சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா?
சீட்டுக் குலுக்கிப் போடுதலில் இரு வகைகள் உள்ளன. மனிதர்களுக்கு மத்தியில் யாருக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்பதை முடிவு செய்யத் தகுந்த காரணம் இல்லாமல் இருந்தால் அப்போது சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒருவருக்கு முன்னுரிமை அளித்தல் ஒரு வகை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.
நாம் செய்ய நினைக்கின்ற இரண்டு காரியங்களில் எதைச் செய்யலாம் என்று குழப்பம் வரும் போது அதில் ஒன்றைத் தேர்வு செய்வதற்காக சீட்டுக் குலுக்கிப் போடுதல் மற்றொரு வகை. இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். இது குறிபார்த்தல் என்ற வகையில் அடங்கும். இது அப்பட்டமான இணை வைத்தலாகும். இரண்டில் இது தான் சரியானது என்று இறைவனே காட்டிவிட்டான் என்பது இதன் உள்ளர்த்தமாக இருப்பதால் இது ஹராமாகும்.
இரண்டில் எதை முடிவு செய்தாலும் அது நம் விருப்பத்தில் உள்ளதாகும். ஒன்றை முடிவு செய்தால் மற்றொன்று நம்மிடம் பிரச்சனைக்கு வராது.
ஆனால் இரண்டு மனிதர்களுக்கு மத்தியில் காரணம் இல்லாமல் ஒருவருக்கு முன்னுரிமை கொடுத்தால் மற்றவர் பிரச்சனைக்கு வருவார். எனவே பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க சீட்டுக் குலுக்குதல் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இது அவசியமாகிறது. ஆனால் இரண்டு காரியங்களில் ஒன்றை முடிவு செய்ய சீட்டுக் குலுக்காமல் நாமே முடிவு செய்ய முடியும்.
முதல் வகையான சீட்டுக் குலுக்குதல் மார்க்கத்தில் உள்ளது தான் என்பதற்கான ஆதாரங்கள் வருமாறு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் சீட்டுக் குலுக்கிப் பார்த்து முடிவெடுத்துள்ளார்கள். இவையனைத்தும் மேற்கண்ட அடிப்படையில் உள்ளவையாகும்.
பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : புகாரீ 615, முஸ்லிம் 611
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடயே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்…. சுருக்கம்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2661
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 2674
(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் எவரது வீட்டில் யார் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது…. சுருக்கம்
அறிவிப்பவர் : உம்முல் அலா (ரலி)
நூல் : புகாரி 1243
எனவே பலரில் யாரைத் தேர்வு செய்வது என்பது போன்ற பிரச்சனைகளுக்கே சீட்டுக் குலுக்கிப் பார்க்கலாம். இவ்வாறு செய்வதற்கு அனுமதியுள்ளதே தவிர இது கட்டாயமானதல்ல. இரு தரப்பும் வேறு வகையில் இணக்கமான முடிவுக்கு வந்தாலும் தவறில்லை.
இரண்டாம் வகை சீட்டுக் குலுக்குதல் கூடாது என்பதைப் பின்வரும் வசனங்களின் மூலம் அறியலாம்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
(ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 5:3
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
திருக்குர்ஆன் 5:90
நல்லது கெட்டதைச் சிந்தித்து நாமாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் சீட்டுக் குலுக்கிப் பார்த்து முடிவெடுப்பது கூடாது. மாறாக இப்பிரச்சனைகளுக்கு மார்க்கம் இஸ்திகாரா என்ற வேறு ஒரு வழியைக் காட்டியுள்ளது.
நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நல்வழியைக் காட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு எது நமக்கு நல்ல முடிவாகத் தெரிகின்றதோ அதைத் தேர்வு செய்ய வேண்டும்.
நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் கீழ்க்காணும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ள துஆவை ஓத வேண்டும்.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல எல்லாக் காரியங்களிலும் நல்லவற்றைத் தேர்வு செய்யக்கூடிய முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள்.” “உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர்,
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பிஇல்மிக்க லஅஸ்தக்திருக்க பிகுத்ரதிக்க வஅஸ்அலுக மின் ஃபழ்லிகல் அளீம். ஃப இன்னக தக்திரு வலா அக்திரு வதஃலமு வலா அஃலமு வஅன்த அல்லாமுல் குயூப். அல்லாஹும்ம இன்குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ ஃபீதீனீ வமஆஷீ வஆகிபதி அம்ரீ ஃபக்துர்ஹுலீ வயஸ்ஸிர்ஹுலீ ஸும்ம பாரிக்லீ ஃபீஹி வஇன்குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன்லீ ஃபீதீனீ வமஆஷீ வஆகிபதி அம்ரீ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ வஸ்ரிஃப்னீ அன்ஹு வக்துர்லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ழினீ பிஹி”
(பொருள் : இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன் மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்துக்கும் ஆற்றலுள்ளவன். நான் ஆற்றலுள்ளவன் அல்லன். நீ அனைத்தையும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவானவற்றையும் நீ அறிபவன். இறைவா! எனது இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும் எனது மறுமைக்கும் சிறந்தது என நீ கருதினால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு எளிதாக்கு! பின்னர் அதில் பரகத் (விருத்தி) செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும் கெட்டது என நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு! எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றுக்கு ஆற்றலைத் தா! பின்னர் அதில் எனக்கு திருப்தியைத் தா!)
என்று கூறட்டும். தனது தேவையையும் குறிப்பிடட்டும்.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரீ 1162