இறை நம்பிக்கையாளர்கள் யார்?
இறை நம்பிக்கையாளர்கள் யார்? என்ற கேள்விக்கு இறைவனே தனது திருமறையில் பல இலக்கணங்களை சொல்லித் தருகிறான். அவற்றை வரிசையாகப் பார்ப்போம்!
இறைநம்பிக்கைக்கு கொண்ட பிறகு சந்தேகம் கொள்ளமாட்டார்கள்
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்.
(அல்குர்ஆன் 49:15)
இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ள மாட்டார்கள்
நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது.89 அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.
(அல்குர்ஆன் 3:28)
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 60:8)
அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்கள்
“அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 9:51)
இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலையடையச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது. அல்லாஹ்வின் விருப்பமின்றி அவர்களுக்குச் சிறிதளவும் அவனால் தீங்கு இழைக்க முடியாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 58:10)
இறைவனைப்பற்றி கூறினால் பயம் ஏற்படும்
நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.
அவர்களே உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
(அல்குர்ஆன் 8:2-4)
இறைவழியில் தியாகம் செய்வார்கள்
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
(அல்குர்ஆன் 8:74)
மார்க்கக் கல்வியை பயில்வார்கள்
நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் 9:122)
அவதூறுகளை நம்பமாட்டார்கள்
இதைச் செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? “இது தெளிவான அவதூறு” என்று கூறியிருக்கக் கூடாதா?
(அல்குர்ஆன் 24:12)
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவார்கள்
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 49:10)
குறித்த நேரத்தில் தொழுவார்கள்
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது
(அல்குர்ஆன் 4:103)
இறை நம்பிக்கையாளருடன் அல்லாஹ் இருக்கின்றான்
நம்பிக்கை கொண்டோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:103)
இறை நம்பிக்கையாளர்கள் பரிகாசிக்கப்படுவார்கள்
தாராளமாக (நல்வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(அல்குர்ஆன் 9:79)
இறை நம்பிக்கையாளர்கள் வெற்றிபெறுவார்கள்
பின்னர் நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். நம்பிக்கை கொண்டோரை இவ்வாறு காப்பாற்றுவது நமது கடமை.
(அல்குர்ஆன் 10:103)
மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். “அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்” என்று நினைத்தார். “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.
அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.
(அல்குர்ஆன் 21:87,89)
இணைவைப்பவர்களை திருணம் செய்யமாட்டார்கள்
விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் 24:3)
அல்லாஹ்வுக்கும் அவன் துதருக்கும் முழுமையாக கட்டுப்படுவார்கள்
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் 24:51)
இறைநம்பிக்கையுள்ள பெண்கள் முக்காடுகளை அணிந்து செல்வார்கள்
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (யாரென) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.”அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 33:59)
நல்ல அறிவுரைகளை ஏற்று நடப்பார்கள்
அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.
(அல்குர்ஆன் 60:55)
வாக்கை நிறைவேற்ற எதிர்பார்த்திருப்பார்கள்
அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை.
(அல்குர்ஆன் 33:23,24)
இவர்களுக்கு, இறை உதவி நிச்சயம் உண்டு
நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது.
(அல்குர்ஆன் 30:47)
இவர்களே சொர்க்கத்திற்கு உரிமையாளர்கள்
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 23:1-11)
இறைவன் கூறிய அனைத்து இலக்கணங்களையும் பெற்று சுவனத்திற்கு வாரிசுதாரர்களாகி மரணிக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!