உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது?
எம்.ஐ. சுலைமான்
பிரமிப்பூட்டும் இந்த உலகத்தை இறைவன் எப்படிப் படைத்தான்? எத்தனை நாட்களில் படைத்தான் என்பதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
அல்குர்ஆன் 21:30
வானம் பூமி இரண்டும் இணைந்திருந்து பின்னர் அவற்றை இறைவன் பிரித்தெடுத்துள்ளான்.
அதன் பின்னர் புகை மண்டலம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்களை அல்லாஹ் உருவாக்கியுள்ளான்.
பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்.
அல்குர்ஆன் 41:11
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரேயொரு சிறிய பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச் சிதறியதால் அதன் துகள்கள் புகை மண்டலமாகப் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பின்னர், அந்தத் துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும், இன்னபிற கோள்களாகவும், துணைக் கோள்களாகவும், கோடானுகோடி விண்மீன்களாகவும் உருவாயின என்ற கருத்தை திருக்குர்ஆன் தருகிறது.
இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது.
எத்தனை நாட்களில் படைத்தான்?
இவ்வுலகம் முழுவதையும் இறைவன் எத்தனை நாட்களில் படைத்தான்? என்ற கேள்விக்கும் திருக்குர்ஆனில் பதில் சொல்லப்பட்டுள்ளது.
அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.
அல்குர்ஆன் 25:59
இந்தக் கருத்து திருக்குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
வானங்கள், பூமி மற்றும் அதற்கு இடைப்பட்ட பொருட்களை அல்லாஹ் மொத்தம் ஆறு நாட்களில் படைத்திருக்கின்றான். இதை விரிவாகவும் சுருக்கமாகவும் திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.
பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்?
அல்குர்ஆன் 41:9
நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
அல்குர்ஆன் 41:10
இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.
அல்குர்ஆன் 41:12
வானம் பூமியைப் படைக்க ஆறு நாட்கள் என்று பொதுவாக சொல்லப்படுவதன் பொருள் :
வானத்தைப் படைக்க இரண்டு நாட்கள்,
பூமியைப் படைக்க இரண்டு நாட்கள்,
பூமிக்குள் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள்,
ஆக ஆறு நாட்கள் என்பது இதன் பொருள் என்று திருக்குர்ஆன் தெளிவாக விளக்கியுள்ளது.
அதே நேரத்தில் சில நபிமொழிகளில் இந்த கருத்துக்கு மாற்றமாக செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவை எவை? என்பதையும் அதன் தரத்தையும் பார்ப்போம்.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (8 / 127)
7231 – حَدَّثَنِى سُرَيْجُ بْنُ يُونُسَ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِيَدِى فَقَالَ « خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الاِثْنَيْنِ وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاَثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلاَمُ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِى آخِرِ الْخَلْقِ وَفِى آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை) படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்’’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (5379)
இதே செய்தி இப்னுஹுஸைமா (1736), முஸ்னத் அபீயஃலா (6132), அஹ்மத் (7991), பைஹகீ (17705), முஸ்னத் பஸ்ஸார் (8228), நஸாயீ (10943), தப்ரானீ-அவ்ஸத் (3232) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
- சனிக்கிழை – பூமி
- ஞாயிறு – மலைகள்
- திங்கள் – மரங்கள்
- செவ்வாய் – துன்பம்
- புதன் – ஒளி
- வியாழன் – உயிரினம்
- வெள்ளிக்கிழமை – ஆதம்
உலகத்திலுள்ள அனைத்து பொருட்களும் உருவாக ஏழு நாட்கள் ஆனதாக இந்த செய்தி கூறுகிறது.
மொத்த உலகத்தை அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக திருக்குர்ஆன் சொல்கிறது. ஆனால் இந்தச் செய்தி ஏழு கிழைமைகளையும் குறிப்பிட்டு ஏழு நாட்கள் என்ற கருத்தைத் தருகிறது.
மேலும் பூமி மற்றும் பூமியில் உள்ள பொருட்களை உருவாக்க நான்கு நாட்கள் ஆனது என்று திருக்குர்ஆன் (41:10) கூறுகிறது. ஆனால் இந்தச் செய்தியில் மூன்று நாட்கள் என்று சொல்லப்படுகிறது. சனிக்கிழமை பூமியையும் ஞாயிறு அன்று மலைகளையும் திங்கள் அன்று மரங்களையும் படைத்ததாக (மொத்தம் மூன்று நாட்கள் என்று) சொல்லப்பட்டுள்ளது.
துன்பத்தை செவ்வாய்க் கிமையில் படைத்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்பத்தை எந்தக் கிழமையில் படைத்தான் என்று சொல்லப்படவில்லை. அதை ஒருநாள் என்று சேர்த்தால் எட்டுநாட்கள் ஆகிவிடும்.
இந்தச் செய்தி திருக்குர்ஆனின் கருத்து முரணாக இருப்பதால் இது பலவீனமான செய்தி என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இந்தச் செய்தியைப் பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு இதன் விமர்சனத்தைப் பதிவு செய்கிறார்கள்.
