நேர்ச்சையின் பரிகாரம் என்ன?
நாம் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாவிட்டால் மார்க்கம் அதற்குரிய பரிகாரத்தை கற்றுத் தந்துள்ளது. நேர்ச்சையை நிறைவேற்றாதவர்கள் இதைத் தான் கடைபிடிக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதாக இறைவனிடம் வாக்களித்து விட்டு வேறு காரியத்தை செய்தால் நமது வாக்குறுதியை நிறைவேற்றியவர்களாக மாட்டோம். இதுவும் நேர்ச்சையை முறிக்கும் செயலாகும். எனவே இதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.
சத்தியத்தை முறித்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதே பரிகாரத்தை நேர்ச்சையை முறித்தாலும் செய்ய வேண்டும்.
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான்.
மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு
நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது,
அல்லது அவர்களுக்கு உடையளிப்பது,
அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே.
(இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.
அல்குர்ஆன் (5 : 89)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சத்திய முறிவுக்கான பரிகாரமே நேர்ச்சை முறிவுக்கான பரிகாரமாகும்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (3379)
நேர்ச்சையை முறித்தவர்கள் பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு உடையளிக்க வேண்டும். இதற்கு இயலாவிட்டால் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.
இது அல்லாத வேறு நல்ல காரியங்களைச் செய்தால் அது இதற்குரிய பரிகாரமாகாது. செய்த நேர்ச்சையை நிறைவேற்றினாயா? அல்லது அதை முறித்ததற்குரிய பரிகாரத்தைச் செய்தாயா? என்று தான் அவனுடைய கேள்வி இருக்கும்.