செல்போனில் புகைப்படம் பிடிக்கலாமா??
தென்படும் காட்சிகளை எல்லாம் செல் போன் மூலம் படம் பிடிக்கும் நோய் மக்களிடம் பெருகிவருகிறது. குறிப்பாக பெண்களைப் படம் எடுப்பது, ஒருவரை அவர் விரும்பாத கோலத்தில் படம் பிடிப்பது, ஒருவரது அந்தரங்கத்தைப் படம் பிடிப்பது ஆகியன மார்க்கத்தில் அனுமதி இல்லை. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது தவறல்ல.
வீடியோ கேமராவில் படம் பிடிப்பதற்கு உரிய மார்க்கச் சட்டம் செல்போன் மூலம் படம் பிடிப்பதற்கும் பொருந்தும். இது குறித்து நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற நூலில் பின்வருமாறு நாம் விளக்கியுள்ளோம்.
டி.வி., வீடியோ
டி.வி, வீடியோக்கள் உருவப் படங்களில் சேராது என்பதே சரியாகும். உருவப் படங்களுக்கும், டி.வி., வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
காணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள்.
நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப் படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவதில்லை.
கண்ணாடியில் தெரிவதைப் படம் என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம்?
நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.
டி.வி.யும் இது போன்றது தான். நாம் எதை ஒளி பரப்புகிறோமோ அது தெரியும். என்னை ஒளி பரப்பினால் நான் தெரிவேன். உங்களை ஒளி பரப்பினால் நீங்கள் தெரிவீர்கள். எதையும் ஒளி பரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. டி.வி.யில் எதுவுமே பதியவுமில்லை. நிலைக்கவுமில்லை. உருவப்படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க முடியாது.
மேலும் உருவப்படம் என்பதில் இயக்கமோ, அசைவோ, ஓசையோ இருக்காது. டி.வி., வீடியோக்களில் இவையெல்லாம் இருக்கின்றன. உருவப் படங்களிலிருந்து இந்த வகையிலும் தொலைக் காட்சி என்பது வித்தியாசப்படுகின்றது. சுருங்கச் சொல்வதென்றால் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையே டி.வி., வீடியோக்களில் காணப்படுகிறது.
அன்னியப் பெண் ஒருத்தி போய்க் கொண்டிருக்கிறாள். முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக அவளது பிம்பத்தை ரசிப்பது கூடுமா? கூடாது என்போம். உருவம் என்பதற்காக அல்ல. அன்னியப் பெண்ணை ரசிக்கக் கூடாது என்பதற்காக. நேரில் எதையெல்லாம் பார்க்கக் கூடாதோ அதையெல்லாம் கண்ணாடி வழியாகவும் பார்க்கக் கூடாது.
ஒரு விளையாட்டு நடக்கிறது. அதை நேரிலும் பார்க்கலாம். கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம். டி.வி.,யின் நிலையும் இது தான்.
கல்வி, விவசாயம், மருத்துவம், தொழிற்பயிற்சி, சமையல் கலை, நாட்டு நடப்பு, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்கள், செய்முறைப் பயிற்சி, மார்க்க விளக்க நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை நேரிலும் பார்க்கலாம். டி.வி.யிலும் பார்க்கலாம். திரைப் படமாகவும் பார்க்கலாம்.
ஆபாசம், பச்சை வசனங்கள், ஆண் பெண் கட்டிப் புரளுதல், படுக்கையறைக் காட்சிகள் போன்றவைகளை நேரிலும் பார்க்கக் கூடாது. டி.வியிலும் பார்க்கக் கூடாது. இசையை நேரிலும் கேட்கக் கூடாது. டி.வி., வழியாகவும் கேட்கக் கூடாது. இது தான் அதன் அடிப்படை.
வீடியோவுக்கு அனுமதி உண்டு என்று கருதிக் கொண்டு திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று கருதக் கூடாது. மற்றவர்களுக்கோ, தனக்கோ ஒரு பயனும் இல்லாத இது போன்ற நிகழ்ச்சிகளுக்காகப் பெரும் பணம் செலவு செய்வதால், வீண் விரயம் என்ற அடிப்படையில் தடுக்கப்பட்டதாகும்.
கல்வி மற்றும் பிறருக்குப் பயன் தருகின்ற நிகழ்ச்சிகளை வீடியோ கேஸட்டுகளாக எடுத்து வைப்பதால் அதைப் பிறர் பார்த்து கற்றுக் கொள்ள உதவுகிறது என்பதால் அதற்குத் தடை இல்லை.
கடைசியாக ஒரு போதனை
பயனுள்ள பல காரியங்களுக்காக பயன்படத்தக்க இத்தகைய நவீன கருவிகள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தவல்ல இத்தகைய சாதனங்கள் தகுதியற்றவர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மனிதனை வழிகெடுக்கும் நிகழ்ச்சிகளும், உருப்படாத சங்கதிகளுமே அதிகமதிகம் காட்டப்படுகின்றன.
ஒரு சில பயனுள்ள நிகழ்ச்சிகளைக் காட்டினாலும் அதை மட்டும் மக்கள் பார்ப்பதில்லை. உருப்படாத நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருந்து அதைப் பார்க்கிறார்கள்.
இத்தகைய ஆளும் வர்க்கமும், இப்படிப்பட்ட மக்களும் உள்ள நாடுகளில் இது போன்ற சாதனங்களை வீடுகளில் வாங்கி வைப்பவர்கள் ரொம்பவும் யோசிக்க வேண்டும்.
மார்க்கம் அனுமதிக்கின்ற வழிகளில் மட்டும் அதைத் தன்னால் பயன்படுத்த முடியுமா? மனதைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் காட்டப்படும் போது சபலப்படாமல் தன்னை வெல்ல முடியுமா? என்று பலமுறை யோசிக்க வேண்டும்.
நாம் வேலையின் நிமித்தம் வெளியிலோ, வெளி ஊருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்ற பின் நம் குடும்பத்தினர் அதை மார்க்கம் அனுமதிக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவார்களா? இதையும் யோசிக்க வேண்டும்.
நம்முடைய பிள்ளைகள் இதில் மூழ்கி உள்ளம் கெட்டுப் போவதுடன், கல்வி கற்பதில் அக்கறையின்மை கொள்ளாமலிருப்பார்களா? இதையும் யோசிக்க வேண்டும். இவ்வளவு உறுதியும், கட்டுப்பாடும் உள்ளவர்கள் டி.வி.யைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.
ஒரு காலத்தில் வானொலிப் பெட்டி அறிமுகமான போது உலக நடப்புக்களையும், செய்திகளையும் அறிய உதவுவதால் வானொலிப் பெட்டியை அனுமதித்தார்கள். ஆனால் நடந்தது என்ன? செய்தி வாசிக்கும் போது மட்டும் வானொலிப் பெட்டியை நிறுத்தி விடுகிறார்கள். தகுதியில்லாதவர்களிடம் இது போன்ற சாதனங்கள் இருப்பது வம்பை விலை கொடுத்து வாங்கியதாகவே அமையும்.