இவ்வசனத்தில் (86:11) வானத்திற்கு திருப்பித் தரும் வானம் என்ற ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
வானம் எதைத் திருப்பித் தரும் என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.
கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக நமக்கு வானம் திருப்பித் தருகிறது. இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது.
வானம் திருப்பித் தருகின்ற தன்மை பெற்றிருக்கின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.
மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு திரும்பவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.
இன்றைக்கு செயற்கைக் கோள் மூலம் ஒளிபரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன.
மேலும் பூமிக்குத் தேவையான வெப்பத்தை பூமி சூரியனிலிருந்து எடுத்துக் கொள்கிறது. வருகின்ற வெப்பத்தையெல்லாம் பூமி தன்னகத்தே எடுத்துக் கொண்டால் பூமியில் தாங்க முடியாத வெப்பம் ஏற்பட்டுவிடும். எனவே பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை எடுத்துக் கொண்டு மீதியை வானத்துக்கு அனுப்பி விடுகிறது. இவ்வாறு வானுக்கு அனுப்பப்ட்ட வெப்பத்தை வானம் சிதறடித்து விடாமல் தன்னகத்தே பாதுகாத்து வைத்துக் கொள்கிறது. பூமியின் தேவையை விட வெப்பம் குறையும்போது, பூமியிடமிருந்து பெற்று சேமித்து வைத்திருந்த வெப்பத்தை வானம், பூமிக்கே திருப்பித் தருகிறது. இதனால் பூமியில் மனிதன் வாழத்தக்க அளவு வெப்பம் நிரந்தரமாக பராமரிக்கப்படுகிறது. வெப்பத்தைத் திருப்பித் தருவதாலும் திருப்பித் தரும் வானம் என்பது பொருத்தமாக அமைந்து விடுகிறது.
மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கிறான். இன்னும் நாம் சிந்திக்கும்போது ஏராளமான விஷயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம்.
திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்வார்களா?
இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது சொல்கிறார் என்றால், நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது; படைத்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்.