தான் அன்பளிப்பை வழங்க வேண்டும். நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு பின்வருமாறு அறிவித்தார்கள்:
என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! உங்கள் பிள்ளைகளிடையே நீதம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, அன்பளிப்பை ரத்து செய்தார்.
அறிவிப்பவர் : ஆமிர் பின் ஷர்ஹபீல்,
நூல் : புகாரி 2587
மற்றொரு அறிவிப்பில், “நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
நீதமாக நடந்து கொள்ளுங்கள்! நீதம் தவறினால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! பாவத்திற்கு என்னை சாட்சியாளனாக ஆக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் வழங்கும் அன்பளிப்புகளில் நூல் பிடித்தாற்போல் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.
ஆனால் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் அன்பளிப்பு விஷயத்தில் மிக அதிகமாகவே பாரபட்சம் காட்டுகின்றனர். குறிப்பாக, பெண் மக்களுக்கு திருமணத்தின் போது நகை வடிவத்தில் வழங்குகின்ற அன்பளிப்பைப் போன்று ஆண் மக்களுக்கு வழங்குவதில்லை. பெண் மக்களுக்கு மத்தியிலேயே மூத்த மகளுக்கு ஒரு விதம், இளைய மகளுக்கு மற்றொரு விதம் என்று அவர்களுக்கு அளிக்கும் நகை, நிலம், சீர் வரிசைகளில் வேறுபாடுகள் காட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கின்றது.
பிள்ளைகளுக்கு மத்தியில் தாங்களாக வேறுபாடு காட்டினாலும், மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினாலும் அல்லாஹ்விடத்தில் அந்தப் பெற்றோர்கள் நிச்சயமாகக் குற்றவாளிகள் தான்! தாங்களாகவே வேறுபாடு காட்டினால் பெற்றோர்கள் அப்பாவத்திற்கு முழுப் பொறுப்பாளி ஆகின்றார்கள். மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினால் பெற்றோருடன் சேர்த்து மாப்பிள்ளைகளும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.
இது போன்ற வேறுபாடுகள் இல்லாமல் ஒரு தகப்பன் தன்னுடைய மகளுக்கு நகை போடுவது குற்றமாகாது.
ஒரு தகப்பன் தான் உயிரோடும் வாழும் காலத்தில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமாக அன்பளிப்பு வழங்கிவிட்டால் பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது என்ற பிரச்சினையும் ஏற்படாது.
ஆனால் இன்று மணமகளுக்கு அணிவிக்கப்படும் நகைகள், தந்தை மனப்பூர்வமாக அணிவிப்பதில்லை. மணமகன் வீட்டின் நிர்பந்தம், அல்லது தன் மகளை மாமியார் வீட்டில் குறை சொல்லக்கூடாது என்பதற்காகவே அணிவிக்கப்படுகிறது. இதுவும் மறைமுகமாக வாங்கப்படும் வரதட்சணையாகவே கருதவேண்டும்.
ஏழையாக இருப்பவர்கள் தங்கள் சக்தி உட்பட்டு நகை அணிவிப்பதில்லை. அல்லது நகையில்லாமல் திருமணம் செய்ய விரும்புவதும் இல்லை. காரணம் மாமியார் வீட்டு பயம்தான்.
எனவே இது போன்ற நிலைகளில் வழங்கப்படும் நகையும் வரதட்சணையாகவே கருத வேண்டும்.
ஒரு தகப்பன் தன்னுடைய மகளுக்கு முறையாக நகை அணிவித்தால் அது மார்கத்தி்ல் குற்றமாகக் கருதப்படாது. அது போன்று ஒரு கணவன் தன்னுடைய மனைவிக்கு போடப்பட்ட நகை அவளுக்குரியதுதான். அதில் தனக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை விளங்கி நடந்து கொண்டால் அது வரதட்சணையாகவும் கருதப்படாது.
எல்லாவற்றிற்கும் மேலாக உலகமக்களின் கண்காணிப்பை விட படைத்த ரப்புல் ஆலமீன் நம்முடைய உள்ளத்தை பார்த்து தீர்ப்பளிக்கக்கூடியவன் என்பதை அறிந்து நடந்து கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை.
அபூ அதீபா