இந்த வசனங்களில் (6:47, 46:35) அல்லாஹ்வின் தண்டனை வரும்போது அநியாயக்காரர்களைத் தவிர மற்றவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்று கூறப்படுகிறது.
அதாவது அல்லாஹ்வின் தண்டனை வரும்போது கெட்டவர்கள் மட்டும்தான் தண்டிக்கப்படுவார்கள். நல்லவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று இவ்வசனம் கூறுவதாகத் தெரிகிறது.
ஆனால் புயல், மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற துன்பங்கள் நேரும்போது, அந்தத் துன்பங்களில் தீயவர்கள் மாத்திரமின்றி நல்லவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அப்படியானால் இந்த வசனங்கள் நடைமுறை நிகழ்வுகளுக்கு எதிராக இருக்கிறதே என்று சிலருக்குத் தோன்றலாம்.
இந்த இரு வசனங்களும் பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்கள், சோதனைகள் பற்றி பேசவில்லை. மாறாக இறைத்தூதர்கள் அனுப்பப்படும் பொழுது அந்த இறைத்தூதர்களை எதிர்த்த சமுதாயத்திற்கு வேதனை வருமானால் நல்லவர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து விட்டு தீயவர்களை மாத்திரம் தான் அல்லாஹ் அழித்திருக்கிறான். அதைத்தான் இவ்வசனங்கள் சொல்கின்றன.
திருக்குர்ஆன் 46:35 வசனத்தில் இதைத் தெளிவாகவே அல்லாஹ் சொல்கின்றான்.
“தூதர்களில் உறுதிமிக்கவர்கள் பொறுமையை மேற்கொண்டது போல் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! அவசரப்படாதீர்!” என்று சொல்லி விட்டு “அழிவு வரும்போது பாவிகள் மாத்திரமே அழிக்கப்படுவார்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
இப்படித்தான் நூஹு நபி, லூத் நபி, ஹூத் நபி, ஸாலிஹ் நபி, மூஸா நபி போன்ற நபிமார்களின் சமுதாயத்தவரில் தீயவர்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டு நல்லவர்கள் மட்டும் காப்பாற்றப்பட்டனர்.
நபிமார்கள் இல்லாதபோது வரும் சோதனைகள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல்தான் வந்தடையும். அதற்கும், இந்த வசனத்திற்கும் சம்மந்தம் இல்லை.