பயணத்தொழுகை சுருக்கப்பட்டது!
அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (350)
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது பிரயாணத்தொழுகை எந்த விதமான மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்து இரண்டு ரக்அத்தாகவே இருந்தது என்றக் கருத்தைத் தருகிறது. ஆனால் திருக்குர்ஆன் பயணத்தொழுகையைப் பற்றி பேசும்போது நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டு ரக்அத்துகளாக பயணத்தொழுகை சுருக்கப்பட்டது என்று கூறுகிறது.
நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக்கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.
அல்குர்ஆன் (4 : 101)
முழுமையான ஒன்றிலிருந்து தான் சுருக்கமுடியும். பயணத்தில் தொழுகையை சுருக்குவதாக இருந்தால் முதலில் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்று சட்டம் இருந்திருக்க வேண்டும். இந்த நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டாக பயணத்தில் தொழுகை குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் பயணத்தொழுகையை குறிப்பிடும் போது நான்கிலிருந்து சுருக்கப்பட்டது என்று கூறாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்தே பயணத்தொழுகை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இரண்டுரக்அத்துகளாகவே இருப்பதைப் போன்று கூறியுள்ளார்கள். எனவே இவர்கள் கூறும் கருத்து குர்ஆனிற்கு முரண்பாடாக இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறினோம்.
முரண்பாடில்லை
இந்த ஹதீஸை சரிகாணுபவர்கள் இதற்கு கூறிய விளக்கத்தையும் நாம் ஆராய்ந்ததன் மூலம் கிடைத்த விளக்கத்தையும் வைத்துப் பார்த்தால் இந்த ஹதீஸை முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இவர்கள் கூறும் விளக்கத்திற்கு முறையான ஆதாரங்கள் இருப்பதால் இந்த விளக்கத்தை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும்.
சத்தியத்தை தெரிவது தான் நம்முடைய நோக்கமே தவிர நாம் கூறிய கருத்துக்களை எப்படியாவது சரிகாண வேண்டும் என்று நாம் பிடிவாதம் பிடிக்கமாட்டோம். எனவே ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை பின்வரும் முறையில் முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழும் போது கடமையானத் தொழுகை இரண்டு ரக்அத்துகளாக இருந்தது. மதீனாவிற்கு அவர்கள் வந்தவுடன் நான்கு ரக்அத்துகளாக மாற்றப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(மக்காவில்) தொழுகை இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பின் நான்கு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. மேலும் பிரயாணத் தொழுகை மட்டும் முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறே (இரண்டு ரக்அத்தாகவே இருக்கட்டுமென்று) விட்டுவிடப்பட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (3935)
மதீனாவிற்கு வருவதற்கு முன்பு மக்காவில் இரண்டு ரக்அத்துதான் கடமையாக்கப்பட்டிருந்தது என்றக் கருத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் சொல்லவில்லை. அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்களும் இந்தக் கருத்தை கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை லுஹர் தொழுகையை இரண்டு இரண்டாகத் தான் தொழுதுவந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான் பாகம் : 6 பக்கம் : 143
தொழுகையை இரண்டாக சுருக்கிக் கொள்ளுவதற்கு அனுமதியளிக்கும் வசனம் மதீனாவில் இறங்கியது என்றக் கருத்தை இப்னுல் அசீர் தவ்லாபீ மற்றும் சுஹைலீ போன்ற அறிஞர்கள் பதிவுசெய்துள்ளார்கள் .
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த உடன் தொழுகை நான்காக மாற்றப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் இரண்டு ரக்அத்தை சுருக்கிக்கொள்ளலாம் என்று வசனம் இறங்கியது.
இதனால் ஊரில் நான்கு ரக்அத்துகளாகவும் பிரயாணத்தில் இரண்டு ரக்அத் தொழுகவும் கடமையாக்கப்பட்டது. இறுதியில் முடிவாக்கப்பட்ட இந்த நிலையைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் முரண்பாடு வராது.
தொழுகை நான்கு ரக்அத்துகளாக மாற்றப்ட்டது. பின்பு வசனம் இறங்கியதால் இரண்டாக குறைக்கப்பட்டது என்ற விளக்கம் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் இல்லாததால் அது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறினோம். ஆனால் இந்த விளக்கம் வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகிவிட்டதால் முரண்பாடு எதுவும் இல்லாமல் இதை விளங்கிக்கொள்ள முடியும்.
முதலில் இரண்டு ரக்அத் கடமையாக இருந்தது. மதீனாவிற்கு வந்த உடன் நான்காக மாற்றப்பட்டதால் முன்பிருந்த தொழுகையை விட இரண்டு ரக்அத் அதிகமாக்கப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் குறைத்துக்கொள்ளும் படி வசனம் இறங்கியதால் மதீனாவில் இருக்கும் போது பயணத்தில் இரண்டு ரக்அத் தொழவேண்டும் என்ற பழைய சட்டம் இறுதியாக அப்படியே வைக்கப்பட்டுவிட்டது என்பதே ஆயிஷா (ரலி) அவர்களுடைய கூற்றின் விளக்கம்.
முரண்பாடு நீங்கிவிட்டதால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளலாம்.