இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் பாதிஹா அத்தியாயம் ஓத வேண்டுமா

தொழுகையில் அல்ஹம்து அத்தியாயம் அவசியம் ஓத வேண்டும் என்று நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் இமாம் சப்தமிட்டு ஓதும் ரக் அத்களில் மட்டும் அதை செவி தாழ்த்திக் கேட்க வேண்டும் என்றும் எதுவும் ஓதக் கூடாது என்றும் நாம் கூறுகிறோம். இது சரியல்ல. இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களிலும் அல்ஹம்து அத்தியாயம் அவசியம் ஓத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

இது பற்றி விளக்கவும்.

இமாமைப் பின்பற்றி தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களிலும் அல்ஹம்து சூராவைக் கண்டிப்பாக ஓத வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வந்துள்ளன. சிலர் அந்த ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களிலும் கண்டிப்பாக அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்று கூறுகின்றனர்.

தங்களுக்குச் சான்றாக அவர்கள் எடுத்துவைக்கும் ஆதாரங்களை முதலில் காண்போம்.

உப்பாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையை நடத்தினார்கள். கிராஅத் ஓதுவது அவர்களுக்கு சிரமமாகி விட்டது. அவர்கள் தொழுகையை முடித்ததும் “நீங்கள் உங்களுடைய இமாமிற்கு பின்னால் ஓதுகிறவர்களாக நான் காண்கிறேனே” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஆம் (நாங்கள் ஓதுகிறோம்)“ என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபியவர்கள் “அவ்வாறு செய்யாதீர்கள் என்றாலும் உம்முல் குர்ஆன் (அல்ஹம்து சூராவை மட்டும் ஓதிக் கொள்ளுங்கள்). ஏனென்றால் யார் அதை ஓதவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை“ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி (286)

மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக்க் கொண்டு தான் இமாம் சப்தமிட்டு ஓதும் ரக் அத்களிலும் மஃமூம்கள் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்று வாதிடுகின்றனர். ஒரு ஹதீஸை ஆதாரமாக வைத்து வாதிடுவது என்றால் அந்த ஹதீஸ் என்ன சொல்கிறதோ அதை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். ஆனால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி விட்டு இந்த ஹதீஸ் சொல்லாத சட்ட்த்தைத் தான் இவர்கள் தீர்ப்பளிக்கிறார்கள். இந்த ஹதீஸ் சொல்லக் கூடிய கருத்தை மறுக்கவும் செய்கிறார்கள்.

இந்த ஹதீஸ் சொல்வது என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாமாக நின்று ஓதும் போது பின்னால் நின்றவர்கள் சப்தமிட்டு ஓதினார்கள் என்ற கருத்தைத் தான் இந்த ஹதீஸ் தருகிறது. இதன் காரணமாகத்தான் நபியவர்களுக்கு கிராஅத் ஓதுவது மிகவும் சிரமமாக ஆகியிருக்கிறது.

இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுபவர்கள் இமாம் அல்ஹம்து சூராவை ஓதும் போது பின்பற்றித் தொழுபவர்கள் சப்தமிட்டு ஓத அனுமதிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அவர்களே இந்த ஹதீஸைப் பின்பற்றவில்லை என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நபியவர்கள் ஓதிக்கொண்டிருக்கும் போதுதான் பின்னால் நின்ற சஹாபாக்கள் அவர்களோடு சேர்ந்து சப்தமிட்டு ஓதினார்கள் என்பதைப் பின்வரும் செய்திகளிலிருந்தும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மேற்கண்ட செய்தியை அறிவித்த உப்பாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் தான் பின்வரும் சம்பவத்தில் இடம்பெறுகிறார்கள்.

அபூ நுஐம் அவர்கள் சப்தமிட்டு கிராஅத் ஓதும் போது உப்பாதா பின் சாமித் அவர்கள் உம்முல் குர்ஆன் (அல்ஹம்து சூராவை சப்தமிட்டு ஓதுவதை) நான் செவியேற்றேன். நீங்கள் உங்கள் தொழுகையில் ஒன்றைச் செய்ததை நான் கண்டேனே என்று கூறினேன். அது என்ன? என்று அவர் கேட்டார். அபூ நுஐம் சப்தமிட்டு ஓதும்போது நீங்கள் உம்முல் குர்ஆன் (அல்ஹம்து சூராவை சப்தமிட்டு) ஓதுவதை நான் செவியேற்றேன்“ என்று கூறினார்.

அதற்கவர் “ஆம், நபியவர்கள் சப்தமிட்டு ஓதும் சில தொழுகைகளை எங்களுக்குத் தொழுவித்தார்கள் அவர்கள் தொழுது முடித்ததும் ”நான் சப்தமிட்டு ஓதும் போது உங்களில் யாராவது குர்ஆனிலிருந்து எதையேனும் ஓதுகிறீர்களா? எனக் கேட்டார்கள்.

நாங்கள் “ஆம் அல்லாஹ்வின் தூதரே“ என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் “நான் (தொழும் போது) குர்ஆனிலே நான் தடுமாறுகிறேனே! எனக்கு என்ன நேர்ந்தது? என்று (எனக்குள்) எண்ணிக் கொண்டேன். நான் சப்தமிட்டு கிராஅத் ஓதும் போது உம்முல் குர்ஆனைத் தவிர குர்ஆனிலிருந்து வேறு எதையும் உங்களில் எவரும் ஓத வேண்டாம்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஹ்மூத் பின் ரபீஃ

நூல் : தாரகுத்னீ (12) பாகம் : 1, பக்கம் : 320

மேற்கண்ட செய்தி இமாம் சப்தமிட்டு ஓதும் போது அவருடன் அல்ஹம்து சூராவை மட்டும் சப்தமிட்டு ஓதவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் பின்பற்றித் தொழும் மக்களும் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓத வேண்டும் என்று இவர்கள் கூறாமல் பின்பற்றித் தொழும் மக்கள் சப்தமிட்டு அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்று தான் தீர்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் இவ்வாறு இவர்கள் கூறுவதில்லை. இமாம் ஓதும் போது நாம் சப்தமிட்டு ஓதக் கூடாது என்று தான் தீர்ப்பளிக்கிறார்கள். அதாவது எதை ஆதாரம் என்று காட்டுகிறார்களோ அது ஆதாரம் இல்லை என்று இன்னொரு வகையில் காட்டிக் கொள்கிறார்கள். இதிலிருந்தே அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இமாம் சபதமிட்டு ஓதும் ரக்அத்களில் பின்பற்றித் தொழுபவர்கள் மனதிற்குள் ஓதிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிப்புகள் வந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு தொழுகை நடத்தினார்கள். தம்முடைய தொழுகையை நிறைவேற்றியதும் தம்முடைய முகத்தினால் ஸஹாபாக்களை முன்னோக்கி “இமாம் ஓதிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இமாமிற்குப் பின்னால் உஙகள் தொழுகையில் ஓதுகிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அவர்கள் வாய்மூடி மவுனமாக இருந்தார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று தடவை கேட்டதும் நபித்தோழர்கள் ”நாங்கள் அவ்வாறு செய்கிறோம்“ என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் “அவ்வாறு செய்யாதீர்க்ள. உங்களில் ஒருவர் “அல்ஹம்து சூராவை“ தன்னுடைய மனதிற்குள் ஓதிக் கொள்ளட்டும்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்கள் : இப்னு ஹிப்பான் (1844) பாகம் : 5 பக்கம் : 152)

அல் முஃஜமுல் அவ்ஸத் (2680 பாகம் : 3 பக்கம் : 124)

முஸ்னத் அபீ யஃலா (2805 பாகம் : 5 பக்கம் : 187)

அஸ்ஸூனனுல் குப்ரா (3040 பாகம் : 2 பக்கம் : 166)

அல்கிராஅத்து ஹல்ஃபல் இமாம் லில் புகாரி (156 பாகம் : 1 பக்கம் : 161)

இந்த ஹதீஸ் இமாம் சப்தமிட்டு ஓதும் போது அவருடன் சேர்ந்து அல்ஹம்து சூராவை மட்டும் மனதிற்குள் ஓதிக் கொள்ளலாம் என்ற கருத்தைத் தருகிறது.

மேற்கண்ட செய்தியில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் பின்னால் நிற்பவர்கள் சப்தமிட்டு ஓத வேண்டும் என்று முதல் ஹதீசும் சப்தமில்லாமல் ஓத வேண்டும் என்று இரண்டாவது ஹதீசும் கூறுகின்றன.

இதை ஆதாரமாகக் காட்டுவோர் இந்த ஹதீஸ்களுக்கு மத்தியில் உள்ள முரண்பாட்டுக்கு ஒரு விளக்கமும் அளிப்பதில்லை. இரண்டும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாக இருந்தும் சப்தமிட்டு ஓத வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸை ஒரு காரணமும் சொல்லாமல் நிராகரித்து விடுகின்றனர்.

