மத்ஹப் கூறும் குடும்பப் பிரச்சனைகள்
நான்கு வருட கர்ப்பம்
ஒரு குழந்தை கர்ப்ப அறையில் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பதில் பல சட்டப்பிரச்சனைகள் உள்ளன. கணவனுடன் தொடர்பு இல்லாத பெண் பெற்றெடுக்கும் குழந்தை அந்தக் கணவனுடைய குழந்தை என்று முடிவு செய்வது முக்கியமான பிரச்சனையாகும். இது குறித்து மத்ஹப் சட்டப்புலிகள் கூறுவது என்ன என்பதைப் பாருங்கள்!
அதிகபட்ச கர்ப்பகாலம் இரு வருடங்களாகும். ஆயிஷா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தான் இதற்கு ஆதாரம். (ஹனஃபி அல்லாத) மற்ற மூன்று இமாம்களிடம் அதிகபட்ச கர்ப்பகாலம் நான்கு வருடங்களாகும். குறைந்தபட்ச கர்ப்பகாலம் ஆறுமாதங்கள் என்பது ஏகோபித்த முடிவாகும். மீட்டிக் கொள்ளத்தக்க முறையில் தலாக் விடப்பட்டவளின் குழந்தை அவளது கணவனின் குழந்தையாக ஆகும்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலான துர்ருல் முக்தார்
அதிகபட்ச கர்ப்பகாலம் எவ்வளவு என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. நமது ஹனஃபி உலமாக்கள் இரு வருடங்கள் எனக் கூறுகின்றனர். ஷாஃபி, நான்கு வருடங்கள் என்கிறார். மாலிக், அஹ்மத் ஆகியோரின் கருத்தும் இதுதான். உபாதா என்பார் ஐந்து வருடங்கள் என்கிறார். ஸுஹ்ரி என்பார் ஆறு வருடங்கள் என்கிறார். ரபீஆ என்பார் ஏழு வருடங்கள் என்கிறார். அபூ உபைதா என்பார் இதற்கு எல்லை எதுவும் இல்லை என்கிறார்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய லிஸானுல் ஹுக்காம்
அதிகபட்ச கர்ப்ப காலம் நான்கு வருடங்கள் ஆகும். குலா, அல்லது முத்தலாக், அல்லது மனமுறிவு, அல்லது லிஆன் மூலம் இருவரும் பிரிந்த பின்னர் நான்கு வருடத்துக்குள் அவள் குழந்தை பெற்றால் அது அவன் குழந்தை தான்.
நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ரவ்ளா
இந்தச் சட்டங்கள் சொல்வது என்ன? கணவன் வெளிநாடு சென்று நான்காவது வருடத்தில் அவள் குழந்தை பெற்றாலும் அவன் தான் அக்குழந்தைக்குத் தந்தையாவான். ஹனஃபி மத்ஹப் சட்டப்படி இரு வருடங்களில் அவள் குழந்தை பெற்றால் அவன் தான் அக்குழந்தையின் தந்தையாவானாம். அவன் ஊரில் இருந்த போது உருவான குழந்தை நான்கு ஆண்டுகள் ஆனபின் பிறந்துள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
மனைவியை விவாகரத்து செய்த பின் அவள் மறுமணம் செய்யாமல் நான்காம் வருடம் பிள்ளை பெற்றாலும் அது அவனது குழந்தையாகத் தான் கருதப்படுமாம். மூன்று மத்ஹப்களின் சட்டம் இதுதான். மத்ஹபை ஆதரிப்பவர்கள் தமது குடும்பத்தில் இவ்வாறு நேர்ந்தால் இதனடிப்படையில் தான் முடிவு செய்வார்களா? ஒரு குழந்தை கர்ப்ப அறையில் நான்கு வருடங்கள் வரை இருக்க முடியும் என்பதற்கு குர்ஆனிலிருந்தோ, ஹதீஸிலிருந்தோ ஆதாரம் காட்ட முடியுமா?
