இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்த போது பின்வரும் வசனம் அருளப்பட்டது. இறைவனை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை விளக்குவதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இதில் ஒரு முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது.
‘(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்’ என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான்.
நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்!
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 73:20
பாதி இரவோ, மூன்றில் ஒரு பகுதி இரவோ தொழுதால் போதும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இப்படிக் கூறும் போது ‘உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் இனி மேல் உருவாவார்கள் என்பதை அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான்’ எனக் கூறுகிறான்.
நோயாளிகள் உருவாவதை யாரும் சொல் விட முடியும். முஸ்ம்களாக வாழ்வதே சிரமமாக இருக்கும் நிலையில் இந்தச் சமுதாயத்தில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்கள் உருவாவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்றால் ஒரு ஆட்சியை அமைத்து படை திரட்டிக் கொண்டு போர் புரிவதைக் குறிக்கும்.
இப்படி போர் புரியக் கூடியவர்கள் உருவாவார்கள் என்பதை அன்றைய சூழ்நிலையில் கணிக்கவே முடியாது. ஆனாலும் இறைவன் கூறியவாறு மிகச் சில வருடங்களிலேயே நபிகள் நாயகம் (ஸல்) தலைமையில் ஒரு ஆட்சி உருவானது. இதனால் அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் உருவானார்கள்.
திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்குரிய மற்றொரு சான்றாக இந்த முன்னறிவிப்பு அமைந்துள்ளது.