நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணம் குறித்து அறிவித்த முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பதாம் வயதில் துவக்கிய இஸ்லாமியப் பிரச்சாரத்தை 63 வது வயதில் முடித்துவிட்டு மரணம் அடைந்தார்கள்.

மனிதன் தீராத நோய்க்கு ஆளாகும் போதும், படுத்த படுக்கையில் நாட்களைக் கழிக்கும் போதும் தனக்கு மரணம் நெருங்கி விட்டதை ஓரளவுக்கு ஊகித்து அறிந்து கொள்வான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயதை அடைவதற்கு முன் திடகாத்திரத்துடன் இருக்கும் போதே தமக்கு மரணம் மிக விரைவில் வந்து விடும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு மரணத்தைத் தழுவினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன் ஹஜ் செய்தனர். மதீனாவிருந்து மக்கா சென்று ஹஜ் செய்ய அன்றைக்கு நல்ல திடகாத்திரமும் உடல் வவும் இருக்க வேண்டும். அந்த நிலையில் அவர்கள் இருந்ததால் தான் ஹஜ் கடமையை மேற்கொண்டார்கள்.

நபிகள் நாயகத்தின் முதல் ஹஜ்ஜாகவும். கடைசி ஹஜ்ஜாகவும் திகழ்ந்த அந்த ஹஜ்ஜின் போது பின்வரும் வசனம் தமக்கு அருளப்பட்டதாகக் கூறினார்கள்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன்5.3)

இன்றுடன் மார்க்கத்தை இறைவன் முழுமைப்படுத்தி விட்டான் என்றால் இனி மேல் இறைவனிடமிருந்து எந்தச் சட்ட திட்டமும் வராது. அதைப் பெற்று மக்கள் மன்றத்தில் வைக்கக் கூடிய தூதருக்கு இனி வேலையில்லை என்ற கருத்தும், மிக விரைவிலேயே அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிவார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

இந்த ஆண்டுக்குப் பின் இனி மேல் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம் என்று தமது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டார்கள்.

நூல் : தப்ரானி அல்கபீர் 2641

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உஹத் போர் நடந்து) எட்டு ஆண்டுகள் கழிந்து உஹத் போரில் கொல்லப்ட்டவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இது உயிரோடு உள்ளவர்களிடமும் இறந்தவர்களிடமும் விடைபெறுவது போல் அமைந்திருந்தது. பின்னர் மேடையில் ஏறினார்கள்.

‘நான் உங்களுக்கு முன்னே செல்கிறேன். உங்களுக்கு நான் சாட்சியாக இருப்பேன். ஹவ்லுல் கவ்ஸர் எனும் தடாகத்தில் (மறுமையில்) உங்களைச் சந்திப்பேன்’ என்று உரை நிகழ்த்தினார்கள். அது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நான் கடைசியாகப் பார்த்ததாகும் என்று உக்பா பின் ஆமிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 4042

ஆண்டு தோறும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து (அது வரை அருளப்பட்ட) குர்ஆன் வசனங்களை ஓதச் செய்து வந்தனர். இந்த ஆண்டு இரண்டு தடவை என்னிடம் வந்தார்கள். என் மரணம் நெருங்கி விட்டதாகவே எண்ணுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) தமது மகள் ஃபாத்திமாவிடம் தெரிவித்தார்கள்.

நூல் :புகாரி 3624, 6285

ஏமன் நாட்டின் ஆளுநராக முஆத் பின் ஜபலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். முஆது அவர்கள் குதிரையில் ஏறி அமர்ந்து வர அவருடன் நடந்தே வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி அனுப்பி வைத்தார்கள். அப்போது பல அறிவுரைகளைக் கூறிவிட்டு அடுத்த ஆண்டு நீ என்னைச் சந்திக்க மாட்டாய் என்றே நினைக்கிறேன் என்று கூறினார்கள்.

நூல் அஹ்மத் 22404

அவர்கள் அறிவித்த படியே அந்த ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *