அறியப்பட்ட மாதங்களில் ஹஜ் செய்ய வேண்டும் என்று இவ்வசனம் (2:197) கூறுகிறது.

துல்ஹஜ் எனும் ஒரு மாதத்தில் தான் நாம் ஹஜ் செய்கிறோம். ஆனால் மாதங்கள் என்று இவ்வசனத்தில் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது.

அரபு மொழியில் இரண்டைக் குறிக்க இருமை என்ற அமைப்பு உள்ளதால் பன்மையாகக் கூறப்பட்டால் குறைந்தது மூன்று இருக்க வேண்டும். ஹஜ்ஜின் மாதங்கள் குறைந்தது மூன்று மாதங்களாக இருக்கலாம். அல்லது அதைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

இதை எப்படி நாம் விளங்கிக் கொள்வது? மூன்று மாதங்கள் என்று விளங்கிக் கொள்வதா? அதைவிட அதிகம் என்று விளங்கிக் கொள்வதா? அவை யாவை என்பதை எப்படி அறிந்து கொள்வது? 

என்ற கேள்விகள் எழுகின்றன.

இது குறித்து குர்ஆனில் கூறப்படவில்லை. ஆனாலும் அறியப்பட்ட மாதங்கள் என்ற சொல்லில் இருந்து இதற்கான விளக்கத்தை எப்படிப் பெற வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களும் அதை அறிந்து வைத்து இருந்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அவர்கள் அறிந்து வைத்து இருப்பது தான் தன்னிடமும் ஹஜ் மாதங்கள் என்று அல்லாஹ் அங்கீகரிக்கிறான் என்பதும் இச்சொல்லிலிருந்து தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அந்தக் காலத்து மக்களும் எதை ஹஜ்ஜின் மாதங்களாக அறிந்து வைத்திருந்தனர் என்பதை அன்றைய காலத்தில் வாழ்ந்தவர்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஷவ்வால், துல்கஅதா ஆகிய மாதங்களும், துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களும் தான் ஹஜ்ஜுடைய அறியப்பட்ட மாதங்கள்.

நூல் : ஹாகிம்

பொதுவாக துல்ஹஜ் மாதத்தில் தான் ஹஜ் செய்வார்கள். ஹஜ்ஜின் எல்லா கிரியைகளும் துல்ஹஜ் மாதத்தில் தான் உள்ளன. அப்படி இருக்கும்போது ஷவ்வால், துல்கஅதா ஆகிய மாதங்களையும் ஹஜ் மாதங்கள் என்று எப்படி அவர்கள் அறிந்து வைத்து இருக்க முடியும்? என்ற சந்தேகம் எழலாம்.

56வது விளக்கத்தில் ஹஜ்ஜின் மூன்று வகை என்ற தலைப்பில் தமத்துவ் என்ற ஹஜ் முறை பற்றி விளக்கியுள்ளோம்.

தமத்துவ் வகை ஹஜ் செய்பவர்கள் ஷவ்வால் மாதமே இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்றி விட்டு ஹரம் எல்லைக்குள் தங்கிக் கொண்டு, துல்ஹஜ் மாதம் வந்ததும் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள். இவர்களுக்கு மூன்று மாதங்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகின்றன. இந்த அடிப்படையில் தான் ஷவ்வால், துல்கஅதா மாதங்களும் ஹஜ்ஜின் மாதங்களாகின்றன.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *