தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல்
காலுறையின் மேல் மஸஹ் செய்யும் சலுகை போலவே தலைப்பாகை அணிந்தவர்களும், தலையை மறைக்கும் துணியை தலையின் மேல் போட்டிருக்கும் ஆண்களும் பெண்களும் தலைக்கு மஸஹ் செய்வதற்குப் பதிலாக தலைப்பாகையின் மீதும் தலைத் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் உமய்யா (ரலி),
நூல்: புகாரி 205
தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்வது போல் தலை முக்காட்டின் மீதும் தலையின் மேல் போட்டிருக்கும் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர்.
அறிவிப்பவர்: பிலால் (ரலி),
நூல்: முஸ்லிம் 413
முக்காடு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில், ‘கிமார்‘ என்ற சொல் அரபு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்கள் அணியும் தலைத் துணியையும், பெண்கள் அணியும் தலைத் துணி அதாவது முக்காட்டையும் குறிக்கும்.
பெண்களின் முக்காட்டைக் குறிக்க இச்சொல் திருக்குர்ஆனில் 24:31 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள ‘குமுரிஹின்ன’ என்பது ‘கிமார்’ என்பதன் பன்மையாகும்.
புகாரி 5825, 6568, 3321, 3578, 5381, 6688 ஆகிய ஹதீஸ்களிலும் கிமார் என்பது பெண்களின் முக்காட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை விரிவாக நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் தலைப்பாகை மற்றும் தலைத் துணியின் மேல் மஸஹ் செய்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது போல் பலரும் எழுதியுள்ளனர். பெண்களுக்கும் இந்தச் சலுகை உள்ளது என்று எவரும் கூறியதாகத் தெரியவில்லை.
காலுறைகள் மீது மஸஹ் செய்வது எவ்வாறு ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிய சலுகையோ அது போலவே தலையில் போட்டிருக்கும் முக்காட்டின் மேல் மஸஹ் செய்வதும் இருவருக்கும் பொதுவானது தான்.
மேலும் தலைப்பாகையை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கழற்ற வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தப்ரானியில் இவ்வாறு ஹதீஸ் உள்ளது. அதை அபூஸலமா என்ற மர்வான் அறிவிக்கின்றார். இவர் ஏற்கத்தக்கவர் அல்ல என்று புகாரி, அஹ்மத் பின் ஹம்பல், இப்னு அபீஹாத்தம் மற்றும் பலர் கூறுகின்றனர்.
எனவே காலுறைகளுக்குரிய நிபந்தனைகள் ஏதும் தலைப்பாகை மற்றும் முக்காடுகளுக்குக் கிடையாது.