சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் நல்லமல்கள்
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழைவித்து, நரகத்தை விட்டும் தூரமாக்கும் ஒரு நற்காரியத்தை எனக்கு அறிவித்துத் தாருங்கள்❓ என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ மிகப்பெரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டுவிட்டாய். அல்லாஹ் யாருக்கு அதனை இலேசாக்குகின்றானோ அவருக்கு அது இலேசானதாகும்.
அல்லாஹ்விற்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்காமல் அவனை நீ வணங்குவதும்,
தொழுகையை நிலைநாட்டுவதும்
ஸகாத்தை நிறைவேற்றுவதும்
(கஅபா எனும்) அந்த ஆலயத்திற்கு பயணம் செய்வதற்கு நீ சக்தி பெற்றால் அதனை நீ ஹஜ் செய்வதும் ஆகும்
என்று பதிலளித்தார்கள்.
பிறகு நன்மையின் வாயில்களை உனக்கு நான் அறிவிக்கட்டுமா❓
- நோன்பு (அது பாவங்களிலிருந்து தடுக்கின்ற) கேடயமாகும்,
- தர்மம், (அது) தண்ணீர் நெருப்பை அணைப்பது போன்று பாவங்களை அழித்துவிடும்,
- மனிதன் நடுநிசியில் தொழுகின்ற தொழுகை
இதனை தொடந்து (பின்வரும் வசனத்தை) ஓதினார்கள்:
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள் (அல்குர்ஆன் 32:16) என்று கூறிவிட்டு,
பிறகு இம்மார்க்கத்தின் தலையாயதையும், அதனுடைய தூணையும், அதனுடைய திமிழ் போன்ற உயர்ந்த பகுதியையும் உனக்கு அறிவிக்கட்டுமா❓ என்று கேட்டார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதரே! ஆம், அறிவியுங்கள் என்று பதிலளித்தேன்.
அதற்கு நபியவர்கள் இம்மார்க்கத்தின் தலையாயது இஸ்லாம் ஆகும். அதனுடைய தூண் தொழுகையாகும், அதனுடைய திமிழ் போன்ற உயர்ந்த பகுதி (அல்லாஹ்வின் பாதையில்) அறப்போர் புரிவதாகும் என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் இவை அனைத்தையும் அழிக்கக் கூடிய விஷயத்தை உனக்கு நான் அறிவிக்கட்டுமா❓ என்று கேட்டார்கள்.
அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்று கூறினேன்.
நபி (ஸல்) அவர்கள் தமது நாவினைப் பிடித்து இதை நீ பாதுகாத்துக் கொள் என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்? என்று நான் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனது தாய் உனக்கு பாரமாகட்டும். மக்களை முகம் குப்புற நரகத்தில் விழச் செய்வது அவர்கள் நாவுகள் செய்கின்ற அறுவடையைத் தவிர வேறு என்ன (இருக்கமுடியும்)? என்று பதிலளித்தார்கள்.
நூல்: திர்மிதி 2541
——————————
ஏகத்துவம்