தியாகதிருநாள்உரைக்காக:

கொள்கை_உறுதி:

”அல்லாஹ்வின் அருளால் இறைவன் நமக்கு வழங்கிய இரு பெருநாட்களில் ஒரு பெருநாளான ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்காக நாமெல்லாம் ஒன்று கூடுயிருக்கின்றோம்.

இந்த ஹஜ் பெருநாள் என்பது நபி இப்ராஹீம் அலை அவர்களின் தியாகத்தையும், அவர்களுடைய குடும்பத்தார்கள் செய்த தியாகத்தையும் பின்னணியாக கொண்டது தான் இந்த தியாக திருநாள்.

தியாகத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்த நபி இப்ராஹீம் அலை அவர்களின் மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்பது தான் இறைவனின் கட்டளை.

அல்லாஹ் தன் திருமறையில்,

(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச்செய்தி அறிவித்தோம்.

அவர் இணைகற்பிப்பவராக இருந்ததில்லை.

திருக்குர்ஆன் 16:123

இப்ராஹீம் அலை மார்க்கத்தில் இருக்க வேண்டும் என்றால் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், அவனுக்கு இணை கற்பிக்கக்கூடாது.

அதைப்போன்று எகத்துவத்தை எடுத்து சொல்ல வேண்டும் ஷிர்க்கை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும்(தர்கா, தகடு, தாயத்து, மெளலுது, கத்தம் பாத்திஹா போன்ற இணை வைப்பு விசயங்களை எதிர்த்து )

ஏகத்துவ தந்தை, இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது.

தனது மனைவி, மக்களைத் தவிர, பெற்ற உறவும் பகையாக இருந்தது. ஊர் மக்களிடம், உலக மக்களிடம் அவர்கள் செய்த பிரச்சாரத்தை, ஆற்றிய வீரச் செயலை, அவரிடம் மக்கள் நடத்திய விசாரணையை, அதற்கு அவர் அளித்த ஆணித்தரமான பதிலைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும், அதில் ஏராளமான படிப்பினைகள் உள்ளன.

இப்ராஹீம் ஒரு #சமுதாயமாகவும்,
அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணைகற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.

திருக்குர்ஆன் 16:120

1)சமுதாய மக்களிடம் சத்திய பிரச்சாரம்:

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் #சிலைகளை_உடைப்பேன்” (என்றும் கூறினார்) அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.

“நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்” என்று அவர்கள் கூறினர்.

“ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர்.

“அவரை மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்” என்றனர். “இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார்.

உடனே #விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.

பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர். “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் #பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

(சுருக்கம் )

அல்குர்ஆன் 21:51-67

நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர்.

அல்குர்ஆன் 21:68

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றி விடுகின்றான்.

“நெருப்பே! இப்ராஹீமின் மீது #குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு” என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை இழப்பை அடைந்தோராக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 21:69, 70

2) #தன்தந்தையிடம்சத்திய_பிரச்சாரம்:

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். “என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

“என் தந்தையே! உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன்”

“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான்” என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன்’ (என்றார்.)

“இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!” என்று (தந்தை) கூறினார்.

“உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 19:41-47

3) #அரசனிடம்சத்தியபிரச்சாரம்:

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 2:258

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்.

“உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்’ என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 2:124

4) #தியாகபெண்மணிஹாஜர்(அலை):

அன்னை ஹாஜராவின் அரிய தியாகம்
அம்மையார் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேற்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்து விட்டார்கள்.

அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரிச்சம் பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர் பை ஒன்றையும் வைத்தார்கள்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் பின் தொடர்ந்து வந்து, “இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள்.

ஆகவே, அவர்களிடம் ஹாஜரா (அலை) அவர்கள், “அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், “அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லி விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது) நடந்து சென்று மலைக்குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்த போது

தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்.

“எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக” என்று இறைஞ்சினார்கள்.

(அல்குர்ஆன் 14:37)
(சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3364

தண்ணீரில்லாத, தானியங்கள் இல்லாத பாலைவனத்தில், நீண்ட காலத்திற்குப் பின் பெற்ற பிள்ளையையும் சேர்த்து விட்டு விட்டு வருகின்றார்கள். இதில் அன்னை ஹாஜரா அவர்கள் கூறும் வார்த்தையை இங்கு கவனிக்க வேண்டும். “அவன் என்னைக் கைவிட மாட்டான்” என்ற வார்த்தை அனைத்துப் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களின் உள்ளங்களிலும் அழுத்தமான இறை நம்பிக்கையைப் பதிய வைக்கின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனை உள்ளத்தைப் பிழிந்து, கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது. தண்ணீருக்காக அவர்கள் மேற்கொண்ட அலைச்சல் இன்றைக்கு ஹாஜிகளின் வணக்கமாக ஆகி விட்டது.

கதறி அழுத இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலடியில் பொத்துக் கொண்டு, பீறிட்டு வந்த தண்ணீர், அன்னையாருக்கும் இஸ்மாயீல் நபிக்கும் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்கும் புனிதப் பொதுவுடைமையாக, ஓர் அற்புதமாக அமைந்திருக்கின்றது. அன்னை ஹாஜராவின் தியாகம் அளப்பரியது, அரிதிலும் அரிதானதாகும்.

5) #தியாகநபியின்தியாக_மகன்:

அவரது இறைவன் “கட்டுப்படு!’ என்று அவரிடம் கூறிய போது

“அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்” என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 2:131

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நீண்ட நாட்கள், அவர்கள் முதுமையை அடைகின்ற வரை குழந்தை இல்லை. ஆனாலும் அவர்கள் அல்லாஹ்விடம் எந்த அவநம்பிக்கையும் கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள்.

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)

அல்குர்ஆன் 37:100

அவர்கள் கேட்டது போன்றே ஸாலிஹான குழந்தையே அமைந்து விடுகின்றது.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று (இப்ராஹீம்) கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.

அல்குர்ஆன் 37:104

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம்.

திருக்குர்ஆன் 37:105

இது தான் மகத்தான சோதனை.

திருக்குர்ஆன் 37:106

பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.

திருக்குர்ஆன் 37:107

பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

திருக்குர்ஆன் 37:10

கருத்துக் கேட்கும் தந்தையிடம் கழுத்தைத் தரத் தயார் என்று கூறி, “அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று கூறும் மகன் உண்மையிலேயே ஸாலிஹான குழந்தை தான்.

இப்படித் தியாக மிக்க தந்தைக்குத் தப்பாத ஒரு தியாக மகனாக இஸ்மாயீல் (அலை) அவர்கள் திகழ்கின்றார்கள்.

மொத்தத்தில் மனைவியும் மக்களும் இப்ராஹீம் நபியின் தியாகத்திற்கு எல்லா வகையிலும் துணை நிற்கும் சிறந்த குடும்பமாக விளங்கினர்.

இதனால் தான் அல்லாஹ் அவரை உற்ற தோழர் என்று செல்கிறான் :

அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.

திருக்குர்ஆன் 4:125

இப்படிப்பட்ட தியாகத்தை உணர்ந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு கட்டுப்படக்கூடியவர்களாக வாழ்ந்து இஸ்லாத்திற்காக தியாக செய்யும் தியாகிகளாக உருவாக வேண்டும் என்பது தான் தியாக திருநாள் நமக்கு தரும் பாடம்…..


About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *