இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்
நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இந்திய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள். நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தின் பல பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற கலிமாவின் பொருளைத் தக்க முறையில் ஒருவர் அறிந்து கொண்டால் மத்ஹபுக்கும், இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்.
லாயிலாஹ இல்லல்லாஹ் என்றால் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்பது பொருள். இதை ஏற்பவர், அல்லாஹ் தான் அனைவருக்கும் எஜமான்; அனைவரும் அவனது அடிமைகள் என்று வாக்கு மூலம் தருகிறார்.
ஒன்றைக் கூடும் என்று சட்டமியற்றவோ, கூடாது என்று தடை விதிக்கவோ அதிகாரம் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே. இறைவனல்லாத வேறு யாரும் இந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று எவர் நம்பினாலும் அவர் இந்த உறுதிமொழியை மீறியவராகிறார்.
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
(திருக்குர்ஆன்:9:31.)
பெரிய மேதைகளும், மகான்களும், வேத விற்பன்னர்களும், இமாம்களும் அல்லாஹ்வின் அடிமைகளே! அல்லாஹ் இடும் கட்டளைகளுக்குக் கட்டுப்படவும் அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். சுயமாக இறைவனின் வேத ஆதாரமின்றி, இறைத்தூதரின் வழிகாட்டலின்றி எந்த ஒன்றையும் மார்க்கத்தில் கூட்டவோ, குறைக்கவோ எந்த அதிகாரமும் எவருக்கும் இல்லை என்ற கருத்தும் லாயிலாஹ இல்லல்லாஹ்வுக்குள் அடங்கியுள்ளது.
இதற்கு மாறாக நடப்பவர்கள், மறுமையில் சந்திக்கும் விளைவை வல்ல அல்லாஹ் தெளிவாக நமக்கு அறிவிக்கிறான்.
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” (எனவும் கூறுவார்கள்.)
திருக்குர்ஆன் 33:66,67,68
கண்ணை மூடிக் கொண்டு பெரியார்கள், இமாம்கள் கூறுவதை நம்பியவர்கள் மறுமையில் படும்பாட்டை இங்கே அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். வணக்க வழிபாடுகளாகட்டும்! அரசியலாகட்டும்! இல்லற நெறிகளாகட்டும்! இன்ன பிற துறைகளாகட்டும்! அனைத்துமே அல்லாஹ் காட்டித் தந்த வழியில் தான் நடக்க வேண்டும். இதை நிர்ணயிக்கின்ற உரிமையை அல்லாஹ் எவரது கையிலும் ஒப்படைக்கவில்லை என்பதை உணர வேண்டும். முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதன் பொருள் என்ன? முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பது இதன் நேரடிப் பொருளாகும்.
இதனுள் அடங்கியுள்ள கருத்துக்கள் என்ன?
முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் மார்க்கத்தின் பெயரால் எதைச் சொன்னாலும் அது அவர்களாக உருவாக்கிச் சொன்னது அல்ல. அல்லாஹ்விடமிருந்து பெற்றுச் சொன்னதாகும் என்பது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதன் கருத்தாகும். இந்தச் சமுதாயத்துக்கு அவர்கள் தான் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களைத் தவிர எவர் கூறுவதும் மார்க்கமாக ஆகாது. ஏனெனில் எவருக்கும் இறைச் செய்தி வராது என்பதும் இதன் கருத்தாகும்.
இமாம்கள் சொன்னார்கள் என்பதற்காக ஒரு விஷயத்தை மார்க்கம் என்று நாம் எடுத்துக் கொண்டால் இந்த உறுதிமொழியை நாம் மீறியவர்களாவோம். அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய சட்டமியற்றும் அதிகாரம் அந்த இமாமுக்கும் உள்ளது என்ற கருத்து இதனால் ஏற்படும். அல்லாஹ்விடமிருந்து பெற்று அந்த இமாம்கள் கூறினார்கள் என்று கருதினால் அவர்களை அல்லாஹ்வின் தூதர்களாகக் கருதுகிறோம் என்ற கருத்து இதனால் ஏற்படும்.
எனவே இமாம்களையும், மத்ஹபுகளையும் ஒருவர் பின்பற்றினால் அவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதையும், முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதையும் மறுத்தவராவார்.
உண்மை இவ்வளவு தெளிவாக இருந்தும் மத்ஹபுகள்தான் மார்க்கம் என்று மக்கள் நம்புகிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்நூலை வெளியிடுகிறோம். மத்ஹபுச் சட்டங்கள் கேலிக்கூத்தாகவும், மடமையின் தொகுப்பாகவும், அர்த்தமற்ற உளறல்களாகவும், அருவருக்குத் தக்க ஆபாசமாகவும், சமுதாயத்துக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகவும், ஒழுக்கக்கேடுகளைப் பரப்பக் கூடியதாகவும் உள்ளன என்பதை மத்ஹபு சட்டங்களை அதன் அரபு மூலத்துடன் இந்நூலில் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.
இந்தச் சட்டங்களைப் பார்த்த பின்னர் அறிவு நாணயம் உள்ள எவராலும் மத்ஹபில் இருக்க முடியாது. இந்தச் சட்டங்களைப் பார்த்து, சமுதாயம் விழிப்படைந்து அல்லாஹ்வின் பக்கமும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பக்கமும் வர வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வானாக!
மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள் அனைவரும் ஆய்வு செய்ய முடியுமா?
மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது என்று நாம் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் போது அனைவரும் ஆய்வு செய்ய முடியாது என்பதால் பாமர மக்கள் மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறி மத்ஹபை நியாயப்படுத்துகின்றனர். இந்த வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இல்லை.
மத்ஹபை நம்பக் கூடியவர்கள் உலகில் ஒரே ஒரு மத்ஹப் தான் உள்ளது எனக் கூறுவதில்லை. நான்கு மத்ஹபுகள் உள்ளன என்பதுதான் அவர்களின் வாதம். இந்த நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் இவர்களின் கொள்கை.
இதன் கருத்து என்ன?
இருக்கும் நான்கு மத்ஹபுகளையும் ஆய்வு செய்து அதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் இதன் கருத்து. நான்கில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறும் போதே மத்ஹபுவாதிகளும் ஒரு வகையில் ஆய்வுதான் செய்கிறார்கள் என்பது உறுதியாகிறது.நான்கு மத்ஹபுகளையும் சீர்தூக்கிப் பார்த்து அதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால், அதை பாமரர்கள் உட்பட அனைவரும் செய்யமுடியும் என்றால் ஹதீஸ்கள் அடிப்படையில் ஏன் ஆய்வு செய்ய முடியாது?
உலகில் ஒரே ஒரு மத்ஹப் இருந்து, அந்த ஒரு மத்ஹபிலும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒரு விஷயத்தில் ஒரு ஃபத்வா மட்டும் இருக்குமானால் அப்போது தான் இவர்கள் ஆய்வு செய்யாமல் மத்ஹபைப் பின்பற்றுகிறார்கள் என்று ஆகும். எனவே இவர்களின் வாதம் பொய்யானது என்பதை இதிலிருந்தும் அறியலாம். ஒவ்வொரு மத்ஹபிலும் இமாம்கள் மாறுபட்ட தீர்ப்புக்கள் வழங்கியுள்ளனர் எனவும் மத்ஹப்வாதிகள் கூறுகிறார்கள்.
ஒரு மத்ஹபின் அறிஞர்கள் மத்தியில் அனேக முரண்பாடுகளும், மாறுபட்ட ஃபத்வாக்களும் உள்ளன. அந்த ஃபத்வாக்களில் ஒன்றைத் தேர்வு செய்து அபூஹனீஃபா சொன்னது சரியில்லை. அபூயூசுப் சொன்னது தான் சரி என்று ஒன்றை மறுத்து மற்றொன்றைத் தேர்வு செய்கின்றனர். இதிலும் ஆய்வு அடங்கியுள்ளது.
ஒரு ஊரில் ஒரு மத்ஹபைச் சேர்ந்த ஒரு இமாம் கொடுக்கும் ஃபத்வாவுக்கு மாற்றமாக அதே ஊரைச் சேர்ந்த அதே மத்ஹபைச் சேர்ந்த இன்னொரு இமாம் வேறு ஃபத்வா கொடுக்கிறார். அந்த ஊரைச் சேர்ந்த அந்த மத்ஹபைப் பின்பற்றும் மக்கள் அவ்விரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கின்றனர்.
