விளையாட்டுக்கு அனுமதி உண்டா?
எந்தெந்த விளையாட்டுக்கள் தடுக்கப்பட்டுள்ளன.?
விளையாட்டுக்களை இஸ்லாம் அனுமதிக்கின்றது. சில சமயங்களில் வலியுறுத்தவும் செய்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்திய செய்தியை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 2868, 2869, 2870, 7336
கடை வீதியில் அம்பு எறியும் போட்டியை அஸ்லம் கூட்டத்தினர் நடத்திக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே வந்தனர். இஸ்மாயீல் நபியின் சந்ததிகளே! நீங்கள் அம்பு எறியுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அவர்கள் அம்பு எறிபவராக இருந்தார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, இரு அணிகளாக இருந்தவர்களில் ஒரு அணியைக் குறிப்பிட்டு, நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன் என்று கூறி அந்த அணியில் சேர்ந்து கொண்டார்கள்.
எதிரணியில் இருந்தவர்கள் அம்பு எறிவதை நிறுத்தி விட்டார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது, நீங்கள் இந்த அணியில் ஒருவராகச் சேர்ந்திருக்கும் போது உங்களுக்கெதிராக நாங்கள் எப்படி அம்பு எறிவோம்? என்று அவர்கள் விடையளித்தனர். அப்படியானால் நான் இரண்டு அணிக்கும் பொதுவானவனாக இருந்து கொள்கிறேன். இப்போது எறியுங்கள்! என்றார்கள்.
அறிவிப்பவர் : ஸலமா பின் அக்வஃ (ரலி)
நூல் : புகாரி 2899, 3373, 3516
நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் நடத்திய போது நான் அவர்களை முந்தி விட்டேன். சில காலம் கழித்து எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்ட போது மீண்டும் ஓடினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை முந்தி விட்டு, அதற்கு இது சரியாகி விட்டது என்றார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள் : அஹ்மத் 24164
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது முன்னிலையில் பள்ளிவாசலில் அபீஸீனியர்கள் தங்களின் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு விளையாடினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 454, 455, 950, 988, 2907, 3530, 5190
இது போன்ற வீர விளையாட்டுக்களையும், பயனுள்ள விளையாட்டுகளையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.
சூதாட்டம், உடலுக்கோ, அறிவுக்கோ பயன்தராத வீண் விளையாட்டுக்கள், விளையாட்டு என்ற பெயரில் ஆடல், பாடல், கச்சேரிகள் போன்றவைகளை இஸ்லாம் தடுக்கின்றது.
குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.
திருக்குா்ஆன் 74:42 – 45
அது போன்று பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விளையாட்டை நபிகளார் தடுத்துள்ளார்கள்.
صحيح البخاري
சிறு கற்களைச் சுண்டி விளையாட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது; எதிரியையும் வீழ்த்தாது. மாறாக, அது கண்ணைப் பறித்து விடும்; பல்லை உடைத்துவிடும் என்றும் சொன்னார்கள்.
அறிவிப்பவா் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)
நூல் : புகாரி 6220
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]