நம்மைப் பொருத்த வரை இந்த இரண்டு ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானவை என்று நம்புகிறோம். இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் பின்பற்றித் தொழக் கூடியவர்கள் சப்தமிட்டு அலஹ்மது அத்தியாயம் ஓதலாம் என்ற நிலையும் சப்தமில்லாமல் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்ற நிலையும் இருவேறு காலகட்ட்த்தில் நடைமுறையில் இருந்துள்ளன. ஆனால் இந்த இரண்டுமே மாற்றப்பட்டு விட்டன. மாற்றப்பட்டு விட்டன என்பதால் இவ்விரண்டையும் கடைப்பிடிக்க அவசியம் இல்லை என்று நாம் சொல்கிறோம்.

இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

அபூ ஹூரைரா (ரலி) அவர்கள அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் சப்தமாக கிராஅத் ஓதி ஒரு தொழுகையைத் தொழ வைத்தார்கள். பிறகு ஸலாம் கொடுத்த பிறகு மக்களை முன்னோக்கி ”சற்று முன்னர் உங்களில் எவரும் என்னுடன் ஓதினீர்களா?” என்று கேடடார்கள். அதற்கவர் “ஆம் அல்லாஹ்வின் தூதரே“ என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் ““நான் (தொழும் போது) குர்ஆனிலே நான் தடுமாறுகிறேனே! எனக்கு என்ன நேர்ந்தது? என்று (எனக்குள்) எண்ணிக் கொண்டேன்“ என்று கூறினார்கள். நபியவர்களிடமிருந்து இதைக் கேட்ட மாத்திரத்தில் நபியவர்கள் எதிலே சப்தமிட்டு ஓதுவார்களோ அந்த்த் தொழுகையில் மக்கள் நபியவர்களுடன் ஓதுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : அஹ்மத் (7485)

இமாமை எப்படி பின்பற்றவேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அதாவது இமாம் தகபீர் சொல்லும் போது நீங்களும் தக்பீர் சொல்லுங்கள். இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் என்று சொன்னால் நீங்கள் ஆமீன் சொல்லுங்கள். இமாம் தக்பீர் சொல்லி ருகூவு செய்யும் போது நீஙக்ளும் தக்பீர் சொல்லி ருகூவு செய்யுங்கள். இமாம் சமிஅல்லாஹு லிமன் ஹமிதா எனக் கூறும் போது நீங்கள் ரப்பனா லகல் ஹம்து எனக் கூறுங்கள். ……….. இமாம் ஓதினால் நீங்கள் வாயை மூடி மவுனமாக இருங்கள் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 612

இமாமைப் பின்பற்றுதலில் சில விஷயங்கள் அவர் செய்வதையே நாமும் செய்ய வேண்டும். சில விஷயங்களில் வேறு விதமாகச் செய்வது தான் பின்பற்றுதல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலள்லால்லீன் எனக் கூறினால் நாம் ஆமீன் கூறுவது தான் அதில் பின்பறுவதாகும் எனவும் இமாம் ஓதினால் நாம் மவுனமாகி விடுவது தான் அதில் பின்பற்றுதலாகும் என்றும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்துகளில் நாம் மவுனமாகத்தான் இருக்கவேண்டும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அல்ஹம்து சூராவை இமாம் ஓதும் போது நாம் ஆமீன் கூறுவதே நாம் ஓதியதைப் போன்றதாகும்.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

அல்குர்ஆன்7:204

குர் ஆன் ஓதப்பட்டால் செவி தாழ்த்த வேண்டும் எனவும் மவுனமாக இருக்க வேண்டும் எனவும் தெளிவாக கட்டளை இடுகிறது. இதை நாம் தக்க முறையில் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வசனத்தை அர்த்தமுள்ளதாகவும் ஆக்க வேண்டும்.

நாம் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போது ஒருவர் நம் அருகில் வந்து குர் ஆனை ஓதினால் நாம் அதை செவி தாழ்த்தி கேட்டு வாயை மூட வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியாது. நாம் மேடையில் உரை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறோம். அப்போது நம் அருகில் ஒருவர் குர்ஆனை ஓதினால் நாம் பிரசங்கத்தை நிறுத்த வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியாது. இப்படி புரிந்து கொண்டால் நாம் ஒரு வேலையும் செய்ய முடியாது. நாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் ஒருவர் வந்து குர்ஆனை ஓத ஆரம்பித்து விட்டால் நாம் பேச்சை நிறுத்திக் கொண்டு மவுனமாகி விட வேண்டும் என்ற கருத்தில் இவ்வசனம் அருளப்பட்டிருக்க முடியாது. அப்படி வைத்துக் கொண்டால் நாம் செய்யும் எந்த வேலையையும் ஒருவர் குர்ஆனை ஓதி தடுத்து நிறுத்தி விட முடியும்.

நமக்காக ஒருவர் குர்ஆன் ஓதும் நிலை மார்க்கத்தில் இருந்தால் அப்போது அதைக் கேட்க வேண்டும் என்று பொருள் கொண்டால் தான் இவ்வசனத்துக்குச் செயல் வடிவம் கொடுக்க முடியும்.

நமக்காக மற்றவர் குர்ஆன் ஓதும் நிலை ஜமாஅத் தொழுகையில் தான் உள்ளது. இமாம் சப்தமிட்டு ஓதுவது நாம் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். நாம் செவி தாழ்த்திக் கேட்பது அவசியம் இல்லை என்றால் இமாம் தனக்காகவே ஓதிக் கொள்கிறார் என்றால் அவர் சப்தமிட்டு ஓதும் அவசியம் இல்லை.

இது தொழுகையில் நமக்காக இமாம் சப்தமிட்டு ஓதுவதைத் தான் குறிக்கும். பொதுவாக எப்போது குர் ஆன் ஓதினாலும் நாம் வாயை மூடிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைத் தராது.

விதண்டாவாதமாக யாராவது இப்படி சொல்வார்களானால் எப்போது குர் ஆன் ஓதினாலும் வாயை மூடி விட வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்று வாதிடுவார்களானால் அந்த வாத்த்தின் படி பார்த்தாலும் இமாம் சப்தமிட்டு ஓதும் போது நாம் வாயை மூடிக் கொள்ள் வேண்டும் என்ற கருத்தும் அத்னுள் அடங்கி விடும். இதற்கு என்ன பொருள் கொடுத்தாலும் இமாம் சப்தமிட்டு ஓதினால் நாம் வாயை மூட வேண்டும் என்பது உறுதியாகி விடும்.

மேலே நாம் எடுத்துக் காட்டிய இரண்டு ஹதீஸ்களின் கருத்தும் இவ்வசனத்துக்கு விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வசனத்தின் கட்டளைக்கு முரணில்லாமல் நடக்க வழி உள்ளதாகக் கூறி பின்வரும் ஹதீஸைச் சிலர் ஆதாரமாக்க் காட்டுகின்றனர். இமாம் கிராஅத்தை நிறுத்தும் போது ஓதலாம் என்ற கருத்தில் வரக்கூடிய அந்தச் செய்தி மிக மிகப் பலவீனமானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யார் கடமையான அல்லது உபரியான தொழுகைகளைத் தொழுகிறாரோ அவர் அதிலே “உம்முல் கிதாப் (அல்ஹம்து சூராவை)யும் அதனுடைய வேறொரு சூராவையும் ஓதிக் கொள்ளட்டும். அல்ஹம்து சூராவுடன் நிறுத்திக் கொண்டாலும் அது அவருக்குப் போதுமானதாகும். இமாம் சப்தமிட்டு ஓதும் போது யார் அவருடன் ஒரு தொழுகையைத் தொழுகிறாரோ அவர் இமாம் நிறுத்துமிடங்களில் “அல்ஹம்து சூராவை” ஓதிக் கொள்ளட்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் அவருடைய தொழுகை குறை உடையதாகும். முழுமையற்றதாகும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூற்கள் : தாரகுத்னீ (15 பாகம் : 1 பக்கம் : 320)

ஹாகிம் ( 868 பாகம் : 1 பக்கம் 364)

அல்கிராஅத்து ஹல்ஃபல் இமாம் லில்பைஹகி (143 பாகம் : 1 பக்கம் : 153)

மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் “முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் உபைத் பின் உமைர்“ என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இந்தச் செய்தியை பதிவு செய்த இமாத் தாரகுத்னீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். இமாம் பைஹகீ அவர்களும் இவரைப் பலவீனமானவர் என்ற கூறியுள்ளார்கள். எனவே இது ஆதாரத்திற்கு தகுதியற்ற பலவீனமான செய்தியாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed