கப்ரில் கட்டடம் கட்டலாமா?

 

இவ்வசனத்தில் (18:21) இறந்து விட்ட சில நல்லடியார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம் என்று சிலர் கூறியதாகக் கூறப்படுகின்றது.

 

நல்லடியார்கள் இறந்த பின் அவர்கள் மீது தர்காவை – வழிபாட்டுத் தலத்தை எழுப்பலாம் என்று வாதிடும் அறிவீனர்கள் இதைத் தங்களின் கூற்றுக்குச் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

 

சமாதி வழிபாட்டை நியாயப்படுத்துவதற்குரிய சான்றாக இந்த வசனத்தை இவர்கள் கருதுகின்றனர். குகைவாசிகள் நல்லடியார்களாக இருந்ததன் காரணமாகத்தான் அவர்கள் மீது வழிபாட்டுத்தலம் எழுப்பப்பட்டதாக அல்லாஹ் கூறுகின்றான் என்பது இவர்களது வாதம்.

 

அவர்கள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பியதற்கும், அந்த நல்லடியார்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வழிபாட்டுத் தலம் எழுப்பியோர் வலிமை பெற்றவர்களாக, மிகைத்தவர்களாக இருந்தார்கள் என்று தான் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.

 

இவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? ஏன் இப்படி எழுப்பினார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் தேவையான விளக்கம் கிடைக்கின்றது.

 

யூதர்களும், கிறித்தவர்களும் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கியதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான் என்பது நபிமொழி.

 

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்காவிட்டால் அவர்களது அடக்கத்தலமும் உயர்த்திக் கட்டப்பட்டிருக்கும் என்று வேறு சில அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளது.

 

ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ் பல நூற்களில் பதிவு செய்யப்பட்டதாகும்.

 

புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

முஸ்லிம் – 921, 922, 923, 924, 925

 

அபூதாவூத் – 3227

 

நஸாயீ – 703, 2046, 2047

 

முஅத்தா – 414, 1583

 

தாரமி – 1403

 

அஹ்மத் – 1884, 7813, 7818, 7822, 7894, 9133, 9849, 10726, 10727, 21667, 21822, 24106, 24557, 24939, 25172, 25958, 26192, 26221, 26363

 

இப்னு ஹிப்பான் – 2326, 2327, 3182, 6619

 

நஸாயீயின் குப்ரா – 782, 2173, 2174, 7089, 7090, 7091, 7092, 7093

 

பைஹகீ – 7010, 7011, 11520, 18530

 

அபூயஃலா – 5844

 

தப்ரானி (கபீர்) – 393-411, 4907

 

இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

 

நல்லடியார்களின் அடக்கத்தலத்தின் மீது வழிபாட்டுத் தலம் எழுப்புவது யூதர்கள், மற்றும் கிறித்தவர்களின் வழக்கமாக இருந்ததை இந்த நபிமொழிகளிலிருந்து நாம் அறிகின்றோம். அந்த வழக்கப்படி தான் அவர்கள் குகைவாசிகள் மீது வழிபாட்டுத்தலம் எழுப்பினார்கள்.

 

சில நடவடிக்கைகள் முந்தைய சமுதாயங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பிந்தைய சமுதாயத்திற்குத் தடுக்கப்படுவதுண்டு. அத்தகைய காரியங்களில் கூட இதைச் சேர்க்கவே முடியாது.

 

முந்தைய காலத்திலும் இது தடை செய்யப்பட்டே இருந்தது. அனுமதிக்கப்பட்டதை அவர்கள் செய்து இருந்தால் சாபத்துக்குரியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.

 

எனவே குகைவாசிகளான நல்லடியார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்பியவர்கள் இறைவனின் சாபத்துக்குரியவர்களே தவிர நல்லடியார்கள் அல்ல.

 

சமாதிகளில் கட்டடம் கட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (முஸ்லிம் 1765, திர்மிதீ 972)

 

கட்டப்பட்ட சமாதிகளை இடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (முஸ்லிம் 1763, 1764, திர்மிதீ 970)

 

என் அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்காதீர்கள். (அஹ்மத் 7054)

 

என்று கடுமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்து விட்டார்கள்.

 

‘நானே இறைவன்’ என்று ஃபிர்அவ்ன் கூறினான். இதை அல்லாஹ்வும் குர்ஆனில் சுட்டிக் காட்டுவதால் ‘நானே இறைவன்’ என்று நாமும் கூறலாம் என்று வாதிட முடியாது.

 

அது போல் தான் இந்தத் தீயவர்களின் செயலையும் எடுத்துக் காட்டுகின்றான். எனவே, கெட்டவர்களின் இந்தச் செயலைச் சான்றாகக் கொண்டு தர்கா கட்டலாம் என்று வாதிடுவது அறிவீனமாகும்.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *