கிறிஸ்மஸ் பண்டிகை நேரங்களில் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் (பலூன், கிறிஸ்மஸ் மரம், லைட் செட், இப்படியான பொருட்களை விற்பனை செய்வது கூடுமா ? கூடாதா?
பிறமதத்தினர் புனிதமாகக் கருதும் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பன்றிகளை விற்பதையும், இறந்தவற்றை விற்பதையும், மதுவை விற்பதையும், சிலைகளை விற்பதையும் தடைசெய்துவிட்டனர்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : அஹ்மது 13971
சிலைகளை விற்பனை செய்வது கூடாது என இந்த ஹதீஸ் கூறுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் இவற்றை வணங்கி வந்த காரணத்துக்காகவே இவற்றை விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளில் அதில் உள்ள தன்மையைத் தாண்டி வெறோரு தெய்வீகத் தன்மை இருப்பதாக மக்கள் நம்பினால் அந்தப் பொருளும் சிலையுடைய அந்தஸ்துக்கு வந்துவிடும்.
”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் ‘சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள்’ என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 5952
ஏனைய மக்களால் புனிதப் பொருளாக கருதப்படும் பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இதை விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
கிறித்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பயன்படுத்துவதாக நீங்கள் குறிப்பிட்ட பொருட்களான பலூன், லைட் செட், கிரிஸ்துமஸ் மரம், போல்பெல் ஆகியவற்றை அவர்கள் வணங்கவில்லை. இதில் புனிதம் இருப்பதாக அவர்கள் நம்பவுமில்லை.
மேலும் இப்பொருட்கள் மதவிழா அல்லாத வேறு நிகழ்சிகளுக்கும் பயன்படக்கூடியவையாக இருக்கின்றன. இப்பொருட்களை அவர்களுக்கு விற்பதால் நாம் தீமைக்குத் துணைபோனதாகவும் ஆகாது. இவற்றை இலவசமாகவோ, அல்லது இவ்விழாவிற்காக விலையில் சலுகை செய்தோ கொடுத்தால் அப்போது தான் தீமைக்குத் துணை போன குற்றம் ஏற்படும்.
தேங்காய் விற்கிறோம். அது உணவாகவும் பயன்படும். பூஜைக்கும் பயன்படும். உணவாகப் பயன்படும் பொருள் என்பதால் நாம் அதை விற்கலாம். வாங்கியவர்கள் வேறு விதத்தில் பயன்படுத்தினால் அந்தக் குற்றம் நம்மைச் சேராது.
எல்லா பொருட்களையும் விற்பது போல் இவற்றையும் விற்றால் அதில் தவறேதுமில்லை. எனவே இதை விற்பனை செய்வதைத் தவறு என்று கூற முடியாது.