கொரோனா நோயின் காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு நிற்கலாமா❓
கொரோனா நோய் பரவலால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகி வருகின்றன.
பொருளாதார நெருக்கடி, வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் ஏற்படும் மன அழுத்த பிரச்சனைகள், நோய்க்கு எதிராக அரசு தன்னாலான தடுப்பு நடவடிக்கைகளை முயற்சித்து வந்தாலும் நோயின் தாக்கம் பெருமளவு குறையாதது என பல சிக்கல்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன.
இவற்றுக்கிடையில் கொரோனா நோயின் தாக்கம் சமகாலத்தில் மார்க்க ரீதியாகவும் பல புதிய நிலைகளுக்கு தீர்வு காணும் அவசியத்தை ஏற்படுத்துகிறது.
வீட்டில் ஜூமுஆ தொழுவது குறித்த விஷயத்தை இதற்கு உதாரணமாக கூறலாம்.
தற்போது சவூதி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை ஓரளவு தளர்த்தி உள்ளார்கள். அதே நேரம் நோயின் தாக்கமும் முழுமையாக குறையவில்லை.
முன்பு அறவே பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை நடைபெறாதிருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட பள்ளிகளில் அதிக கூட்டமில்லாமல் கூட்டுத் தொழுகை நிறைவேற்றி வருகின்றனர்.
ஆனால் நோயின் தாக்கம் முழுமையாக குறையாத காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு சமூக விலகலை கடைபிடித்து தொழுக வேண்டும் என்று கூறி அதை நடைமுறைப்படுத்துகின்றனர்.
அவ்வாறான தொழுகை நடைபெறும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதால் இது மார்க்கத்தின் அடிப்படையில் சரியா? இவ்வாறு இடைவெளி விட்டு ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா? என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர்.
அப்படி தொழுவோர் இரண்டு விதத்தில் தவறிழைக்கின்றார்கள்.
சிரமத்தை மார்க்கம் விரும்பவில்லை
வணக்க வழிபாட்டின் பெயரால் நம்மை நாமே வருத்திக் கொள்ள மார்க்கம் அனுமதிக்கவில்லை.
பயணத்தில் நோன்பு நோற்பதிலிருந்து சலுகை வழங்கப்படுவதும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நேரத்தில் தயம்மும் செய்ய அனுமதி வழங்கப்படுவதும் வணக்கத்தின் பெயரால் சிரமம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கருத்தை உறுதிப்படுத்துகின்றன.
வணக்க வழிபாட்டின் பெயரால் சிரமத்தை நமக்கு நாமே தேடிக் கொள்ளக் கூடாது என்ற கருத்தை பின்வரும் நபிமொழியும் கூறுகின்றன.
‘நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி)
புகாரி – 39.
அல்லாஹ் எளிதையே நாடுவதாக திருக்குர்ஆனும் கூறுகின்றது.
இம்மார்க்கத்தில் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை.
(அல்குர்ஆன் 22 : 78)
அல்லாஹ் உங்களுக்கு எளிதையே நாடுகிறான். அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை.
(அல்குர்ஆன் 2 : 185)
வெளியில் சுற்றி திரிவதும் கூட்டாக ஒரு இடத்தில் ஒன்று கூடுவதும் கொரோனா நோய் பரவ காரணமாக அமைந்து விடுகின்றது என்ற அடிப்படையிலேயே பள்ளியில் ஜமாஅத் தொழுகை நடத்தாமல் வீடுகளில் தொழுகை நடத்தி வருகிறோம்.
(அரபு நாடுகளிலும் இவ்வாறே கூறிவருகிறார்கள்.)
இன்று வரை நோய் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை. கூட்டாக சேர்ந்து தொழுவதில் நோய் தாக்கும் அபாயம் இன்றளவும் இருக்கவே செய்கிறது. அந்த அச்சம் இன்னும் விலகவில்லை.
அத்தகைய அச்சம் பூரணமாக விலகாத நிலையிலும் கூட்டமாக ஒன்று திரண்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று சொல்லப்படும் போதும் அதை அலட்சியம் செய்து பள்ளிக்கு வர வேண்டும் என்பதில்லை.
வணக்க வழிபாட்டினை நிறைவேற்றுவதில் சிரமம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
நோய் பரவும் அச்சம் முழுமையாக விலகும் வரை வீடுகளிலேயே தொழ மார்க்கத்தில் அனுமதி உண்டு எனும் போது அதை பயன்படுத்துவதில் எவ்வித தவறுமில்லை.
ஆனால் தற்போது சவூதி உள்ளிட்ட நாடுகளில் செய்யப்படும் இச்செயல் எப்படியாவது பள்ளியில் தொழ வேண்டும் என்று முனைப்பு காட்டி சிரமத்தை வரவழைத்துக் கொள்வதாக அமைந்திருக்கின்றது.
ஒன்று கூடினால் நோய் பரவும் வாய்ப்பு உண்டு என்று கூறிக்கொண்டே தொழுகையில் ஒன்று கூடுவோம் என்று சொல்வது இவர்கள் செய்யும் முதல் தவறாகும்.
அடுத்து அவ்வாறு வந்த பிறகு ஸஃப்பில் நாங்கள் இடைவெளி விட்டு நிற்போம் என்பதும் ஏற்புடையதாக இல்லை.
இடைவெளி விட்டு நிற்பது பொதுவான வணிக வளாகங்களுக்கும் கடைவீதிகளுக்கும் வேண்டுமானால் பொருந்திப் போகலாம்.
தொழுகை எனும் வணக்க வழிபாட்டில் இது சரியான முறையாக தெரியவில்லை.