هَذَا حَدِيثٌ قَدْأَخْرَجَهُ مُسْلِمٌ فِي كِتَابِهِ ، عَنْ سُرَيْجِ بْنِ يُونُسَ ، وَغَيْرِهِ ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ. وَزَعَمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ أَنَّهُ غَيْرُ مَحْفُوظٍ لِمُخَالَفَتِهِ مَا عَلَيْهِ أَهْلُ التَّفْسِيرِ وَأَهْلُ التَّوَارِيخِ.
இந்தச் செய்தியை இமாம் முஸ்லிம் அவர்கள் தனது (ஸஹீஹ் முஸ்லிம்) நூலில் (5379) பதிவு செய்துள்ளார்கள். சில கல்வியாளர்கள் இந்தச் செய்தி சரியானதல்ல என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்கள், வரலாற்று ஆசிரியர்களுடைய கருத்துக்கு முரணாக அமைந்திருக்கிறது.
முஸ்லிமில் உள்ள ஹதீஸ் தொடர்பாக இதே கருத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டு பல ஹதீஸ்கலை அறிஞர்கள் இதே கருத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
النكت على مقدمة ابن الصلاح – (2 / 269)
وكذا ضعفه البيهقي وغيره من الحفاظ وقالوا هو خلاف ظاهر القرآن من أن الله خلق السموات والأرض في ستة أيام والحديث أخرجه مسلم في صحيحه من جهة ابن جريج عن إسماعيل به
இதைப் போன்று பைஹகீ மற்றும் அவரல்லாத ஹதீஸ்கலை நிபுணர்களும் இதை (ஏற்றுக் கொள்ள முடியாத) பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள். (அதற்கு காரணமாக) அல்லாஹ் வானங்கள், பூமியை ஆறு நாட்களின் படைத்தான் என்ற திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்கள்.
நூல் : அந்நுகத், பாகம்: 2, பக்கம்: 269
المنار المنيف – (1 / 85)
وهو كما قالوا لأن الله أخبر أنه خلق السماوات والأرض وما بينهما في ستة أيام وهذا الحديث يقتضي أن مدة التخليق سبعة أيام والله تعالى أعلم
அல்லாஹ் வானங்கள், பூமியையும் அதற்கு இடைப்பட்டவைகளையும் ஆறு நாட்களில் படைத்துள்ளான் என்று அல்லாஹ் தஆலா (திருக்குர்ஆனில்) கூறுகின்றான். ஆனால் அந்தச் செய்தி படைப்பின் மொத்த காலம் ஏழுநாட்கள் என்று சொல்கிறது. (எனவே இந்த செய்தி தவறானது என்று) அறிஞர்கள் சொல்கின்றனர்.
நூல் அல்மனாருல் முனீஃப்,பாகம் 1, பக்கம் 85
இந்தச் செய்தி நபிகளார் கூறியது கிடையாது. இது கஅபுல் அஹ்பார் அவர்களின் சொந்தக் கருத்து என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
التاريخ الكبير – 1 / 413
1317 – ايوب بن خالد بن ابى ايوب الانصاري عن ابيه عن جده ابى ايوب ان النبي صلى الله عليه وسلم قال له إذا اكننت الخطيئة قم توضأ فأحسن وضوءك ثم صل ما كتب الله لك، قاله لى يحيى بن سليمان عن ابن وهب اخبرني حيوة عن الوليد بن ابى الوليد ان ايوب حدثه، وروى اسمعيل بن امية عن ايوب بن خالد الانصاري عن عبد الله بن رافع عن ابى هريرة عن النبي صلى الله عليه وسلمقال خلق الله التربة يوم السبت، وقال بعضهم عن ابى هريرة عن كعب وهو أصح.
(இந்த செய்தி) அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக நபிகளார் கூறியதாக இடம்பெற்றுள்ளது. சிலர் இது கஅபுல் அஹ்பார் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இடம்பெற்றுள்ளது. (நபிகளார் கூறியதாக இல்லை) கஅபுல் அஹ்பார் கூற்று என்பதே சரியானது என்று குறிப்பிடுகிறார்கள்.
நூல்: அத்தாரிகுல் கபீர்,பாகம்: 1, பக்கம்: 413
இக்கருத்தை இப்னு கஸீர் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
تفسير ابن كثير / دار طيبة – (6 / 359)
وقد علَّله البخاري في كتاب “التاريخ الكبير” فقال: “وقال بعضهم: أبو هريرة عن كعب الأحبار وهو أصح” ، (6) وكذا علَّله غير واحد من الحفاظ، والله أعلم.
இந்தச் செய்தியை புகாரி அவர்கள் அத்தாரிக்குல் கபீர் என்ற நூலில் குறையுடையது என்று குறிப்பிட்டுள்ளார்கள். சிலர் இது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார் கூறியதாக இடம்பெற்றுள்ளது. (நபிகளார் கூறியதாக இல்லை) இதுவே சரியானது என்று (புகாரி) குறிப்பிடுகிறார்கள். அறிஞர்களில் ஒன்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இந்தச் செய்தியை குறையுடையது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்,
பாகம்: 6,பக்கம்: 359
உலகம் ஏழு கிழமைகளில் படைக்கப்பட்டது என்று வரும் செய்தி திருக்குர்ஆனின் செய்திகளுக்கு மாற்றமாக அமைந்துள்ளதால் இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாகும்.