ஒரு நபித்தோழரின் ஏழ்மை
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் என்னைத் தங்களுக்கு அர்ப்பணிக்க வந்திருக்கிறேன்” என்று கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார்கள், பின்னர் அவரை மேலும், கீழும் பார்த்தார்கள். பின்னர் தமது தலையைத் தாழ்த்திக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த முடிவும் செய்யவில்லை என்பதைப் பார்த்த அந்தப் பெண் அங்கேயே அமர்ந்து கொண்டார்கள். அப்போது
நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு அப்பெண் தேவையில்லையெனில் அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார்.
(அதற்கு) ”உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் எதுவும் இல்லை’ என்று அவர் பதிலளித்தார்.
(அதற்கு) ”நீ உன்னுடைய வீட்டாரிடம் சென்று அங்கு உனக்கு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர் சென்றார். பின்னர் திரும்பி வந்து இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு எதுவும் கிடைக்கவில்லை” என்று கூறினார்.
(அதற்கு) ”ஒரு இரும்பு மோதிரமாவது இருக்கிறதா? என்று பார்!” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் சென்றார்.
பின்னர் திரும்பி வந்து ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இரும்பு மோதிரம் இல்லை.
ஆனால், என்னிடம் என்னுடைய இந்தக் கீழங்கி உள்ளது. (ஸஹ்ல் அறிவிப்பாளர் தொடர்ந்து கூறினார் கீழ் அங்கி தவிர அவரிடம் ஒன்றுமே இல்லை). ”அவருக்கு மேலாடை கூட இல்லை!” என்று இதில் அவளுக்குப் பாதியை கொடுத்து விடுகிறேன்” என்றார். ”நீ கீழாடைக்கு என்ன செய்வாய்? நீ உடுத்திக் கொண்டால் அவளுக்கு எதுவும் இல்லாது போய் விடும். இதை அவள் உடுத்திக் கொண்டால் உனக்கு எதுவும் இல்லாது போய்விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பின்னர் அவர் நீண்ட நேரம் அமர்ந்து விட்டு எழுந்தார். அவர் (கவலையுடன்) திரும்பிச் செல்வதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து வரக் கட்டளையிட்டார்கள். அவர் வந்ததும், ”குர்ஆனிலிருந்து உன்னிடம் எது (மனனமாக) உள்ளது?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ”என்னிடம் இன்னின்ன அத்தியாயங்கள் உள்ளன” என அவர் எண்ணிக் காண்பித்தார்.
”இவற்றை நீ மனனமாக ஓதுவாயா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அவர் ”ஆம்” என்றார்.
(அதற்கு) ”செல்! குர்ஆனிலிருந்து உன்னிடம் உள்ளவற்றிற்கு பதிலாக அவளை உனக்கு உரியவளாக்கி விட்டேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்- புகாரி,5871 முஸ்லிம்- 2785)
உனக்கு எது மனனமாகவுள்ளது” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ”சூரத்துல் பகரா மற்றும் அதற்கு அடுத்த அத்தியாயம்” என்று கூறினார். ”எழு! அவளுக்கு இருபது வசனங்களைக் கற்றுக்கொடு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) வாயிலாக அபூ, தாவூதில் உள்ளது.
(புலுகுல் அல் மராம் 1006, 1007)
அல்லாஹ் நம்மை எவ்வளவு நல்ல நிலையில் வைத்து வைத்துள்ளான் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆனால் நாமோ நன்றி கெட்டவர்களாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம்…