யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன?
தனிச்சிறப்பு எதுவும் கூறப்படவில்லை
திருக்குர் ஆனில் உள்ள 114 அத்தியாயங்களில் யாஸீன் என்பதும் ஒரு அத்தியாயம் என்பதால் திருக்குர்ஆனுக்கு உள்ள எல்லா சிறப்புகளும் இந்த அத்தியாயத்துக்கும் உண்டு.
சில அத்தியாயங்களின் கூடுதல் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளனர். அது போல் யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு பற்றியும் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல.
யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு பற்றி பரவலாக பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.
ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர் ஆனின் இதயம் யாஸீன் ஆகும். யார் அதை ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை குர்ஆன் ஓதிய நன்மையைப் பதிவு செய்கிறான் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் திர்மிதி 2812
இந்த ஹதீஸ் அபூமுஹம்மத் எனும் ஹாரூன் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் யார் என்று அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான ஹதீஸ் என்று திர்மிதி இமாம் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.
இது போல் யாஸீன் அத்தியாயத்தின் தனிச்சிறப்பு பற்றிய எல்லா ஹதீஸ்களும் பலவீனமானவையாகவே உள்ளன.