நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைக் கூற கேட்கும் போது முழு ஸலவாத் கூற வேண்டுமா? அல்லது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் என்று கூறினால் போதுமா? விளக்கம் தரவும்.
தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ் ஸலா(த்)து வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம்.
பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் முன்னால் அமர்ந்தார். அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது ஸலாம் கூறுவதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். நாங்கள் தொழும் போது எங்கள் தொழுகையில் எப்படி உங்கள் மீது ஸலவாத் கூறுவது? ஸல்லல்லாஹு அலைக்க என்று கேட்டார்.
இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே என்று நாங்கள் நினைக்குமளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தனர். பின்னர் நீங்கள் என் மீது ஸலவாத் கூறும் போது அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி கமா பாரக்த அலா இப்ராஹீம் வ வலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என விடை அளித்தார்கள்.
நூல் : அஹ்மத் 17072
கேள்வி கேட்ட மனிதர் தொழுகையின் போது ஸலவாத் கூறுவது எப்படி என்று கேட்டார். அப்படிக் கேட்கும் போது ஸல்லல்லாஹு அலைக்க என்று ஸலவாத் கூறினார்.
(முன்னிலையாகக் கூறும்போது அலைக்க (உங்கள் மீது) என்றும், படர்க்கையாகக் கூறும்போது அலைஹி (அவர் மீது) என்று கூற வேண்டும்.)
ஸல்லல்லாஹு அலைக்க என்று அவர் ஸலவாத் கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை. திருத்தவில்லை. மாறாக தொழுகையில் எப்படி ஸலாவாத் ஓதுவது என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள்.
எனவே தொழுகை அல்லாத நேரங்களில் ஸலவாத் கூறும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இப்படி நபித்தோழர்கள் கூறியுள்ளதே இதற்குச் சான்று.
ஒரு நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி ஸல்லல்லாஹு அலைக்க என்று ஸலவாத் கூறினார்……. சுருக்கம்
நூல் : நஸயீ 2818
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.
ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி ஸல்லல்லாஹு அலைக்க என்று கூறினார்…… சுருக்கம்.
நூல் : அபூதாவூத் 1667
இந்த ஹதீஸ்களிலும் ஸல்லல்லாஹு அலைக்க என்று நபித்தோழர்கள் நேருக்கு நேராக ஸலவாத் கூறியுள்ளனர். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை.
எனவே தொழுகைக்குள் ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அல்லாஹும்ம் ஸல்லி அலா முஹம்மதின் ….. என்று தொடங்கும் ஸலவாத்தை கூற வேண்டும். தொழுகைக்கு வெளியே அவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது அல்லது செவியுறும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறலாம்.