தமது மகளின் [ஃபாத்திமா (ரலி)] மரணம் பற்றிய முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நான்கு பெண் குழந்தைகளை வழங்கியிருந்தான். ஸைனப், ருகையா, உம்மு குல்ஸும் ஆகிய மூவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே மரணித்து விட்டார்கள்.
கடைசி மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மட்டும் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை உயிரோடு இருந்தார்கள்.
தமது குடும்பத்து உறுப்பினர்களில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் முதலில் மரணிப்பார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
‘என் குடும்பத்தார்களில் (நான் மரணித்த பின்) என்னை முதலில் வந்து சேர்பவர் நீ தான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள்.
நூல் : புகாரி 3626, 3716, 4434
நபிகள் நாயகத்தின் மனைவியரிலும், அவர்களின் உறவினர்களிலும் அதிக வயதுடைய பலர் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சுமார் 25 வயதுடையவராகத் தான் இருந்தார்கள். மரணத்தை நெருங்கிய வயதுடையவராக அவர்கள் இருக்கவில்லை.
அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் மரணித்து ஆறாவது மாதத்தில் மரணத்தைத் தழுவினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை இச்செய்தியை இறைவன் அறிவித்துக் கொடுத்ததன் மூலம் மெய்ப்படுத்தினான்.