நுஹ் நபியின் கப்பல்

நுஹ் நபி அவர்கள் முக்கியத்துவத்துடன் குர்ஆனில் குறிப்பிடப்படும் இதைத் துதர்களில் ஒருவராக இருந்தார்கள்.

950 ஆண்டுகள் வாழ்ந்த இவர்களின் பிரச்சாரத்தை சொற்பமானவர்களே ஏற்றனர். பெரும் பகுதி மக்கள் அவர்களை நம்ப மறுத்தனர். சொல்லவொண்ணாத துன்பங்களையும் கொடுத்தனர்.

இறுதியாக இறைவனிடம் நுஹ் நபி அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். ‘இனிமேல் இவர்கள் திருத்த மாட்டார்கள். இவர்களை அழித்து விடு’ என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் இறைவன் ஒரு கப்பலைச் செய்யுமாறு கட்டளையிட்டான்.

கப்பல் செய்து முடித்ததும் நம்பிக்கை கொண்டவர்களைக் கப்பலில் ஏற்றிக் கொள்ளுமாறும் ஒவ்வொரு உயிரினங்களில் ஒரு ஜோடியை ஏற்றிக் கொள்ளுமாறும் இறைவன் கட்டளையிட்டான்.

இதன் பின்னர் பயங்கரமான வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது. வானத்திருந்து மழை கொட்டியது. பெரிய மலைகளே மூழ்கும் அளவுக்கு வெள்ளத்தின் கடுமை இருந்தது. கப்பல் ஏறிக் கொண்ட நன்மக்கள் காப்பாற்றப்பட்டனர். ஏற்காத மக்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டனர்.

வெள்ளம் வடியத் தொடங்கியவுடன் இந்தக் கப்பல் ஜுதி எனும் மலை மீது இறங்கியது. இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

‘பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!’ என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. ‘அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்’ எனவும் கூறப்பட்டது.

திருக்குர்ஆன் 11:44

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக் கொண்டது. அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.

திருக்குர்ஆன் 29:14.15

நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!’ என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார். அப்போது வானத்தின் வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம். பூமியில் ஊற்றுகளைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்டபடி தண்ணீர் இணைந்தது. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன? இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

திருக்குர்ஆன் 54:10-17

மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 16 ஆயிரம் அடியாகும். துருக்கியில் உள்ள அராராத் மலை (ஜுதி மலை) மீது பணிகளுக்கிடையில் கப்பல் ஒன்று புதைந்து கிடப்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.

இவ்வளவு பெரிய கப்பல் மலையின் மீது அமர வேண்டுமானால் அந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டால் தான் சாத்தியம். இந்தக் கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்தோம் என்று இறைவன் கூறுவது நிறைவேறி திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கிறது.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed