உளூச் செய்யும் முறை
நிய்யத் எனும் எண்ணம்
ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால், நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்தையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார்.
உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார். அது போல் தூக்கக் கலக்கத்தில் எழுந்து தொழுகையில் செய்யும் அனைத்தையும் ஒருவர் செய்கின்றார். ஆனால் தொழுவதாக அவருக்கு உணர்வு இல்லை என்றால் அவரும் தொழுதவராக மாட்டார்.
இது போலத் தான் ஒருவர் உளூவின் போது செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்கின்றார். ஆனால் உளூச் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
உதாரணமாக ஒருவர் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மழை பெய்கின்றது. உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது. உளூவின் போது கழுவ வேண்டிய அனைத்து உறுப்புக்களும் கழுவப்பட்டு விடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அல்லது ஆற்றிலோ, அல்லது குளத்திலோ தவறி விழுந்து விட்டார். அல்லது இறங்கிக் குளிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு உளூச் செய்யும் எண்ணம் இல்லாததால் இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530
நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். உளூ, தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர்.
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான் இப்போது உளூச் செய்யப் போகின்றேன்’ என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.