குழந்தையின் கர்ப்பகாலம் அதிகபட்சம் 278 நாட்கள் தான். இதில் விதிவிலக்காக பத்துநாள் வரை அதிகமாகக் கூடும். வருடக் கணக்கிலெல்லாம் அதிகமாகாது என்பது சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட உண்மை. இவ்வாறு நிரூபிக்கப்படாத காலத்தில் கூட குழந்தையின் கர்ப்ப காலம் பத்து மாதம் என்பதை அனுபவ அறிவின் மூலம் மக்கள் அறிந்து வைத்திருந்தனர்.
அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடன் ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும் பால் குடியை மறக்கச் செய்ததும் முப்பது மாதங்களாகும்!
(திருக்குர்ஆன்:46:15.)
கர்ப்பகாலமும், பால்குடி மறக்கச் செய்யும் காலமும் சேர்த்து முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறும்போது கர்ப்பகாலம் மட்டும் 48 மாதங்கள் என்பது குர்ஆனுக்கு முரணில்லையா? மார்க்க அறிவும், பொதுஅறிவும் இல்லாதவர்கள் தான் மத்ஹப் சட்டங்களை எழுதியவர்கள் என்பது இதிலிருந்து மேலும் தெளிவாகின்றது.
கணவனின் பொருளை எடுக்கும் மனைவிக்கு தண்டனை
சதகாவின் பொருளைத் திருடினால் அவனது கை வெட்டப்படாது. ஏனெனில் அதில் அவனுக்கும் உரிமை உண்டு. பொது நன்மைக்குரிய பொருளைத் திருடினால் எப்போதும் கைவெட்டப்படாது. தெளிவான சொல்லின் பிரகாரம் கணவன் மனைவியரில் ஒருவர் பொருளை மற்றவர் திருடினால் அவரது கை வெட்டப்பட வேண்டும்.
நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஃபத்ஹுல் முயீன்
பொதுப் பணத்தையும் ஸதகாப் பொருட்களையும் திருடுவதற்கு மத்ஹபுகள் தூண்டுவதைப் பாருங்கள். இவ்வாறு தீர்ப்பு வழங்க எந்த ஒரு ஹதீஸையும் இந்நூல் முன்வைக்கவில்லை. அதே நேரத்தில் எந்த விஷயத்தில் திருட்டுக் குற்றமாக நபியவர்கள் கருதவில்லையோ அந்த விஷயத்திற்கு கைவெட்டச் சொல்வதையும் பாருங்கள்.
அந்த நபிவழி இதோ
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் வந்து ”அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர்; எனக்கும், என் குழந்தைகளுக்கும் போதுமானதை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர” என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்! “என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 5364
கணவன் காணாமல் போய் விட்டால்?
மத்ஹபுகள் பெண்களுக்கு இழைத்து வரும் அநீதிகளில் மிக முக்கியமானது, காணாமல் போன கணவன் பற்றிய சட்டமாகும். மனைவியை விட்டு விட்டு கணவன் காணாமல் போய் விட்டான். அவனது மனைவி என்ன செய்வாள்? இதோ ஹனஃபி மத்ஹப் கூறுவதைக் கேளுங்கள்.
இருவரது திருமண உறவைப் பிரிக்கக் கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழிந்த பின் அவன் இறந்து விட்டதாக முடிவு செய்யப்படும். அவனது மனைவி அப்போது இத்தா இருப்பாள். அப்போதுதான் கணவனின் சொத்துக்கும் வாரிசாக ஆவாள்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய கன்ஸுத்தகாயிக்
தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் பெரும்பாலும் ஒருவன் வாழ முடியாது. இது அபூபக்ர் அல்ஃப்ழ்லீ, முஹம்மத் பின் ஹாமித் ஆகியோரின் கருத்தாகும். அபூயூசுஃப் அவர்கள் நூறு ஆண்டுகள் என்று கணித்துள்ளார்கள். அபூஹனீஃபா அவர்கள் நூற்றி இருபது ஆண்டுகள் என்று கணித்துள்ளார்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய தப்யீனுல் ஹகாயிக்
30 வயதிலுள்ள ஒருவனுக்கு 20 வயது மனைவி இருக்கின்றாள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது கணவன் காணாமல் போய் விட்டால் அந்தப் பெண் 60 வருடங்கள், அல்லது 90 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவள் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது நடைமுறைக்குச் சாத்தியமா? பெண் என்பவள் எந்த உணர்ச்சியும் அற்ற மரக் கட்டையா? அவளுக்கென்று எந்த ஆசையும் கிடையாதா? என்ன அர்த்தத்தில் இவர்கள் இவ்வாறு உளறியுள்ளார்கள்?
சொத்துக்களைப் பிரிப்பதற்கு அவன் மரணிப்பது உறுதியாவதற்காக இப்படி காலக்கெடு நிர்ணயித்தால் அதில் ஓரளவு நியாயம் உள்ளது. ஆனால் பெண் என்பவள் உணர்வு இல்லாத மரக்கட்டையாக இருந்தால் 90 ஆண்டுகள் காத்திருக்கலாம். உணர்வுள்ள பெண்கள் வழிதவறி விடாமல் இருப்பதற்காக வாழ்க்கைத் துணை தேவை இல்லையா?
அவன் சாகவில்லை; உயிருடன் இருக்கிறான் என்றே முடிவு செய்து தொலைக்கட்டும். அவனது மனைவிக்கு இல்லற சுகம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு திருமணத்தை முறிப்பதற்கான காரணமாக இதை அறிவிப்பதற்கும் மூளை வரண்டு விட்டதா? காணாமல் போனவனின் மனைவி 90 வருடம் வரை திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை.
மனைவியை விட்டு விட்டுக் கணவன் காணாமல் போய்விட்டால் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் என்ன தான் தீர்வு? மனைவியை விட்டு கணவன் காணாமல் போய் விட்டால் அந்த மனைவி எவ்வளவு நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை.
இது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதற்காக இடிந்து போகத் தேவையில்லை. ஏனெனில் கணவன் காணாமல் போகாது இருக்கும் போதே திருமண பந்தத்தில் இருந்து மனைவி விடுபட முடியும். அதே உரிமையைப் பயன்படுத்தி கணவன் காணாமல் போகும் போதும் திருமண பந்தத்தில் இருந்து விடுபடலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி)யின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்” என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி “சரி” என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : புகாரி 5273, நஸயீ 3409
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம். ஒரு பெண்ணுக்கு, கணவனைப் பிடிக்கா விட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையை அவள் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண் என்பவள் உணர்ச்சிகள் இல்லாத கட்டை அல்ல. கணவன் இருக்கும் போதே அவளது உணர்வுகள் கணவனின் உணர்வுகளுடன் ஒத்துப் போகாவிட்டால் திருமணத்தை ரத்து செய்ய சமுதாயத் தலைவருக்கு அனுமதி உண்டு எனும் போது கணவன் காணாமல் போய் விடும் போது தாராளமாக ரத்து செய்யலாம். ஒரு பெண் தவறான வழியில் செல்வதற்கான வாசலை இஸ்லாம் அடைக்காமல் இருக்குமா? என்று சிந்தித்துப் பார்த்தால் கணவனுக்காக காலமெல்லாம் காத்திருக்க வேண்டும் என்று கூற மாட்டார்கள்.
இவ்வாறு கூறும் ஹனஃபி மத்ஹபினர் தங்கள் மகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால் நபிவழியைப் பின்பற்ற முன்வருகின்றனர். எத்தனையோ மவ்லவிமார்கள் தங்கள் மகளுக்கோ, சகோதரிக்கோ இதுபோன்ற நிலை ஏற்படும் போது மத்ஹபைத் தூக்கி எறிந்து விட்டு நபிவழியைத் தேடுகின்றனர். மக்களுக்கு மட்டும் அந்த உரிமையை மறுப்பது சரிதானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
குழந்தைத் திருமணம் கூடும்
சிறுவயதினரைத் திருமணம் செய்வது இஸ்லாத்தின் துவக்க காலத்தில் தடுக்கப்படாமல் இருந்தது. பின்னர் அது தடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மத்ஹப் சட்டப்படி குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கலாம்.
தந்தையோ, பாட்டனோ, சிறுவனுக்கும் சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்கலாம். அவர்கள் பருவ வயது அடைந்து விட்டால் திருமணத்தை முறிக்கும் உரிமை கிடையாது
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?
(திருக்குர்ஆன்:4:21.)
இந்த வசனத்தில் திருமணத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும். ஆனால் மத்ஹபோ சிறுவர், சிறுமியிடம் அதுவும் அவர்கள் அறியாத நிலையிலேயே அந்த ஒப்பந்தத்தைத் திணிக்கலாம் என்று கூறுகின்றது.
பருவ வயதை அடைந்த பெண்ணாக இருந்தாலும், அவளது விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்தால் செல்லாது என்று மார்க்கம் வலியுறுத்துகின்றது.
“கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கக் கூடாது. கன்னி கழிந்த பெண்ணிடம் உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6968
ஆனால் அறியாத பருவத்தில், அவர்களது விருப்பம் என்ன என்பதே தெரியாத நிலையில் திருமணம் முடித்து வைக்கலாம் என்று மத்ஹபு கூறுகின்றது.
மாதத்தில் மூன்று நாள் குடும்பக் கட்டுப்பாடு
மாதத்தில் முதல் நாள் இரவிலும், கடைசி இரவிலும், மாதத்தின் நடு இரவிலும் உடலுறவு கொள்வது வெறுப்பிற்குரியதாகும். காரணம் இந்நாட்களில் உடலுறவு கொள்ளும் போது ஷைத்தான் விஜயம் செய்கின்றான் என்று இஹ்யாவில் வருவதாக முக்னி என்ற நூலில் பதிவாகியுள்ளது.
நூல்: ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத்தாலிபீன்
மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்று இந்த மத்ஹபுச் சட்டம் கூறுகின்றது. ஆனால் அல்லாஹ் என்ன கூறுகின்றான் என்று பாருங்கள்.
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான் எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 2:222
மாதவிலக்கு ஏற்படும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தில் ஈடுபடலாம் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் கஸ்ஸாலி என்பவர் தனக்கு ஏதோ வஹீ வந்தது போன்று தன் இஷ்டத்திற்கு சில நாட்களைக் குறிப்பிட்டு இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்று தடை விதிக்கின்றார்.
மேலும் அல்லாஹ் தடை செய்யாதவற்றைத் தங்கள் இஷ்டத்திற்குத் தடை செய்வதை அல்லாஹ் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான்.
“இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது” என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:116
“அல்லாஹ்வே இதைத் தடை செய்தான் என சாட்சியமளிக்கும் உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்!”’என்று கேட்பீராக! அவர்கள் (பொய்யாக) சாட்சியமளித்தால் அவர்களுடன் சேர்ந்து நீரும் சாட்சியமளிக்காதீர்! நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, மறுமையை நம்பாதோரின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அவர்கள் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.
திருக்குர்ஆன் 6:150
கஸ்ஸாலி என்பவர் இதற்குக் கூறும் காரணம் மடமையின் உச்சகட்டமாக உள்ளது. இம்மூன்று நாட்களிலும் உடலுறவு கொள்ளும் போது ஷைத்தான் ஆஜராகிறான் என்பது தான் அந்தக் காரணம்.
ஷைத்தான் மனிதனுடன் இரண்டறக் கலக்காத நேரம் எதுவும் இல்லை. மற்ற 27 நாட்களில் ஷைத்தானுக்கு மனிதனின் மீது ஆதிக்கம் இல்லையா? அந்த மூன்று நாட்களில் ஒருவர் உடலுறவு கொள்ளாவிட்டால் அவர் ஷைத்தானின் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் மலக்குகளின் தன்மையை அடைந்து விடுவாரா?
மடமையின் மறுபெயர் தான் மத்ஹப் என்பது தெரிகிறதா?
மிரட்டி தலாக் வாங்கலாம்
எந்தக் கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும், ஒப்பந்தமாக இருந்தாலும் அதை மனப்பூர்வமாகச் செய்தால் தான் மார்க்கத்தில் செல்லும். ஒருவனைக் கட்டாயப்படுத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தால் அது செல்லாது. ஒருவன் தனது மனையை விவாகரத்துச் செய்ய மறுக்கிறான் என்றால் அவனைக் கத்தியைக் காட்டி மிரட்டி தலாக் என்று சொல்ல வைத்து தலாக் வாங்கலாம் என்று மத்ஹப் சட்டம் சொல்கிறது.
திருமணம், விவாகரத்து, விவாகரத்தைத் திரும்பப் பெறுதல், மனைவியுடன் உறவு கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தல், போர் இன்றியே எதிரிகளிடமிருந்து கிடைக்கும் வெற்றிப் பொருளை எடுத்துக் கொள்ளுதல், லிஹார் (மனைவியைத் தாய்க்கு ஒப்பாக்குதல்), அடிமையை விடுதலை செய்தல், பழிக்குப் பழி வாங்காது மன்னித்தல், சத்தியம், நேர்ச்சை ஆகிய பத்து காரியங்களையும் நிர்ப்பந்தப்படுத்தி செய்யலாம்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஷரஹ் பத்ஹுல் கதீர்
உனக்குப் பிடிக்காத இப்பெண்ணை திருமணம் செய்கிறாயா இல்லையா என்று ஒருவனை மிரட்டலாம். அந்த மிரட்டலுக்கு அஞ்சி, நான் இவளைத் திருமணம் செய்து கொன்டேன் என்று இரு சாட்சிகள் முன்னிலையில் அவன் கூறினால் அது திருமணமாகி விடுமாம். உன் மனைவியை தலாக் சொல் என்று கத்தியைக் காட்டி மிரட்டும் போது அதற்குப் பயந்து தலாக் என்று கூறிவிட்டால் அது தலாக் ஆகிவிடுமாம். அதாவது இந்த மத்ஹப் ஆலிமுடைய மனைவி அழகாக இருப்பதை அறிந்து அவளை அடைய ஒருவன் விரும்பினால் மிரட்டி தலாக் சொல்ல வைக்கலாம். அதன்பின் மிரட்டி அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது இதன் கருத்தாகும்.
ஹனஃபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி யாரும், யாருடைய மனைவியையும் அல்லது எந்தப் பெண்ணையும் நிர்பந்தப்படுத்தி தலாக் விடச் செய்து திருமணம் செய்து கொள்ளலாம். இந்தச் சட்டம் சரியானது என்று வைத்துக் கொண்டால் ஊரில் எந்தப் பெண்ணும் நிம்மதியாக நடமாட முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும். உதாரணமாக நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தனது மனைவியைத் தலாக் கூறி விட்டார் என்றால், அது வெறும் வாயளவில் சொன்னதாகத் தான் ஆகுமே தவிர உண்மையில் தலாக் ஆகாது.
அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப் பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.
(திருக்குர்ஆன்:16:106.)
நிர்ப்பந்தத்தின் காரணமாக அல்லாஹ்வை மறுத்து, குஃப்ரான வார்த்தைகளைச் சொல்லி விட்டால் கூட அதனால் அவர் காஃபிராகி விட மாட்டார் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது. எனவே திருமணம், தலாக் என்று சொல்லி விடுவதால் மட்டுமே தலாக்காகவோ, திருமணம் முடித்ததாகவோ ஆகி விடாது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.
கணவன் மனைவிக்கிடையே ஒரு வருட பயண தூரம் இருந்தாலும் அவனது குழந்தையே!
மத்ஹபு சட்டவல்லுனர்கள் முழு மூடர்களாக இருந்துள்ளனர் என்பதற்குப் பின்வரும் சட்டமும் ஆதாரமாக அமைந்துள்ளது.
கிழக்கு நாட்டில் இருப்பவன் மேற்கு நாட்டில் இருப்பவளைத் திருமணம் செய்தான். இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு வருட பயணத் தொலைவு உள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆன ஆறாவது மாதம் அவள் பிள்ளையைப் பெற்றால் அது அவனுடைய குழந்தைதான். ஏனெனில் இதற்கு அறிவுப்பூர்வமாக சாத்தியம் உள்ளது. காரமத் என்ற அற்புதம் மூலம் அவன் ஒரு எட்டு எடுத்து வைத்து ஒரு வருட பயணத் தொலைவை அடந்திருக்க முடியும்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய கன்ஸுத் தகாயிக்
மனைவியுடன் உடலுறவு கொள்ள கணவனுக்கு வாய்ப்பே இல்லாவிட்டாலும் கராமத் மூலம் ஒரு வினாடியில் அத்தூரத்தைக் கடந்து வந்து மனைவியிடம் சேர்ந்திருக்க முடியும் என்பதால் அது அவனுக்குப் பிறந்த குழந்தையாகத் தான் இருக்க முடியும் என்கிறது இச்சட்டம்.
வெளிநாடு சென்ற கணவன் பல ஆண்டுகளாக தாயகம் வரவில்லை. ஆனால் அவனது மனைவி குழந்தை பெற்று விட்டாள். அந்தக் குழந்தையை அவன் தலையில் தான் கட்ட வேண்டுமாம். கராமத் மூலம் அவன் யாருக்கும் தெரியாமல் வந்து மனைவியுடன் உடலுறவு கொண்டிருக்கலாம் என்ற முடிவை மத்ஹபை ஆதரிப்பவர்களே நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
தவறான தொடர்பு மூலம் ஹராத்தில் பிறக்கும் பிள்ளைகளை கராமத்தில் பிறந்தவர்கள் என்று சொல்வதற்கு இது வழிவகுக்காதா? விபச்சாரம் செய்து குழந்தை பெற்றாலும் அதைக் கராமத் மூலம் கணவனால் ஏற்பட்ட குழந்தை என்று சொல்லி விடலாம் என்ற எண்ணத்தைச் சில பெண்களுக்கு இது ஏற்படுத்தாதா?
கடுகளவு மூளையுள்ளவன் கூட இது போல் சொல்வானா? இந்தச் சட்டம் எழுதியவனின் மகள், கணவன் இல்லாத போது குழந்தை பெற்றிருக்க வேண்டும். அதை அவளது கணவன் தலையில் கட்டுவதற்காகவே இதுபோல் எழுதப்பட்டு இருக்க வேண்டும். ஒரு வருட பயணத் தொலைவில் உள்ள இருவர் எப்படி திருமணம் செய்திருக்க முடியும்? அதுவும் கராமத்தில் நடந்ததா? என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மகளைத் தொட்டால் தாய் ஹராமாவாள்
மத்ஹபு சட்ட வல்லுனர்களுக்கு சிந்தனாசக்தி அறவே இல்லை என்பதற்கு இந்தச் சட்டமும் ஆதாரமாக அமைந்துள்ளது.
உடலுறவு கொள்வதற்காக மனைவியை கணவன் எழுப்புகிறான். அல்லது அவள் கணவனை எழுப்புகிறாள். அப்போது (அருகில் படுத்துக் கிடக்கும்) மகள் மீது அவன் கை பட்டால் அவனது மனைவி அவனுக்கு நிரந்தரமாக ஹராமாகி விடுவாள்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்
பன்றி, நாய்களுடன் உடலுறவு கொள்வதைக் கூட சாதாரணமாகச் சித்தரிக்கும் கேடுகெட்ட மத்ஹபுகள், மகள் மீது தந்தையின் கை தெரியாமல் பட்டால் மனைவி நிரந்தரமாகப் பிரிந்து விட வேண்டுமாம். கடுகளவு மூளயில்லாத மூடர்கள் தான் இச்சட்டத்தை எழுதியிருக்க வேண்டும் என்று தெரிகிறதா?
தலாக் என்ற பெயரால் மடமைச் சட்டங்கள்
விவாகரத்து சம்மந்தமாக மத்ஹபு சட்ட வல்லுனர்கள் எழுதிய சட்டங்களை மனநல நிபுணர்களிடம் காட்டினால் இதை எழுதியவன் மறை கழன்றவனாக இருப்பான் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தலாக் சட்டம் என்ற பெயரில் உளறிக் கொட்டி உள்ளனர்.
