பெருநாள் உரைக்கு மிம்பர் உண்டா❓

பெருநாள் உரைக்கு மிம்பர் உண்டா❓

https://eagathuvam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/

இல்லை

வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: இப்னுமாஜா 1278

மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முன்றார். நான் அவரது ஆடையைப் பிடித்து கீழே இழுத்தேன்.

அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள்’ என்று கூறினேன்.

அதற்கு மர்வான், நீர் விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறி விட்டது என்றார். நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும்’ என நான் கூறினேன்.

அதற்கு மர்வான், ‘மக்கள் தொழுகைக்குப் பிறகு இருப்பதில்லை, எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்’ என்று கூறினார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1472

அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651 ஆகிய நூல்களின் அறிவிப்பில் மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…’ என்று இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.


ஏகத்துவம்