கடமையானதொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள்
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதைத் தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 842, முஸ்லிம் 917
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர்,
(அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி) மூன்று முறை பாவமன்னிப்புத் தேடுவார்கள். மேலும்
அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம், வமின்(க்)கஸ் ஸலாம், தபாரக்(த்)த தல் ஜலாலி வல்இக்ராம்
(பொருள்: இறைவா! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது, மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்!) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: முஸ்லிம் 931
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃ(த்)தய்(த்)த வலா முஃ(த்)திய லிமா மனஃ(த்)த வலா யன்ஃபவு தல் ஜத்தி மின்(க்)கல் ஜத்து
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்கள்: புகாரீ 844, முஸ்லிம் 933
‘அல்லாஹும்ம இன்னீ அவூதுபி(க்)க மினல் புக்லி, வஅவூதுபி(க்)க மினல் ஜுப்னி, வஅவூதுபி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வஅவூது பி(க்)க மின் பித்ன(த்)தித் துன்யா, வஅவூது பி(க்)க மின் அதாபில் கப்ர்.
(பொருள்: இறைவா! உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என இறைவனிடம் தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள்.
அறிவிப்பவர்: சஅத் (ரலி)
நூல்: புகாரீ 5384, 2822
‘அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்
(பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டுவிடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1301, அஹ்மத் 21109
‘லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ். வலா நஅபுது இல்லா இய்யாஹு லஹுன் னிஃம(த்)து வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரிஹல் காஃபிரூன்
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன். நல்லவற்றைச் செய்வதற்கோ, தீயவற்றிலிருந்து விலகுவதற்கோ அல்லாஹ்வின் துணையின்றி இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருள் அவனுடையது. உபகாரம் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. நிகராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன) என ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஸலாம் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் 935
‘யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99தடவைகள் கூறிவிட்டு 100 வதாக
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்)
எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 939
ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: சுனனுல் குப்ரா, பாகம்: 6, பக்கம் 30
ஆயத்துல் குர்ஸி
“அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம” (பகரா 2:255).
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப் பக்கம் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது,
“ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு இபாதக்க’ (இறைவா! உன் அடியார்களை “உயிர் கொடுத்து எழுப்பும்’ (அல்லது ஒன்று திரட்டும்) நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!) என்று அவர்கள் பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி)
நூல் : முஸ்லிம் 1280
அனைத்து தொழுகைக்குப் பிறகு சூரத்துல் இக்லாஸ், பலக்,நாஸ் ஓதலாம்.
அஹ்மதிலும் ஸஹுஹ்தான் இடம்பெற்றுள்ளது
الجزء رقم :29، الصفحة رقم:330
17792 حَدَّثَنَا هَارُونُ ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ ، حَدَّثَنِي اللَّيْثُ ، عَنْ حُنَيْنِ بْنِ أَبِي حَكِيمٍ ، حَدَّثَهُ عَنْ عُلَيِّ بْنِ رَبَاحٍ اللَّخْمِيِّ ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ ، قَالَ : أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَقْرَأَ بِالْمُعَوِّذَاتِ دُبُرَ كُلِّ صَلَاةٍ.
حكم الحديث: حديث صحيح، وهذا إسناد حسن.
நபி (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகைக்கு ஸலாம் கொடுக்கும் போது
ஸுப்ஹானல் மலி(க்)குல் குத்தூஸ்
(பரிசுத்தமான அரசன் (அல்லாஹ்) தூய்மையானவன்) என்று மூன்று முறை கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)
ஆக்கம்: காதர் சவூதி