இவ்விரு வசனங்களிலும் (10:47, 16:36) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் அனுப்பப்படுவார் எனக் கூறப்படுகிறது.
ஆயினும் சில சமுதாயத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தூதர்கள் அனுப்பப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.
மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஒரு சமுதாயத்திற்கு ஒரே நேரத்தில் அனுப்பப்பட்ட இரு தூதர்கள் என்று திருக்குர்ஆன் 10:75, 19:53, 20:30, 21:48, 23:45, 25:35, 26:13, 28:34 வசனங்கள் கூறுகின்றன.
இன்னொரு சமுதாயத்திற்கு ஒரே நேரத்தில் மூன்று தூதர்கள் அனுப்பப்பட்டதாக 36:13 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
இவ்விரு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று கருதக் கூடாது. ஏனெனில் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தூதர்கள் அனுப்பப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரு வேதமும், ஒரு வழிகாட்டுநெறியும் தான் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வேதங்களோ, வழிகாட்டுநெறியோ வழங்கப்படாது. எனவே ஒரு நேரத்தில் பல தூதர்கள் அனுப்பப்பட்டாலும் தூதுச் செய்தியைப் பொறுத்த வரை அவர்கள் அனைவரும் ஒரு தூதரின் நிலையில் தான் உள்ளனர். இப்படி புரிந்து கொண்டால் எந்த முரண்பாடும் இல்லை என்று விளங்கலாம்.