இஸ்லாத்தின் பார்வையில் பள்ளிவாசல்களின் முக்கியத்துவம்
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து மதீனாவிற்கு வந்தவுடன் அவர்கள் முதலில் அல்லாஹ்விற்காக ஓர் ஆலயத்தைத் தான் கட்டியெழுப்பினார்கள். மஸ்ஜிதுந்நபவீ எனும் அந்த ஆலயம் தான் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடுகள் செய்யும் இடமாகவும், இஸ்லாமிய ஆட்சியின் மையமாகவும், மக்களுக்குக் கல்வி போதிக்கும் பல்கலைக் கழகமாகவும், ஏழை எளியவர்களுக்குப் புகலிடமாகவும், அனைத்து நற்பணிகளுக்கும் அடித்தளமாகவும் விளங்கியது.
அது போன்று இவ்வுலகில் ஆலயம் என முதன்முதலில் அமைக்கப்பட்டது இறையில்லமான “கஅபா” ஆலயம்தான். இவ்வுலகில் படைக்கப்பட்ட முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் “கஅபா” எனும் ஆலயத்தையும், அதன்பிறகு நாற்பது ஆண்டுகள் கழித்து “பைத்துல் முகத்தஸ்” எனும் ஆலயத்தையும் கட்டியெழுப்பினார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்களுடைய காலத்தில், அவர் தமது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் இணைந்து சிதிலமடைந்திருந்த கஅபாவின் அடித்தளத்தை உயர்த்தி அதைப் புணர் நிர்மாணம் செய்தார்கள். இவை அனைத்தும் பள்ளிவாசல்கள் இஸ்லாத்தின் ஓர் அடிப்படையான அம்சம் என்பதற்கு மிக உறுதியான சான்றுகளாகும்.
மாதவிடாய் பெண்கள் மற்றும் குளிப்புக் கடமையானவர்கள் தூய்மையாகும் வரை பள்ளிவாசலில் தங்கியிருக்கக் கூடாது; பச்சை வெங்காயம், பூண்டு போன்ற துர்வாடை ஏற்படுத்தும் பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகைக்கு வரக் கூடாது; பள்ளிவாசலில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது; அமைதியைப் பேண வேண்டும்.
வியாபாரம் செய்யக் கூடாது; அசுத்தம் செய்யக் கூடாது; தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற பல கட்டுப்பாடுகளை மார்க்கம் விதித்துள்ளது. இவை பள்ளிவாசலின் புனிதத் தன்மைகளுக்குச் சான்றாக உள்ளன. ‘முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குப் பள்ளிவாசல் அவசியமல்ல’ என்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான ஒரு வாதமாகும்.
பள்ளிவாசலை இறையடியார்களிடமிருந்து கையகப்படுத்துவதும், அங்கு தொழுகை நடத்தவிடாமல் தடுப்பதும், பள்ளிவாசலை இடித்துப் பாழாக்குவதும் இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரும் குற்றம். இவ்வாறு செய்பவர்கள் மிகப்பெரும் அநியாயக்காரர்கள் என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் நினைவுகூரப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயற்சிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? பயந்தவர்களாகவே தவிர அவற்றில் நுழையும் உரிமை இத்தகையோருக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடும் வேதனையும் உள்ளது.
(அல்குர்ஆன்:2:114)
மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே உரியவை. எனவே, அல்லாஹ்வுடன் வேறு யாரையும் அழைக்காதீர்கள்!
(அல்குர்ஆன்:72:18)
இஸ்லாத்தின் அடிப்படையில் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும். அது இஸ்லாத்தின் ஒரு அங்கமல்ல என்றோ, அவசியமற்றது என்றோ கூறுவது அறியாமையின் உச்சகட்டமாகும்.
பள்ளிவாசல்களைக் கட்டியெழுப்பி, அங்கு அல்லாஹ்வை வணங்கி வழிபட வேண்டுமென அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான்.
இறையில்லங்கள் உயர்த்தப்பட வேண்டுமென்றும், அவற்றில் அவனது பெயர் கூறப்பட வேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (இறைநம்பிக்கையாளர்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன்:24:36)
இவ்வாறே நபி (ஸல்) அவர்களும் பள்ளிவாசல் கட்டுவதன் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளார்கள்.
“யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவனுக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்கு அது போன்று ஒரு வீட்டை அல்லாஹ் சொர்க்கத்தில் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: புகாரி (450)
பள்ளிவாசலைக் கட்டுமாறு இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்பதிலிருந்தும், அதன் சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தும் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களுக்கு மிக மிக அவசியமானவை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஆண்கள் ஐங்காலத் தொழுகைகளைக் கண்டிப்பாகப் பள்ளிவாசலில் தான் நிறைவேற்றியாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தொழுகைக்கான அழைப்பைச் செவியுற்று, காரணமில்லாமல் (பள்ளிக்கு) வரவில்லையென்றால் அவருக்குத் தொழுகை கிடையாது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: இப்னு மாஜா (785)
நோயாளியாக இருந்தாலோ அல்லது நிர்ப்பந்தமான சூழல்களிலோ அவர்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் என்று இருந்தாலும் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
பள்ளிவாசலை யார் நிர்வகிக்க வேண்டும், யார் நிர்வகிக்கக் கூடாது என்பதையும் திருமறைக் குர்ஆன் தெளிவுபடுத்துகிறது. இதிலிருந்தும் பள்ளிவாசலின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
இணைவைப்போர் தமக்குத் தாமே இறைமறுப்புக்கு சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் ஆலயங்களை நிர்வகிக்க அவர்களுக்குத் தகுதியில்லை. அவர்களது நல்லறங்கள் அழிந்து விட்டன. நரகில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சாதவர்களே அல்லாஹ்வின் ஆலயங்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றவர்களாக இருக்க முடியும்.
(அல்குர்ஆன்:9:17,18)
இஸ்லாத்தின் அடிப்படையில் நரகத்தை விட்டுத் தப்பிப்பதற்கும், மறுமையில் வெற்றி பெறுவதற்கும், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும், எண்ணற்ற நன்மைகளையும் அடைவதற்கும் பள்ளிவாசல்கள் மிக முக்கிய காரணியாக உள்ளன. இதிலிருந்தே இஸ்லாம் பள்ளிவாசல்களுக்கு எவ்வளவு முக்கியத்துவத்தை வழங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பள்ளிவாசலின் முக்கியத்துவம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய எண்ணற்ற செய்திகளில் ஒரு சில சான்றுகளைக் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்:
1.நீதி மிக்க ஆட்சியாளர்.
2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளமுடையவர்.
4. அல்லாஹ்வுக்காகவே நட்பு கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.
5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மைத் தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர்.
6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (660)
இதே செய்தி முஸ்லிம் என்ற நூலில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
“பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் உள்ளமுடையவர்’’
நூல்: முஸ்லிம் (1869)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (421)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் பள்ளிவாசலுக்குக் காலையிலோ மாலையிலோ சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை (அல்லது விருந்தை)த் தயார் செய்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1187)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் உளூச் செய்து விட்டுப் பிறகு தொழுகையை நிறைவேற்றுவதற்காகப் பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் பள்ளிவாசலை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிற்காகவும் பத்து நன்மைகளை அவரது இரண்டு எழுத்தர்களும் பதிவு செய்கிறார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: இப்னு ஹிப்பான் (2045)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தமது வீட்டிலேயே உளூச் செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லத்தை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்திவிடுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1184)
“வெளியூர் சென்றவர் ஊர் திரும்பும் போது அவருடைய குடும்பத்தார்கள் சந்தோஷப் படுவதைப் போன்று ஒரு முஸ்லிமான மனிதர் தொழுவதற்காகவும், திக்ர் செய்வதற்காகவும் பள்ளிகளுக்குச் சென்றால் அவர் (அங்கிருந்து) வெளியேறும் வரை அதன் மூலம் அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் (8332)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தனது வீட்டில் அழகிய முறையில் உளூச் செய்து, பிறகு பள்ளிக்கு (தொழுகைக்காக) வருகிறாரோ அவர் அல்லாஹ்வின் விருந்தாளியாவார். விருந்தாளியைக் கண்ணியப் படுத்துவது விருந்தளிப்பவர் மீது கடமையாகும்.
அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி)
நூல்: அல்முஃஜமுல் கபீர் (6016)
பள்ளிவாசல்கள் இஸ்லாத்தின் ஓர் அடிப்படையான அங்கம். பள்ளிவாசல்களையும், இஸ்லாத்தையும் ஒருபோதும் பிரித்துப் பார்க்க இயலாது. பள்ளிவாசலுக்கு எதிராக நீதிமன்றங்களும், பாசிசவாதிகளும் எத்தகைய பொய்ப் பிரச்சாரத்தைச் செய்தாலும் அது ஒருபோதும் முஸ்லிம்களிடம் எடுபடாது என்பதே உண்மையாகும்.