தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்?

பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் ஆண்கள் முதல் வரிசையில் இருந்து தொழுகையை ஆரம்பிக்கின்றனர். இது சரியான வழக்கமான நடைமுறைதான். ஆனால் பள்ளிவாசலுக்குப் பெண்கள் வந்து தொழும் போது ஆண்கள் வரிசை முடிந்தவுடன் அங்கிருந்து தங்கள் வரிசயைத் துவக்காமல் பள்ளிவாசலின் கடைசியில் நிற்கிறார்கள். கடைசி வரிசை தான் சிறந்த்து என்று ஹதீஸ் உள்ளதால் கடைசி வரிசையை முதலில் பூர்த்தி செய்து விட்டு அதற்கு முந்திய வரிசை என்ற அடிப்படையில் வரிசையை நிரப்ப வேண்டும் என்பது தான் அந்தப் புதிய நடைமுறை.

இந்த நடைமுறைக்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸைக் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் 1013

பெண்கள் பள்ளியின் கடைசி இடத்தில் முதல் வரிசையை அமைக்க வேண்டும். அடுத்து வரும் பெண்கள் அவர்களுக்கு முன்பாக இரண்டாவது வரிசையை அமைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

அதாவது ஆண்கள் முன்னால் இருந்து வரிசையை துவக்குவார்கள். இதைப் போன்று பெண்கள் தங்களுடைய வரிசைகளை அமைக்காமல் இதற்கு நேர்மாறாக பின்னால் இருந்து வரிசையைத் துவக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு இவர்கள் மேற்கண்ட நபிமொழியை ஆதாரமாகக் கூறுகின்றனர்.

இந்த நபிமொழியின் சரியான பொருளை அறியாத காரணத்தால் இப்படிப்பட்ட தவறான சட்டத்தைக் கூறுகின்றனர். எனவே இந்த நபிமொழி தொடர்பான சரியான விளக்கத்தை அறிந்து கொள்வோம்.

இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்களின் செயலுக்கு ஆதாரமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் கவனமாகச் சிந்தித்தால் இவர்களின் செயல் இந்த ஹ்தீஸுக்கு எதிரானது என்பதை நாம் அறியலாம்.

முதல் காரணம்

பெண்கள் வரிசையில் கடைசி வரிசை கெட்டது என்று இதில் கூறப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் கடைசி என்று இதில் கூறப்படவில்லை. வரிசைகளில் கடைசி என்றுதான் கூறப்பட்டுள்ளது. கடைசி வரிசை என்று ஒன்றக் கூறுவதாக இருந்தால் அதற்கு முன் சில வரிசைகள் – குறைந்தபட்சம் ஒரு வரிசையாவது இருக்க வேண்டும். அப்படில் இல்லாவிட்டால் அதை கடைசி என்று கூற முடியாது. இவர்கள் கடைசியாக நின்ற வரிசை அளவுக்கு மட்டும் பெண்கள் வந்தால் இவர்கள் கடைசி என்று நினத்த்து முதல் வரிசையாகி விடும்.

இப்போது கடைசி வரிசை சிறந்தது என்ற இவர்களின் ஆசை நிறைவேறாமல் போய்விடும்.

இரண்டாம் காரணம்

எந்த ஒரு தொடரும் ஒன்றிலிருந்து இரண்டு மூன்று என்று தான் தொடங்கும். கடைசியில் இருந்து தொடங்காது. கடைசி இடத்தில் இருந்து துவக்கினால் இவர்கள் முதலில் வந்து அந்த இடத்தை நிரப்பியதால் இவர்கள் தான் முதல் வரிசையாக ஆகிவிடுவார்கள். எது முதலில் அமைந்த வரிசையோ அதுதான் முதல் வரிசையாகும். முதலில் அமைந்த்து கடைசி வரிசையாக ஆக முடியாது.

எனவே இவர்கள் பள்ளியின் கடைசியில் போய் நின்றாலும் இவர்களின் வரிசை தான் முதலில் அமைவதால் இவர்கள் முதல் வரிசையில் நின்றவர்களாகத் தான் ஆவார்கள். இவர்கள் ஆசைப்பட்ட கடைசி வரிசையில் நின்றவர்களாக முடியாது.

மூன்றாவது காரணம்

எது சிறந்த்து என்பதை அறிவதற்கு முன்னர் எது முதல் வரிசை என்பதை நாம் அறியக் கடமைப்பட்டுள்ளோம். இந்தச் செய்தியில் பெண்களின் வரிசைகளில் எது முதலாவது? எது இறுதியானது? என்பதை நபியவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள்.

இதைக் கவனித்தால் பெண்கள் இறுதியிலிருந்து வரிசையைத் துவக்க வேண்டும் என்ற கருத்துக்கு இந்தச் செய்தி நேர்எதிராக இருப்பதை அறியலாம்.

