தேசியம், மொழி உணர்வுகள்
மனிதர்களிடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திடும் தீய சத்துக்களாக தேசப் பற்றும், மொழி வெறியும் திகழ்கின்றன. இலங்கை பற்றி எரிவதற்கும், இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கும் இந்த மொழி வெறி தான் காரணம். நமது நாட்டிலேயே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இந்த மொழி வெறி தான் காரணம்.
இந்தக் குறுகிய சிந்தனையை உள்ளத்திலிருந்து இஸ்லாம் கழற்றி விடுகின்றது. இஸ்லாத்தில் இருந்து கொண்டு யாராவது ஒருவர் மொழி, தேசியம் என்ற அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டார் என்றால், அந்தச் சண்டையில் உயிர் துறப்பார் என்றால் அவர் முஸ்லிமாக மரணிக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
“(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)
நூல்: முஸ்லிம் 3440
இரு சமுதாயங்களுக்கு மத்தியில் ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் அந்த விவகாரத்தில் நியாயம், அநியாயம் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இவர் நம் இனத்தவர், இவர் நம் எதிரி இனத்தார் என்று பார்க்கக் கூடாது.
அப்படிப் பார்க்கின்ற அந்த உணர்வுக்குப் பெயர் தான் தேசியம்! மொழி உணர்வு! என் நாடு உயர்ந்தது, என் மொழி உயர்ந்தது என்ற சிந்தனையால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். தீமைக்கு வித்திடும் இந்தக் குறுகிய சிந்தனையை, தேசியம் மற்றும் மொழி வெறியின் குரல்வளையைப் பிடித்து திருக்குர்ஆன் நெறித்து விடுகின்றது.
எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் உலகில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஆதமின் மகன் தான்; அவனும் உன் சகோதரன் தான். எனவே நீங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஒரு குலத்தார் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.
உங்களில் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவதால் ஒருவர் உயர்ந்தவர் ஆகி விட மாட்டார்.
“மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”
(நூல்: அஹ்மத் 22391)
என்று மொழி வெறி பிடித்த அரபியரைப் பார்த்து, உலக மக்கள் அனைவரும் கூடி நிற்கும் ஹஜ்ஜின் போது இந்தச் சகோதர முழக்கத்தை, தீண்டாமை ஒழிப்புப் பிரகடனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்கின்றார்கள்.
தீண்டாமையைப் பெயரளவுக்கு இல்லாமல் செயலளவில் ஒழித்து காட்டியது திருக்குர்ஆனும், அதைப் போதிக்க வந்த திருத்தூதர் (ஸல்) அவர்களும் தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் தீண்டாமையை அல்ல, உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் பல்வேறு கோணங்களில் பரவிப் பீடித்துள்ள இந்தத் தீண்டாமை நோயைத் தீர்க்கும் மருந்து திருக்குர்ஆனிலும், அது கூறும் திருத்தூதரின் பாதையிலும் தான் உள்ளது.
அடிமை விலங்குகளை உடைத்தெறிய வந்தவர் தான் அந்தத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். இதோ திருக்குர்ஆன் கூறுகின்றது.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்ற வைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப் படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் 7:157)