ஒரு மத்ஹபைச் சேர்ந்த இரு இமாம்கள் கூறுவதில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கும் அளவுக்கு பொதுமக்களே ஆய்வு செய்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஆதாரமாகும். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதை விட்டு விலகுவதற்கு இவர்கள் எடுத்துக் காட்டும் இந்தக் காரணம் மத்ஹபைப் பின்பற்றுவதால் நீங்கவில்லையே?
எந்த மத்ஹப் சரியானது? எந்த ஃபத்வா சரியானது என்று ஆய்வு செய்வதற்குப் பதிலாக மத்ஹபைப் புறக்கணித்து விட்டு யார் சொல்வது திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணில்லாமல் உள்ளது என்று ஆய்வு செய்ய முடியாதா?
ஒரு மார்க்க விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குழம்ப வேண்டிய அவசியமில்லை. இறைவன் நமக்கு வழங்கிய அறிவைப் பயன்படுத்தி நடுநிலையோடு நம்மால் இயன்ற அளவு சிந்திக்க வேண்டும். எக்கருத்து ஏற்புடையதாக உள்ளதோ அதை ஏற்க வேண்டும். மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் நியாயமாகச் சிந்தித்தால் பெரும்பாலும் சரியான முடிவை பாமர மக்களாலும் எடுக்க முடியும். சில நேரங்களில் தவறான முடிவை சரி என்று கருதவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு தவறிழைப்பது மனித இயல்பு என்பதால் இறைவன் இதற்குக் குற்றம் பிடிக்க மாட்டான். மாறாக மார்க்க விஷயத்தில் நாம் செய்த முயற்சிக்காக ஒரு நன்மையை வழங்குவான். சரியான முடிவு எடுத்தால் இரண்டு நன்மைகள் வழங்குவான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தீர்ப்பளிப்பதற்காக ஒரு நீதிபதி ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.
அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : புகாரி 7352
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபியவர்களின் ஒரு கட்டளையைப் புரிந்து கொள்வதில் நபித்தோழர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவ்வாறு கருத்து வேறுபாடு கொண்டதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.
அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பனூ குறைளா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை அஸர் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள். வழியிலேயே அஸர் நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், “பனூ குறைளா குலத்தினரை அடையும் வரை நாம் அஸர் தொழ வேண்டாம்” என்று கூறினர்.
வேறு சிலர், அந்த அர்த்தத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை; (வேகமாக அங்கு போய்ச் சேருங்கள் என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம் என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 4119
தூய எண்ணத்துடன் இருவர் ஒரு ஹதீஸை அணுகி அதைப் புரிந்து கொள்வதில் அவ்விருவரும் முரண்பட்டால் இருவருமே குற்றவாளிகளாக மாட்டார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது. திருக்குர்ஆனையோ, ஹதீஸ்களையோ ஆய்வு செய்யாமல் இமாம்களைப் பின்பற்றி மத்ஹப் என்ற பெயரில் முரண்பட்டு நடப்பதற்கு இது ஆதாரமாகாது.
எல்லோருக்கும் அரபுமொழி தெரியாது!
அரபுமொழி தெரியாதவர்களுக்கு குர்ஆன் விளங்குமா?
சாதாரணமானவர்களால் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்?
மொழி பெயர்ப்புகளைத்தானே நம்ப வேண்டியுள்ளது ?
மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் அர்த்தமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும்.
திருக்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்குக் கூட மயக்கத்தை ஏற்படுத்தும் பொய்யான வாதமாகும் இது. திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மைதான். அரபுமொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத்தான் நம்ப வேண்டியுள்ளது என்பதும் உண்மைதான்.
இந்தக் காரணங்களுக்காகத் தான் மத்ஹபுகள் அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியில் தான் சட்டங்களை எழுதினார்களா? அபூஹனீஃபா தவிர மூன்று இமாம்களும் அரபிமொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்களே! அவர்கள் எழுதிய அல்லது எழுதியதாகச் சொல்லப்படும் நூல்கள் யாவுமே அரபி மொழியில் அமைந்தவையே.
பொதுமக்களுக்கு அரபுமொழி தெரியாததால் அவர்களால் திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் விளங்க முடியாது என்ற வாதம் உண்மை என்றால் இவர்கள் மத்ஹபிலும் இருக்கக் கூடாது. மத்ஹபுகளின் இமாம்கள் அரபுமொழியில் தான் சட்டங்களை எழுதினார்கள் என்பதாலும், அந்த இமாம்கள் எழுதியதை மொழிபெயர்ப்புகளை வைத்துத் தான் பொதுமக்கள் புரிந்து கொள்ள முடிகிறது என்பதாலும், அந்த இமாம்களும் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும், அதன் சட்டங்களும் விளங்காது என்று இவர்கள் கூறியிருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும் அப்படிச் செய்யவில்லையே அது ஏன்? மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால் தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றார்கள்.