தொழுயை நிறைவேற்றுவதில் ஸஃப்புக்கு என்று சொல்லப்பட்ட முறையை சரியாக பேணுவது அவசியமானதாகும். அந்த முறையை சீர்குலைப்பது சரியான செயலல்ல.
ஏனெனில் கூட்டாக நிறைவேற்றப்படும் தொழுகையில் ஸஃப்பின் ஒழுங்கு முறை சரியாக பேணப்பட வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது.
வரிசையை நேராக்குங்கள்! ஏனெனில் வரிசைகளை நேராக்குவது தொழுகையை நிலை நாட்டுதலில் உள்ளதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரி (723), முஸ்லிம் (741)
உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்கள்: புகாரி (717), முஸ்லிம் (744)
ஸஃப்பில் இடைவெளி விடப்படும் போது அதில் ஷைத்தான் நுழைகிறான் என்று நபிகள் நாயகம் கண்டிக்கின்றார்கள். (நஸாயீ (806)
பின்வரும் நபிமொழி ஸஃப்பில் இடைவெளி விட்டு தொழுபவரின் தொழுகை செல்லாது எனுமளவு கண்டனத்தை பதிவு செய்கிறது.
مسند أحمد ط الرسالة (29/ 532)
18004 – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ شِمْرِ بْنِ عَطِيَّةَ، عَنْ هِلَالِ بْنِ يِسَافٍ، عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ، قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَجُلٍ صَلَّى خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ، فَقَالَ: ” يُعِيدُ الصَّلَاةَ “
வரிசைகளுக்குப் பின்னால் (இடைவெளியை நிரப்பாமல்) தனியாகத் தொழுத ஒரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் தொழுகையை மீண்டும் தொழுவார் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : வாபிஸா (ரலி)
நூல் : அஹ்மத் 18004
இந்த அளவு வலிமையாக சொல்லப்பட்ட ஸஃப்பின் ஒழுங்கை சரியாக பேணாமல் ஆங்காங்கே இடைவெளி விட்டு தொழுவது இன்னொரு பிழையாகும். இச்செயல் ஸஃப்புக்கென்று சொல்லப்பட்ட முறையை மாற்றுவதை போல அமைந்துள்ளது.
நோயின் காரணத்தினால் தான் இவ்வாறு செய்யப்படுகிறது என்று கூறி இதை நியாயப்படுத்துவதும் சரியல்ல.
நோயின் காரணத்தினால் மார்க்கம் என்ன சலுகையை வழங்குகின்றதோ அதை அப்படியே அதன் வடிவம் மாற்றாமல் பயன்படுத்துவதில் தவறில்லை.
ஒரு நோயாளி நான்கு ரக்அத் தொழுகையை நின்று தொழ முடியாது என்று சொல்லும் போது அவர் அமர்ந்து தொழ மார்க்கத்தில் அனுமதி உண்டு.
அதுவே நான் நோயாளி எனவே நான்கு ரக்அத்தை இரண்டாக சுருக்கி தொழுது கொள்கிறேன் என்று சொன்னால் அதை சரிகாண இயலுமா?
உட்கார்ந்து தொழ முடியாத போது படுத்துக் கொண்டு கூட தொழலாம். ஆனால் நோயின் காரணத்தால் நான்கு என்ற எண்ணிக்கையை இரண்டாக சுருக்குவது யாருக்கும் தகாது.
ஒரு நோயாளி ரமலான் நோன்பை வேறு நாள்களில் வைத்துக் கொள்ள அனுமதி உண்டு.
ஒருவர் என்னால் சுமார் 6 மணி நேரம் தாக்குப்பிடிக்க முடியும். அதற்கு மேல் முடியாது. அதனால் காலை முதல் பகல் வரை நோன்பு நோற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால் அதை தவறு என்போம்.
எவை எவற்றை எவ்விதத்தில் சலுகையை பயன்படுத்திக் கொள்ள மார்க்கம் அனுமதி வழங்கியதோ அப்படி தான் சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதுவன்றி நோய் என்பதை காரணம் காட்டி வணக்க வழிபாட்டை நம் விருப்பத்திற்கு தகுந்தாற்போல செய்ய முடியாது.
தொழுகையின் ஸஃப் விஷயமும் அவ்வாறு தான்.
பள்ளியில் வரிசைமுறையை பேணி கூட்டாக தொழுவது அல்லது வீடுகளில் தொழுவது ஆகிய இரண்டு விஷயங்கள் உள்ளது.
இவ்விரண்டில் ஒன்று நோயை காரணம் காட்டி ஜமாஅத் தொழுகைக்கு வராமல் வீடுகளில் தொழலாம். இல்லை என்றால் பள்ளியில் ஸஃப்பை பேணி ஜமாஅத்தாக தொழலாம்.
இரண்டும் இல்லாம் பள்ளியில் ஆங்காங்கே நின்று கொண்டு ஸஃப்பின் முறையை மாற்றி தொழுவது என்பது தவறானதாகவே தோன்றுகிறது.
ஒரு புறம் கொரோனா நோய் பரவுகிறது என்று கூறிக் கொண்டு இன்னொரு புறம் பள்ளியில் இடைவெளி விட்டு ஜமாஅத்தாக தொழுது கொள்ளலாம் என்கிறார்கள்.
நோய் பரவுகிறது என்றால் பள்ளிக்கு வர வேண்டும் என்பதில்லை. வீடுகளில் தொழுது கொள்ளலாம். பள்ளியில் ஜமாஅத்தாக தொழுவது என்றால் ஸஃப்பின் ஒழுங்குமுறையை சரியாக கடைபிடித்து தொழ வேண்டும்.
இரண்டும் இல்லாமல் ஸஃப்பில் இடைவெளி விட்டு தொழுவது என்பது மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாக தெரியவில்லை.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்
http://www.onlinetntj.com/articles/corona-disease-distancing-in-prayer