நாணயம் மாற்றும் முறை என்றால் என்ன?
ஒரு நாணயத்துக்குப் பகரமாக இன்னொரு நாட்டு நாணயத்தை மாற்றும் போது எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கும். பத்து சவூதி ரியாலுக்கு நூறு இந்திய ரூபாய் என்று மாற்றினால் பத்துக்கு பதிலாக நூறு வாங்கியது போல் உள்ளது.
இந்த ஏற்றத் தாழ்வு நாணயங்களுடைய மதிப்பு வேறுபாட்டினால் வந்ததா? வட்டி என்ற அடிப்படையில் வந்ததா என்று உறுதி செய்ய வேண்டும்.
இன்று பத்து ரியால் தருகிறேன்; அடுத்த மாதம் நூறு ரூபாய் கொடு என்று சொன்னால் கடனாகக் கொடுப்பதால் இந்த வேறுபாடு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அப்படியானால் அது வட்டியாகி விடும்.
ஆனால் இப்போது பத்து ரியாலைக் கொடுத்து விட்டு இப்போதே நூறு ரூபாயை வங்கினால் நாணய மதிப்பில் உள்ள வித்தியாசம் தான் காரணம் என்று உறுதியாகின்றது.
அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
நான் நாணயமாற்று வியாபாரம் செய்துவந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் பின் அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்: அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம்; அதற்கு உடனுக்குடன் மாற்றிக் கொண்டால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது என அவர்கள் பதிலளித்தார்கள் என்றார்கள்.
நூல் : புகாரி 2061, 2498, 3940