அரபுமொழியில் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்டங்களைத் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால் இந்த நியாயம் திருக்குர்ஆன், ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்? மத்ஹபுகள் மீது வெறி இருப்பதாலும், குர்ஆன், ஹதீஸ் இவர்களுக்குத் தேவையற்றதாக இருப்பதாலுமே இந்தப் பாரபட்சமான முடிவுக்கு வருகின்றனர்.
தவறானவையும், சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபுமொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால் தவறே இல்லாமல், முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆன், ஹதீஸ்கள் தமிழாக்கம் செய்யப்படும் போது ஏன் விளங்காது? மொழிபெயர்ப்புகளில், மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ, வேறு காரணங்களினாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி எல்லா மொழிமாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும்.
அரபிமொழி அறியாதவர்களால் சிலவேளை இதைக் கண்டுபிடிக்கப்படாமல் போகலாம். அதற்காக குர்ஆன், ஹதீஸை விட்டு விட முடியுமா? விட்டு விட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உள்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும். நம்மால் இயன்றளவு முயற்சித்துப் பார்த்துவிட்டு மொழிபெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன், ஹதீஸை அலட்சியம் செய்வதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். மத்ஹபு ஆலிம்கள் தாங்கள் சொற்பொழிவுகளிலும், புத்தகங்களிலும் குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகின்றார்களே விளங்காத குர்ஆன், ஹதீஸை ஏன் மக்களிடம் கூற வேண்டும்? மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன், ஹதீஸ்களைக் கூறினால் விளங்கும்; மற்ற விஷயங்களுக்கு விளங்காதா?
நாம் எப்படி திருக்குர்ஆனுக்கு தமிழாக்கம் வெளியிட்டுள்ளோமோ அது போல் குர்ஆன் விளங்காது என்ற கொள்கை உடையவர்கள் ஏன் திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளியிட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது..
இந்த வாதம் ஷைத்தானின் மாயவலை. இதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
இமாம்களை விட நாம் நன்றாக அறிய முடியுமா?
இமாம்கள் சிறந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். நபியின் காலத்துக்கு நெருக்கமானவர்கள். அவர்களைப் போல் நம்மால் திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் விளங்க முடியாது என்பதால் மத்ஹபுகளைத் தான் பின்பற்ற வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.
உங்களில் சிறந்தவர்கள் என் காலத்தவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள். அதன் பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து உங்களுக்குப் பின் நாணயமாக நடக்காமல் மோசடி செய்பவர்களும், சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே சாட்சி கூறுபவர்களும், நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாதவர்களும் தோன்றுவார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் எனவும் கூறினார்கள்.
நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695
தமது காலத்தவரையும், அதற்கு அடுத்த காலத்தவரையும் மிகச் சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபித்தோழர்களை நாம் பின்பற்றலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. இதன் பொருள் என்ன என்பதை இதன் இறுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
அதாவது அந்தச் சமுதாயத்தில் நாணயம், நேர்மை, வாக்கை நிறைவேற்றுதல், வலியச் சென்று எதிலும் தலையிடாமல் இருப்பது போன்ற நற்பண்புகள் அதிக அளவில் இருக்கும். பிந்தைய சமுதாயத்தில் அது குறைந்து விடும் என்பது தான் அந்த விளக்கம். நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த காலத்து மக்களின் சிந்தனையிலும், தீர்ப்புகளிலும், முடிவுகளிலும், ஆய்வுகளிலும் எந்தத் தவறும் ஏற்படாது என்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
அவர்களின் நாணயம், நேர்மை காரணமாக சிறந்தவர்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாணயமாகவும், நேர்மையாகவும் இருப்பதால் அவர்களின் சிந்தனையில் தவறே ஏற்படாது என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள். மேலும் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்துக் காட்டிய ஏராளமான ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் தான் இதை விளங்க வேண்டும்.
இமாம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு காலத்தால் நெருக்கமானவர்களாக இருந்தாலும் மார்க்கத்தை அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி செய்யவும் அவர்களை விட பிற்காலத்தவர்களுக்குத் தான் அல்லாஹ் அதிக வாய்ப்புக்களை வழங்கியுள்ளான்.மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும், எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும்.
ஆதாரங்கள் முழுமையாகத் திரட்டப்படாமலும், எளிதில் கிடைக்காமலும் இருந்தால் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.
ஆனால் ஆதாரங்கள் திரட்டப்படுவதால் கிடைக்கும் வாய்ப்பு மிகச் சிறந்த காலத்தவர்களுக்கு இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் மக்களுக்குக் கூறிய அறிவுரைகள் அனைத்தையும் எந்த நபித்தோழரும் அறிந்திருக்கவில்லை. ஒரு நபித்தோழருக்குத் தெரிந்த ஹதீஸ் ஏராளமான நபித்தோழர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின்னர் நபித்தோழர்கள் பல பகுதிகளுக்கும் சென்றார்கள். தாம் தெரிந்து வைத்திருந்த ஹதீஸ்களை அந்தப் பகுதி மக்களுக்கு தேவைக்கேற்ப அறிவித்தார்கள்.
இமாம்கள் காலத்திலும் ஹதீஸ்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இருக்கவில்லை.
நபித்தோழர்களும், அதற்கடுத்த தலைமுறையினரும் தாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அனைத்து ஹதீஸ்களையும் ஆய்வு செய்து தேடிப் பார்த்து தீர்ப்பளிக்கும் வாய்ப்பைப் பெறவே இல்லை. எனவே தான் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக எதை அறிந்தார்களோ அதைப் பின்பற்றினார்கள். மற்ற விஷயங்களில் தாமாக முடிவு செய்வது மட்டுமே அவர்கள் முன் இருந்த ஒரே வழி என்பதால் அதைத் தான் அவர்கள் செயல்படுத்த முடிந்தது.
ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு நபரும் திருக்குர்ஆன் பிரதிகளை வைத்துள்ளோம். ஹதீஸ்கள் அனைத்தும் பாடம் வாரியாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக உள்ளன. அனைவரிடமும் அனைத்து நூல்களும் இல்லாவிட்டாலும் நூலகங்களிலும், மதரஸாக்களிலும் அவை உள்ளன.
சாப்ட்வேர்களாகவும் அனைத்தும் வந்துள்ளன.
எந்தக் கடினமான கேள்விக்கும் அரை மணி நேரம் செலவிட்டு அதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கும் அளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.
இந்தக் காலத்தில் நபித்தோழர்கள் வாழ்ந்தால் நம்மை விடச் சிறப்பாக இந்த வசதியைப் பயன்படுத்தி சரியான ஃபத்வாக்களை வழங்கி இருப்பார்கள். அவர்கள் காலத்தில் நாம் இருந்தால் அவர்களிடம் ஏற்பட்ட தவறுகளை விட அதிகத் தவறு செய்பவர்களாக நாம் இருப்போம் என்பது தனி விஷயம்.
இந்த நிலை ஏற்படும் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில்
صحيح البخاري
வந்தவர்கள் வராதவருக்கு எனது செய்திகளை எடுத்துச் சொல்லுங்கள். எடுத்துச் சொல்பவரை விட யாரிடம் எடுத்துச் சொல்லப்படுகிறதோ அவர்கள் அதனை நன்கு பேணிப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்று முன்னறிவிப்பு செய்தனர்.
நூல் : புகாரி : 1741, 7074
உலகம் அழியும் வரை என்ன நடக்கும் என்பதை அறிந்து வைத்துள்ள இறைவனால் தரப்பட்டதே இஸ்லாம். உலகம் அழியும் வரை தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய வகையில் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தந்த காலத்தை அடைபவர்களால் தான் அதன் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியும். எனவே இது போன்ற விஷயங்களில் நபித்தோழர்கள் புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இன்று நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.
சந்திர மண்டலத்தில் கிப்லாவை எவ்வாறு நோக்குவது?
செயற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா?
குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளை அன்றைக்கு அவர்களிடம் கேட்டால் இதெல்லாம் நடக்குமா என்ன? என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும்.
இன்று நாம் பல நவீன பிரச்சனைகளை நேரடியாகவே சந்திப்பதால் இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் நிச்சயம் குர்ஆனிலும், நபிவழியிலும் வாசகம் இடம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வு செய்தால் அதற்கான விடை கூறக் கூடிய ஆதாரங்களைப் பார்க்க முடிகின்றது.
