படைத்தவனை மறவாதீர்!
ஏக இறைவனைப் பற்றிய எண்ணம் என்றும் நம்மிடம் பசுமையாக இருக்கும் வன்ணம், பல்வேறு பிரார்த்தனைகள், திக்ருகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அடிக்கடி அல்லாஹ்விடம் ஆதரவு தேடுவதில் நீடித்திருக்க வேண்டும்.
மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் (5235)
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவகம் புரிந்து வந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும் போதெல்லாம் “இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’’ என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புஹாரி (5425)
பெரும்பாடுபட்டு மனனம் செய்த துஆக்கள், பலருக்கும் நாளடைவில் மறந்துவிடுவதற்குக் காரணம், தினமும் சொல்லாமல் இருப்பதே ஆகும். ஆகையால், பிரார்த்தனைகளை ஒருசில நாட்கள் மட்டும் உச்சரிக்காமல், தினந்தோறும் நினைவுகூர வேண்டும். இதுபோன்று, எப்போதாவது தவ்பா தேடிக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இல்லாமல் வல்ல நாயனிடம் அதிகமாக கையேந்தி மன்றாட வேண்டும்.