ஆண்களின் இறுதி வரிசையை அடுத்துள்ள பெண்களின் வரிசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் வரிசை என்று இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பெண்களுடைய வரிசையின் துவக்கம் ஆண்களை அடுத்துத் தான் இருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

மேலும் பெண்களின் இறுதி வரிசையை கடைசி வரிசை என்றே நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். எதை நபியவர்கள் இறுதி என்று சொன்னார்களோ அங்கிருந்து வரிசையை துவங்கினால் அதை இறுதி வரிசை என்று சொல்ல முடியாது. மாறாக அது முதல் வரிசையாகிவிடும். முதலாவது என்று நபியவர்கள் கூறியது இறுதி வரிசையாகவும் ஆகிவிடும். இது நபியவர்களின் சொல்லுக்கு மாற்றமான முடிவாகும்.

எனவே பெண்கள் இறுதியிலிருந்து வரிசையைத் துவங்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பது தவறான வாதமாகும். இறுதியில் இருந்து எதையும் துவக்க முடியாது.

சரியான விளக்கம் என்ன?

பிறகு ஏன் நபி (ஸல்) அவர்கள் பெண்களின் வரிசைகளில் முதவாது தீயது என்றும் கடைசி வரிசை நல்லது என்றும் கூற வேண்டும் என்ற கேள்விக்கு வருவோம்.

முதல் வரிசை சிறந்தது என்றும் கடைசி வரிசை கெட்டது என்றும் சொல்லப்பட்டுள்ளதால் தொழுகை துவங்கும் போது பல வரிசையில் நிற்கும் அளவுக்கு ஆட்கள் இருந்தால் தான் இப்படி சொல்ல முடியும்.

இப்படி அதிகமான அளவுக்கு ஆண்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆண்கள பொறுத்தவரை முதலாவது வரிசையில் நிற்பது அவர்களுக்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. எனவே ஆண்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு முதல் வரிசைக்குச் செல்ல ஆசைப்பட வேண்டும். முதல் வரிசையில் இடம் கிடைக்காவிட்டால் அடுத்த வரிசையில் நின்று கொள்ளலாம். இதை உணர்த்தும் விதமாகவே ஆண்களின் வரிசைகளில் முதலாவது சிறந்தது என்றும் இறுதி தீயது என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்படி அதிகமான அளவுக்கு பெண்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆண்களுடன் தொழும் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு முதல் வரிசையில் நிற்க போட்டி போடக் கூடாது.

முதலாவது வரிசையில் இடம் கிடைத்தால் நின்று தொழுது கொள்ளலாம். கிடைக்காவிட்டால் முதலாவது வரிசையில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை. மாறாக பின்னால் நிற்பது தான் சிறந்தது என்று எண்ணி இதை நல்லதாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

பெண்களின் வரிசைகளில் முதலாவது தீயது என்றால் முதலாவது வரிசையில் நிற்கக்கூடாது என்பது இதன் பொருள் அல்ல. முதலாவது வரிசை நிற்பது தவறில்லை என்றாலும் இதில் போட்டிபோட்டு விரும்பி தேர்வு செய்யும் அளவுக்கு இது சிறந்தது அல்ல என்பது இதன் கருத்தாகும்.

எனவே பெண்கள் இறுதியிலிருந்து வரிசையைத் துவக்க வேண்டும் என்று கூறுவதற்கு இந்த நபிமொழியில் எந்த ஆதாரமும் இல்லை. இறுதியில் இருந்து துவக்க முடியாது என்பதால் இதற்கு அர்த்தமும் இல்லை.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களைப் பின்பற்றித் தொழும் போது ஆண்கள் வரிசை எந்த இடத்தில் முடிகின்றதோ அந்த இடத்தில் தான் பெண்கள் வரிசையை ஆரம்பித்துள்ளனர் என்பதை பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

 

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) கூறுகிறார்:

…………….. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட உடன் நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். நபிகள் நாயகம் ஸல் அவர்களுடன் சேர்ந்து தொழுதேன். அப்போது ஆண்களின் முதுகை ஒட்டி அமைந்துள்ள பெண்கள் வரிசையில் நான் நின்று கொண்டேன்.

என்று குறிப்பிடுகிறார்.

நூல் : முஸ்லிம்

ஆண்கள் வரிசை எந்த இடத்தில் முடிகின்றதோ அங்கிருந்து பெண்கள் வரிசை ஆரம்பிக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது. இந்தப் பெண்மணி தாமதமாகச் சென்று இருந்தால் கடைசியில் இருந்து பெண்கள் வரிசை நிரப்பப்பட்டு இவர் நின்ற வரிசை கடைசியாக நிரம்பி இருக்கலாம் என்று சமாளிக்கலாம். ஆனால் இவர் இகாமத் சொன்ன உடன் பள்ளிக்கு வந்து ஆண்களை அடுத்த வரிசையில் சேர்ந்து கொண்டார் என்பது இவ்வாசகத்தில் இருந்து தெளிவாகத் தெரிகின்றது.

மேலும் ஒரு சட்டத்தை நாம் சொல்வதாக இருந்தால் அது போன்றுள்ள அனைத்து இடத்திற்கும் அது பொருந்த வேண்டும்.

பெண்கள் தங்கள் ஸப்பை கடைசியிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றால் பெரிய பள்ளிவாசல்களில் அதை செயல்படுத்த இயலாது. உதாரணமாக மஸ்ஜித் நபவியில் பெண்கள் கடைசி ஸப்பில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றால் பெண்களின் கடைசி ஸப் எது? எந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்?

இவ்வாறு நாம் பார்ப்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]