ஆழ்கடலில் அலைகள் உள்ளன. வானத்தைக் கூரையாக ஆக்கியுள்ளோம். மலைகளை முலைகளாக ஆக்கியுள்ளோம். ஜுதி மலையில் நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக உள்ளது.
இது போல் எண்ணற்ற வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இவற்றை நாம் விளங்கியது போல நபித்தோழர்களால் விளங்கி இருக்க முடியாது. ஆய்வு செய்து இதற்கான விளக்கம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் நாம் வாழ்வதால் நமக்கு இது சாத்தியமாகிறது.
ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்விடம், நிகழும் நேரம் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!
(திருக்குர்ஆன்:6:67.)
எனவே திருக்குர்ஆனும் நபிவழியும் மட்டுமே மார்க்க ஆதாரங்களாகும். இவ்விரண்டைத் தவிர நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது சொல்லும் மார்க்க ஆதாரங்களாகாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அருள் பெற்றவர்களைப் பின்பற்ற அல்லாஹ் அனுமதித்துள்ளானா?
நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்ஃபாத்திஹா அத்தியாயத்தில் அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். எனவே அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்களையும், இமாம்களையும் பின்பற்றலாம் என்று வாதிடுகின்றனர்.
இந்தப் பிரார்த்தனையை நாம் மட்டும் செய்வதில்லை. முதன் முதலில் இதைச் செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். இறைவா! எனக்கு சஹாபாக்கள் வழியையும் இமாம்களின் வழியையும் காட்டு என்ற அர்த்தத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா?
சஹாபாக்களும் கூட இதே பிரார்த்தனையைச் செய்தார்களே! அதன் பொருள் என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் இது இறைவனால் அருளப்பட்டது போல் எண்ணிக் கொண்டு இவ்வாறு வாதிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஏராளமான நபிமார்கள், நல்லவர்கள் சென்று விட்டனர். அவர்கள் நேர்வழியில் சென்றதால் இறைவனின் அருளையும் பெற்றனர். அவர்கள் எந்த வழியில் சென்றனர் என்பதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை. எனவே தான் “இறைவா! இதற்கு முன்னர் நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழியைக் காட்டு என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கற்றுத் தந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் அந்த நேர்வழி எது? என்பதையும் காட்டி விட்டான். இதைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்க முடியும்.
எனவே குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டதையும் தவிர வேறு எதுவும் மார்க்க ஆதாரமாக முடியாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நபித்தோழர்கள் மூலம் தானே குர்ஆன் கிடைத்தது?
நபித்தோழர்கள் வழியாகத்தான் குர்ஆனே நமக்குக் கிடைத்தது. அதை மட்டும் ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது சரியா என்பதும் இவர்களின் தவறான வாதங்களில் ஒன்றாகும்.
இதை மத்ஹபுவாதிகள் கேட்க அருகதை இல்லை. ஏனெனில் மத்ஹப்வாதிகள் நபித்தோழர்களைப் பின்பற்றுவதில்லை. அபூபக்கர் மத்ஹப், உமர் மத்ஹப் என்று மத்ஹபை உருவாக்கி இருந்தால் தான் இக்கேள்வியைக் கேட்க முடியும். ஆனால் மிகச் சிறந்த நபித்தோழர்களைப் புறக்கணித்து விட்டு அவர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் பெயரால் மத்ஹபை உண்டாக்கியவர்கள் இக்கேள்வியைக் கேட்க முடியாது.
ஆயினும் நபித்தோழர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் சிலர் இக்கேள்வியை எழுப்பலாம். அப்படி எழுப்பினால் அதற்கான பதில் இதுதான். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவும், திருக்குர்ஆனின் அற்புதநடை, தெள்ளத் தெளிவான கொள்கை காரணமாகவும் இது இறைவேதம் தான் என்று நபித்தோழர்கள் நம்பினார்கள். அதை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சென்றார்கள்.
நபித்தோழர்கள் அடுத்த தலைமுறையினருக்கு திருக்குர்ஆனைக் கொண்டு வந்து சேர்த்த காரணத்தால் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்? நீதிமன்றத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் ஒரு தபால் ஊழியர் உங்களிடம் கொண்டு வந்து தந்தால் அல்லது நீதிமன்ற ஊழியர் கொண்டு வந்தால் அதை இப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்களா?
