உளூ செய்யும் முறை❓
உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது முதல் ‘பிஸ்மில்லாஹ்‘ (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறிக் கொள்ள வேண்டும்.
நபித்தோழர்கள் உளூச் செய்வதற்கான தண்ணீரைத் தேடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் எவரிடமேனும் தண்ணீர் இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். (தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்து, ‘அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள்‘ என்று கூறினார்கள். அவர்களின் விரல்களுக்கு இடையிருந்து தண்ணீர் வெளியேறியதை நான் பார்த்தேன். கடைசி நபர் வரை அதில் உளூச் செய்தார்கள். இவ்வாறு அனஸ் (ரலி) கூறினார்கள். ‘மொத்தம் எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘சுமார் எழுபது நபர்கள்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: கதாதா,
நூல்: நஸயீ 77
முன் கைகளைக் கழுவுதல்
உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும்.
…‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி),
நூல்: நஸயீ 147
வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்
இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிய பின் வாயையும், மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, ‘தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள்‘ என்று கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரி 160, 164
வாய் கொப்புளிப்பதற்கும், மூக்கைச் சுத்தம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு தடவை தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு பகுதியை வாயிலும், மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்திச் சுத்தம் செய்யலாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாய்கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்… (பின்னர்) ‘இப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ய நான் பார்த்தேன்‘ எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்,
நூல்: புகாரி 140
ஒரு கைத் தண்ணீர் எடுக்கும் போது வலது கையால் எடுத்து இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ‘தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு வாய் கொப்புளித்து, மூக்கையும் சீந்தினார்கள்‘ என்று கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரி 160, 164
அலீ (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச் செய்து, வாய்கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி, இடது கையால் சுத்தம் செய்தார்கள். பின்னர் ‘இது தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையாகும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்து கைர்,
நூல்கள்: நஸயீ 90, அஹ்மத் 1078, தாரமீ 696
முகத்தைக் கழுவுதல்
இதன் பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும்.
இரு கைகளால் கழுவுதல்
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்,
நூல்: புகாரி 140
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா,
நூல்: புகாரி 186
தாடியைக் கோதிக் கழுவுதல்
தாடி வைத்திருப்போர் முகத்தைக் கழுவும் போது தமது விரல்களால் தாடியைக் கோத வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமது தாடியைக் கோதிக் கழுவுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: அஹ்மத் 24779
இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்
முகத்தைக் கழுவிய பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்,
நூல்: புகாரி 160
முகம், கை, கால்களைச் கழுவுதல்
முகத்தைக் கழுவும் போது முகத்தைக் கடந்து விரிவாகக் கழுவுவதும், கைகளைக் கழுவும் போது முழங்கை வரை நிறுத்திக் கொள்ளாமல் அதையும் தாண்டிக் கழுவுவதும் விரும்பத்தக்கதாகும். இது கட்டாயம் இல்லை.
‘உளூச் செய்வதன் காரணமாக எனது சமுதாயத்தினர் முகம், கை, கால்கள் வெண்மையானவர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். யார் தமது வெண்மையை அதிகப்படுத்த விரும்புகின்றாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: புகாரி 136, முஸ்லிம் 362
எனவே முகம், கை கால்களைக் கழுவும் போது விரிவாகக் கழுவுவது சிறந்ததாகும்.
தலைக்கு மஸஹ் செய்தல்
இரு கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தார்களோ அந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வந்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா,
நூல்கள்: புகாரி 185, முஸ்லிம் 346
இது தான் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த மஸஹ் செய்யும் முறையாகும். பெண்களும் ஆண்களைப் போலவே பிடரி வரை மஸஹ் செய்ய வேண்டும்.
தலையில் ஒரேயொரு முடியில் சிறிதளவை மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும், தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை.
இரண்டு கால்களையும் கழுவுதல்
இதன் பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதல் வலது காலையும், பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தமது வலது காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில் ஊற்றிக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்,
நூல்: புகாரி 140
கால்களைக் கரண்டை வரை கவனமாகக் கழுவுவது அவசியமாகும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்,
நூல்: புகாரி 160]
உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹுரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) ‘உளூவை முழுமையாகச் செய்யுங்கள். குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்‘ என்று நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத்,
நூல்: புகாரி 165