ஸலாத்துந் நாரிய்யா 4444 தடவை ஓதினால் நினைத்தது நடக்குமா?
இல்லை. இது பித்அத்.
ஸலாத்துந் நாரிய்யா என்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத் அல்ல. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லுமாறு இறைக் கட்டளை இறங்கியவுடன் நபித்தோழர்கள் தாங்களாக இது போன்ற ஸலவாத்துக்களை உருவாக்கிக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களிடம் சென்று ஸலாவத்தைக் கற்றுத் தருமாறு கேட்டதை நாம் ஹதீஸ்களில் காண முடிகின்றது.
நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி),
நூல் : புகாரி 4797, 6357
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத் ஓதுவதன் சிறப்பு பற்றி பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் எந்த ஹதீஸிலும் 4444 என்ற எண்ணிக்கையோ, அல்லது நினைத்தது நடக்கும் என்றோ கூறப்படவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத ஸலாத்துந் நாரிய்யாவை ஓதினால் அதில் எந்த நன்மையும் ஏற்படாது. அல்லாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ கற்றுத் தராத ஒரு செயலைச் செய்தால் நன்மை கிடைக்காது என்பது மட்டுமன்றி, அதற்குத் தீமையும் வழங்கப்பட்டு அது நரகத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றது.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: நஸயீ (1560)