நீதிமன்ற உத்தரவை இவர்தான் என்னிடம் கொண்டு வந்து தந்தார். இவர் நீதிமன்ற உத்தரவை நாணயமாக என்னிடம் கொண்டு வந்து தராமல் இருந்தால் அந்த உத்தரவு எனக்குக் கிடைக்காமல் போய் இருக்கும். எனவே இனிமேல் இந்த தபால்துறை ஊழியர் சொல்வதையெல்லாம் நான் பின்பற்றுவேன்; எனக்கு ஏதாவது வழக்கில் தீர்ப்பு தேவைப்பட்டால் இந்த ஊழியரிடமே தீர்ப்பு கோருவேன் என்று நீங்கள் சொல்வீர்களா? அல்லது உலகில் யாராவது இப்படி கூறுவார்கள் என்று கருதுகிறீர்களா?
உலகில் எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளாத இந்த வாதத்துக்கும், இந்த வாதத்துக்கும் கடுகளவு வேறுபாடு கூட இல்லை. நபித்தோழர்கள் தான் நம்மிடம் குர்ஆனைக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்ற வாதமாவது உண்மையா என்றால் அதுவுமில்லை. நமக்கு நபித்தோழர்கள் குர்ஆனைக் கொண்டு வந்து தரவில்லை. நமக்கு முந்திய தலைமுறையினர் தான் கொண்டு வந்து சேர்த்தனர். எனவே அவர்களைப் பின்பற்றலாம் என்று சொல்வோமா?
நமக்கு முந்தின தலைமுறையும் நபியிடம் நேரடியாகக் கேட்டு நமக்குச் சொல்லவில்லை. அவர்கள் தமக்கு முந்திய தலைமுறையினர் சொன்னதைத் தான் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தனர். இப்படியே போய்க்கொண்டு இருந்தால் நபிகள் நாயகம் காலம் முதல் இன்று வரை உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் பின்பற்ற வேண்டும் என்று ஆகாதா?
இதையே இன்னும் தீவிரமாகச் சிந்தித்தால் நபித்தோழர்கள் தான் இதைக் கொண்டு வந்த சேர்த்தனர் என்றால் அவர்கள் நபித்தோழர்கள் என்று எப்படி அறிந்து கொண்டோம்? அவர்களுக்கு அடுத்த தலைமுறை தான் அவர்களை நபித்தோழர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டினார்கள். இப்படியெல்லாம் கூர்மையாகச் சிந்தித்தால் இந்த வாதம் பொருளற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
கருத்து வேறு தகவல் வேறு
நாங்கள், எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது என்று சொல்கிறீர்கள்! அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?” நம்மைப் பார்த்து அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று.
ஒரு மனிதனின் கருத்தையும், அவன் தெரிவிக்கும் தகவலையும் ஒரே மாதிரியாக அணுகுவது அறிவுடமை அல்ல. உலகம் தட்டையானது என்று இப்ராஹீம் என்பவர் கூறினார். உலகம் தட்டையானது என்று இஸ்மாயீல் சொன்னதாக இப்ராஹீம் கூறினார்.
இந்த இரு வாக்கியங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
முதல் வாசகத்தைக் கூறியதற்காக இப்ராஹீமை நாம் கண்டிப்போம். இரண்டாவது வாசகத்தைக் கூறியதற்காக நாம் இப்ராஹீமைக் கண்டிக்க மாட்டோம். உலகம் உருண்டை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்கும் போது இப்ராஹீம் கூறும் கருத்து அந்த உண்மைக்கு மாற்றமாக அமைந்துள்ளதால் அவரது முதல் வாசகத்தை நாம் மறுப்போம். இப்ராஹீம் நம்பகமானவர், ஒழுக்கமானவர், உண்மை பேசுபவர் என்று நாம் அறிந்தாலும் அதன் காரணமாக பூமி தட்டை என்ற அவரது கருத்து சரியாகிவிடாது.
இரண்டாவது வாசகத்தில் இப்ராஹீமின் கருத்து எதுவும் இல்லை. இஸ்மாயீல் கூறிய தகவலைத் தான் அவர் எடுத்துச் சொல்கிறார். உலகம் தட்டை என்ற கருத்தை இப்ராஹீம் கூறவில்லை. எனவே உலகம் உருண்டை என்பதை அவர் மறுத்ததாக ஆகாது. அவர் இஸ்மாயீலின் கருத்தை எடுத்துச் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்வோம்.
இஸ்மாயீல் இப்படி கூறியதாகச் சொல்லும் இப்ராஹீம் உண்மையாளராக இல்லாவிட்டால் அவர் பொய் தகவலைக் கூறினார் என்று கருதுவோம். அவர் நம்பகமானவராக இருந்தால் அவர் உண்மைத் தகவலைக் கூறினார் என்று எடுத்துக் கொள்வோம். முதல் வாசகத்தில் சொல்பவரின் நாணயம் நேர்மை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. கருத்து மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது.
இரண்டாம் வாசகத்தில் இப்ராஹீமின் நாணயம் நேர்மை கவனத்தில் கொள்ளப்படுகிறது. இப்ராஹீமின் கருத்து எதுவும் இதில் இல்லாததால் கருத்தைக் கவனிப்பதில்லை.
இதை ஒரு ஹதீஸின் துணை கொண்டு தெளிவாக விளங்கலாம்.
655 அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவுபெறாததாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள். நாங்கள் இமாமைப் பின்பற்றி தொழுதாலுமா என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்.
அதை உங்களுடைய மனதில் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹாவை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று சொன்னால் என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று அல்லாஹ் கூறுவான்.
அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் என்று சொன்னால் என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று அல்லாஹ் கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான் என்று அல்லாஹ் கூறுவான்.
இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று அடியான் சொன்னால், இதுதான் எனக்கும், என் அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும். என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான். இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று அடியான் சொன்னால், இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான்.
நூல் : முஸ்லிம் 655
அல்ஹம்து அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய ஒருசெய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக உள்ளதால் இந்த ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி கூறினார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மார்க்கத் தீர்ப்பு அளித்துவிட்டு அந்த்த் தீர்ப்புக்கு ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்துக் காட்டுகிறார்கள். அதாவது இமாமைப் பின்பற்றித் தொழுபவரும் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்று கூறிவிட்டு அதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள்.
ஆனால் அபூஹுரைரா (ரலி) அவர்கள் எடுத்துக் காட்டும் இந்த ஹதீஸில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் அல்ஹம்து ஓதவேண்டும் என்ற கருத்து இல்லை. அல்ஹம்து அத்தியாயம் சிறப்பான அத்தியாயம் என்பது தான் இதில் உள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் எந்தக் கருத்துக்கு ஆதாரமாக இதை எடுத்துக் காட்டினார்களோ அந்தக் கருத்து இதில் இல்லாததால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வாதம் தவறானது என்று முடிவு செய்கிறோம். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) கூறும் தகவலை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தகவல்களைப் பொருத்தவரை சொல்பவர்கள் நாணயமானவர்களா என்று பார்த்து முடிவு செய்கிறோம்.
ஆனால் ஒரு கருத்தையோ, தீர்ப்பையோ ஒருவர் கூறினால் அந்தக் கருத்து சரியா என்பதை அறிய சொல்பவரின் நாணயத்தை நாம் கவனிக்க மாட்டோம். ஒருவர் நாணயமானவராக இருப்பதால் அவரது சிந்தனையில் தவறு ஏற்படாது என்று அறிவுடையோர் கருத மாட்டார்கள். பொய்யனும், இட்டுக்கட்டுபவனும், நேர்மையற்றவனுமான ஒருவன் ஐந்தும் ஐந்தும் பத்து என்று கூறினால் அதை நாம் மறுக்க மாட்டோம். அவன் கெட்டவனாக இருந்தாலும் அவன் சொல்லும் கருத்தை எடை போடுவதில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
நாணயமும், நேர்மையும் உள்ள ஒருவன் ஐந்தும் ஐந்தும் ஏழு என்று சொன்னால் அவர் நாணயமானவர் என்ற காரணத்தைக் கூறி இதை ஏற்கமாட்டோம். இந்தக் கணக்கு சரியா தவறா என்பதை மட்டுமே பார்ப்போம். இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இமாம்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை நாம் ஏன் ஏற்கிறோம் என்பதற்கும், அவர்களின் சிந்தனையில் உதித்த கருத்துக்களை நாம் பரிசீலனை செய்து சரியானதை மட்டும் ஏற்று தவறானதை ஏன் நிராகரிக்கிறோம் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளலாம்.