பள்ளிவாசலா? பாடல் அரங்கமா?
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் 72:18
ஆனால் மேற்கண்ட இறைக்கட்டளையை மீறி இறைவனைப் போன்று நபிகள் நாயகத்தையும் அழைக்கும் மௌதுகளைப் பாரீர்.
وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ
என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதனால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.
بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ
என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.
اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ
என்னை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.
நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்: ”அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும். அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும். மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள் வார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (4867)
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டிய பள்ளிவாசல்களில் இந்த ஆராதனைப் பாடல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
சாபத்தை பெற்றுத் தரும் மவ்தும் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் ஸலவாத்தும்!
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!
(அல்குர்ஆன் 33:56)
இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டும், மௌத் என்ற கேடுகெட்ட வரிகள் மூலமும் புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். மௌது பொய்யர்கள் எழுதிய வரிகளை விட நம்முடைய உயிரினும் மேலான நபிகள் நாயகம் கூறிய வரிகளே மேலானது. அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல் : புகாரி 4797