நரகவாசிகளுக்கு விடுதலை கிடைக்கும் மகத்தான நாள்
அரஃபா நாள் குறித்து இன்னும் ஏராளமான சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.
இறைவன் நரகவாசிகள் மீது கொண்டுள்ள கோபத்தைக் கருணையாகவும் அன்பாகவும் மாற்றி, பெரும் பெரும் கூட்டமாக வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருக்கின்ற நரகவாசிகளுக்கு விடுதலை கொடுக்கும் நாள் இந்த அரஃபா நாள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை.
அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். “இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?’’ என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.
ஆதாரம்: முஸ்லிம் 2623
அரஃபா நாளில் அல்லாஹ் நரகவாசிகளுக்கு விடுதலை கொடுக்கின்றான். நரகத்திலிருந்து அதிகமான மக்களை வெளியே கொண்டு வருகின்ற இந்தக் காரியத்தை, சிறப்பிற்குரிய இந்த அரஃபா நாளில் தான் இறைவன் செயல்படுத்துகின்றான்.
மேலும், நபிகள் நாயகம் கூறும் போது, அரஃபா தினத்தில் அல்லாஹ் நரகவாதிகளுக்கு விடுதலை கொடுப்பது போன்று வேறு எந்த நாளிலும் நரகத்திலிருந்து விடுதலை அளிப்பதில்லை என்ற வாசகத்திலிருந்து அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான, தனது அருள் மழையைப் பொழிகின்ற, மன்னிப்பின் வாசலை திறந்து விடுகின்ற புனித நாள் இந்த அரஃபா நாள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
மேலும், அல்லாஹ் அரஃபா பெருவெளியில் கூடி இருக்கின்ற ஹாஜிகளை நெருங்கி வந்து, இவர்கள் எதற்காக இங்கே குழுமி இருக்கின்றார்கள் என்று கேட்டு, தனது கருணையை அவர்கள் மீது பொழிந்து கொண்டிருக்கின்ற அற்புத நாள் இந்த அரஃபா நாள்.