நான் உன்னை தலாக் விடாத போது அல்லது எப்போது உன்னை தலாக் விடவில்லையோ அப்போது நீ தலாக் என்று ஒருவன் கூறினால் உடனே அவள் தலாக்காகி விடுவாள். உன்னை நான் தலாக் விடாவிட்டால் நீ தலாக் என்று கூறிவிட்டு மவுனமாக இருந்தால் அவள் தலாக்காக மாட்டாள். இருவரில் ஒருவர் மரணிக்கும் வரை திருமணம் நீடிக்கும். இருவரில் ஒருவர் மரணிப்பதற்கு சற்று முன்னர் அவள் தலாக் ஆவாள்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்
தலாக் விடாத போது நீ தலாக் என்று கூறினால் உடனே தலக்காகி விடுவாளாம். தலாக் விடாவிட்டால் நீ தலாக் என்று கூறினால் உடனே தலாக்காக மாட்டாளாம். விடாவிட்டால் என்று அவன் கூறியதால் அதற்கான வாய்ப்பு சாகும் வரை உள்ளதாம். என்னே அறிவு! என்னே ஆராய்ச்சி!
இன்று நான் உன்னை மூன்று தலாக் கூறாவிட்டால் நீ மூன்று தலாக் விடப்பட்டவளாவாய் என்று ஒருவன் கூறிவிட்டான். (இப்போது தலாக் விட்டாலும் அவள் தலாக்காகி விடுவாள். தலாக் விடாவிட்டாலும் தலாக்காகி விடுவாள்.) இதிலிருந்து தப்பிக்க ஒரு தந்திரம் உள்ளது. நீ ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு மூன்று தலாக்காகிக் கொள் என்று மனைவியிடம் கூற வேண்டுமாம். மனைவி அந்தப் பேரத்தை மறுக்க வேண்டுமாம். இப்படி ஒரு நாள் கழிந்து விட்டால் அவள் தலாக்காக மாட்டாள். இதுதான் ஃபத்வாவுக்குரிய கருத்தாகும்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்
மூன்று தலாக் என்று அவன் சொல்லி விட்டதால் அவள் தலாக் ஆகும் நிலை ஏற்பட்டாலும் ஆயிரம் ரூபாயுடன் சம்மந்தப்படுத்தி அதை மனைவி ஏற்காததால் அவன் கூறிய மூன்று தலாக் செல்லாததாகி விட்டதாம். ஆயிரம் ரூபாயுடன் சம்மந்தப்படுத்தாமல் தலாக் என்று கூறி இருந்தால் மனைவி அதை ஏற்க வேண்டும் என்ற பிரச்சனை வராது. ஆயிரம் ரூபாய் பேரம் பேசியதால் அவள் அதை ஏற்றால் தான் தலாக் நிகழுமாம்.
மறைகழன்றவர்கள் தான் இதை எழுதியிருப்பார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
உன்னை ஆபாச தலாக் விடுகிறேன்; அல்லது ஷைத்தானின் தலாக் விடுகிறேன்; அல்லது பித்அத்தான தலாக் விடுகிறேன்; அல்லது கெட்ட தலாக் விடுகிறேன்; அல்லது மலை போன்ற தலாக் விடுகிறேன்; ஆயிரம் தலாக் விடுகிறேன்; அல்லது வீடு நிரம்பிய தலாக் விடுகிறேன்; அல்லது கடும் தலாக் விடுகிறேன்; அல்லது நீளமான தலாக் விடுகிறேன்; அல்லது அகலமான தலாக் விடுகிறேன்; அல்லது கெட்ட தலாக் விடுகிறேன்; அல்லது கொடுமையான தலாக் விடுகிறேன்; அல்லது அருவருப்பான தலாக் விடுகிறேன்;
அல்லது சொரசொரப்பான தலாக் விடுகிறேன்; அல்லது மிகப்பெரிய தலாக் விடுகிறேன்; அல்லது மிக அகலமான தலாக் விடுகிறேன்; அல்லது மிக நீளமான தலாக் விடுகிறேன்; அல்லது மிகக் கடினமான தலாக் விடுகிறேன்; அல்லது மிகப்பிரம்மாண்டமான தலாக் விடுகிறேன் என்று ஒருவன் தன் மனைவியை நோக்கி கூறினால் மீட்டிக் கொள்ள முடியாத வகையில் ஒரு தலாக் ஆகிவிடுவாள்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்
இப்படியெல்லாம் மத்ஹபுச் சட்ட மன நோயாளிகள் தான் பேசுவார்களே தவிர சராசரியான மனிதர்கள் பேச மாட்டார்கள்.
உன்னை அனைத்து தலாக் விடுகிறேன் என்று கூறினால் ஒன்று நிகழும். உன்னை ஒவ்வொரு தலாக் விடுகிறேன் என்று கூறினால் மூன்று நிகழும். மண் எண்ணிக்கையளவு தலாக் என்று கூறினால் ஒரு தலாக் நிகழும். மணல் எண்ணிக்கையளவு தலாக் என்று கூறினால் மூன்று நிகழும். இப்லீசின் முடியின் எண்ணிக்கையளவு அல்லது உள்ளங்கை முடியின் எண்ணிக்கையளவு தலாக் என்று கூறினால் ஒன்று நிகழும்.
என் உள்ளங்கையின் மேற்புற முடி எண்ணிக்கையளவு, அல்லது என் கெண்டைக்கால் முடி எண்ணிக்கையளவு, அல்லது உன் கெண்டைக்கால் முடியின் எண்ணிக்கையளவு, அல்லது உன் பிறப்புறுப்பில் உள்ள முடிகளின் எண்ணிக்கையளவு, அல்லது இந்த்த் தடாகத்தில் உள்ள மீன்களின் எண்ணிக்கையளவு தலாக் என்று கூறினால் அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப தலாக் நிகழும். அந்த முடிகள் இல்லாவிட்டால் தலாக் நிகழாது.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்
ஒருவன் தன் மனைவியைப் பார்த்து இந்த நாய் தலாக் என்று கூறினால் தலாக் ஆகிவிடும்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்
உலகத்துப் பெண்கள், அல்லது அகிலத்துப் பெண்கள் தலாக் என்று ஒருவன் கூறினால் அவனது மனைவி தலாக் ஆக மாட்டாள். இந்த மஹல்லாவின் பெண்கள், இந்த வீட்டின் பெண்கள் தலாக் என்று கூறினால் அவனது மனைவி தலாக் ஆவாள்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்
ஒன்பதைத் தவிர, எட்டைத் தவிர, ஏழைத் தவிர நீ பத்து தலாக் என்று கூறினால் இரு தலாக் நிகழும். ஒன்பதைத் தவிர, எட்டைத் தவிர, ஏழைத் தவிர, ஆறைத்தவிர, ஐந்தைத் தவிர, நான்கைத் தவிர, மூன்றைத் தவிர, இரண்டைத் தவிர, ஒன்றைத் தவிர இவனுக்கு நான் பத்து கொடுக்க வேண்டும் என்று கூறினால் என்று கூறினால் ஐந்து கொடுக்க வேண்டும்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்
இப்படி உலகில் யாரும் ஆய்வு செய்த சரித்திரம் உண்டா?
குளிப்பு கடமையான மனைவி, மாதவிடாய் ஏற்பட்ட மனைவி, பிரசவத்தீட்டுள்ள மனைவி ஆக மூன்று மனைவியர் ஒருவனுக்கு இருக்கும் போது உங்களில் மிக அருவருப்பானவள் தலாக் என்று அவன் கூறினால் பிரசவத்தீட்டுள்ள மனைவி தலாக் ஆவாள். உங்களின் அசிங்கமானவள் தலாக் என்று அவன் கூறினால் மாதவிடாய் ஏற்பட்டவள் தலாக் ஆவாள்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்